Published:Updated:

தள்ளாடும் காங்கிரஸ் கப்பல்... கேப்டன் பொறுப்பை ஏற்பாரா ராகுல்?

ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி

மக்களை நேரடியாகச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நடைப்பயணங்கள், அதிகாரத்தைப் பிடிக்க பல தலைவர்களுக்கு உதவியிருக்கின்றன.

தள்ளாடும் காங்கிரஸ் கப்பல்... கேப்டன் பொறுப்பை ஏற்பாரா ராகுல்?

மக்களை நேரடியாகச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நடைப்பயணங்கள், அதிகாரத்தைப் பிடிக்க பல தலைவர்களுக்கு உதவியிருக்கின்றன.

Published:Updated:
ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக மோடியைப் பிரதமராக்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன் வேலை செய்கிறது பா.ஜ.க. இந்தச் சூழலில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை நடைப்பயணம் தொடங்குவதுடன், கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலையும் அறிவித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

தலைவர் தேர்தல்

137 ஆண்டுக்கால வரலாறுகொண்ட காங்கிரஸ் கட்சி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், காங்கிரஸிலிருந்து முக்கியத் தலைவர்கள் சிலர் அடுத்தடுத்து விலகியிருக்கிறார்கள். சமீபத்தில் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் விலகியதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட 60-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் வெளியேறியிருக்கிறார்கள். இதற்கு முன்பாக, முன்னாள் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், அஷ்வானி குமார், ஜோதிராதித்யா சிந்தியா, பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் உட்பட பல முன்னணித் தலைவர்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்கள். குஜராத் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் சூழலில், அங்கு பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினரிடையே செல்வாக்கு பெற்றவரான ஹர்த்திக் படேல் காங்கிரஸிலிருந்து விலகி, பா.ஜ.க-வில் இணைந்து விட்டார். இவர்கள் அனைவருமே காங்கிரஸின் தலைமைமீது, குறிப்பாக ராகுல் காந்திமீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, ‘முதிர்ச்சியற்ற’, ‘குழந்தைத்தனமான’ என்ற சொற்களால் ராகுல் காந்தியை வறுத்தெடுத் திருக்கிறார் குலாம் நபி ஆசாத்.

தள்ளாடும் காங்கிரஸ் கப்பல்... கேப்டன் பொறுப்பை ஏற்பாரா ராகுல்?

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்வுசெய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 17-ம் தேதி புதிய தலைவர் தேர்வு செய்யப்படவிருக் கிறார். அதற்கு முன்பு, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நீண்ட நடைப்பயணத்துக்கு காங்கிரஸ் தயாராகிவருகிறது. ராகுல் காந்தி தலைமையில் செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கும் இந்த நடைப்பயணம் 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாள்கள் சுமார் 3,500 கி.மீ தூரத்துக்கு மேற்கொள்ளப்பட விருக்கிறது. கன்னியாகுமரியில் நடைபெறும் நடைப்பயணத் தொடக்க நிகழ்ச்சியில், ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்க விருக்கிறார்.

நடைப்பயண வரலாறு

மக்களை நேரடியாகச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நடைப்பயணங்கள், அதிகாரத்தைப் பிடிக்க பல தலைவர்களுக்கு உதவியிருக்கின்றன. ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சந்திரசேகர், 1983-ம் ஆண்டு கன்னியாகுமரியிலிருந்து டெல்லி ராஜ்காட் வரை 4,000 கி.மீ நடைப்பயணத்தை மேற்கொண் டார். 1990-ல் அவர் பிரதமரானார். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, 2003-ம் ஆண்டு 1,500 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றார். 2004 சட்டமன்றத் தேர்தலில் வென்று அவர் ஆந்திர முதல்வரானார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு 2012-ம் ஆண்டு 2,800 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றார். 2014 சட்டமன்றத் தேர்தலில் வென்று அவர் ஆந்திர முதல்வரானார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி 2017-ம் ஆண்டு 3,648 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றார். அவர், 341 நாள்கள் நடைப்பயணத்துக்குப் பிறகு, 2019-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆந்திரா வின் முதல்வரானார். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், 2017-ம் ஆண்டு 3,300 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றார். அடுத்து நடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.

தற்போது, ராகுல் காந்தியும் ஒரு நடைப் பயணத்தைத் தொடங்குகிறார். நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், இந்த நடைப்பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. `இதன் வாயிலாக, பா.ஜ.க ஆட்சியில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடிகள் போன்ற பிரச்னைகளை மக்களிடம் நேரடியாக எடுத்துரைப்போம்’ என்று காங்கிரஸார் கூறுகிறார்கள்.

கேப்டன் ஆவாரா?

இதெல்லாம் சரிதான். தட்டுத்தடுமாறிச் சென்றுகொண்டிருக்கும் காங்கிரஸ் என்ற கப்பலுக்கு, உடனடித் தேவை ஒரு சிறந்த கேப்டன். ராகுல் காந்திக்கோ, கேப்டன் நாற்காலியைக் கண்டால் அலர்ஜியாக இருக்கிறது. தலைவர் பதவியில் அமர ராகுல் காந்திக்கு விருப்பமில்லை என்ற நிலையில், ‘காந்தி’ குடும்பத்தின் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு முன்னிறுத் தப்பட வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், தலைவர் பதவியைப் பிடிக்கத் தயாராகிவருகிறார்.

நேரு குடும்பம்தான் காங்கிரஸ் கட்சியின் பலவீனம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும், அதுவே அந்தக் கட்சிக்குப் பலமாகவும், அந்தக் கட்சியின் முற்போக்கு முகமாகவும் இருப்பதை மறுக்க முடியாது.

தள்ளாடும் காங்கிரஸ் கப்பல்... கேப்டன் பொறுப்பை ஏற்பாரா ராகுல்?

1998-ம் ஆண்டு, காங்கிரஸ் தலைவராக சீதாராம் கேசரி இருந்தபோது, கட்சி பலவீனமாக இருந்தது. காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வந்தால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்த காங்கிரஸார், சீதாராம் கேசரியை அனுப்பிவிட்டு, சோனியா காந்தியைத் தலைவராக்கினர். அதன் பிறகு, பத்தாண்டுக் காலம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிபுரிந்தது. தற்போது, மீண்டும் ஒரு மோசமான சூழலை காங்கிரஸ் சந்தித்துவருகிறது. காங்கிரஸை அழிக்க வேண்டும் என்று பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினரில் பலர் வலியுறுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க., தி.க உள்ளிட்டவையும் அதையே சொல்கின்றன.

தொண்டர்கள், கூட்டணிக் கட்சிகளின் உணர்வைப் புரிந்துகொள்வாரா ராகுல் காந்தி?