Published:Updated:

`ஜீரோ கண்டிஷன்; சொல்லுங்க, நான் எப்ப வரட்டும்?’- தொடரும் ராகுல்- காஷ்மீர் ஆளுநர் மோதல்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்கும் தொடர்ச்சியாக காஷ்மீர் விவகாரத்தில் மோதிக்கொள்வது அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தீர்மானம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் முன்பே ஜம்மு - காஷ்மீர் பகுதி முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

மோடி
மோடி

தற்போது 144 தடைச் சட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருவதாகவும் நிலைமை சீராகி வருவதாகவும் ஆளுநர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், காஷ்மீர் பகுதிகளில் ஆர்ட்டிகிள் 370 நீக்கப்பட்டதற்குப் போராட்டங்கள் நடைபெறுவதாகவும், அதை கலைக்க அரசு துப்பாக்கியைப் பயன்படுத்துவதாகவும் சில ஊடகங்கள் வீடியோக்கள் வெளியிட்டன.

ஆனால், சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது முதல் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம்கூட நடைபெறவில்லை என காஷ்மீர் போலீஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ``காஷ்மீரில் இருந்துவரும் தகவல்கள் கவலை அளிக்கிறது. பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தார்.

காஷ்மீர்
காஷ்மீர்
Representational Image

இதற்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக், ``நான் ராகுல் காந்தியை இங்கு வரவேற்கிறேன். உங்களுக்குத் தனியாக விமானம்கூட அனுப்புகிறேன். இங்கு வாருங்கள். இங்கு நடக்கும் விஷயங்களைப் பார்த்து, அதன் பின்னர் பேசுங்கள். நீங்கள் பொறுப்புள்ள மனிதராக நடந்துகொள்ள வேண்டும். அதை விடுத்து சும்மா குற்றம்சாட்டக் கூடாது” என பதிலடி கொடுத்தார்.

இவரது பதிலடிக்கு ட்விட்டர் மூலம் பதிலளித்த ராகுல் காந்தி, ``அன்புள்ள ஆளுநர் மாலிக், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளைப் பார்வையிடுவதற்கான உங்களுடைய அழைப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்களுக்குத் தனி விமானங்கள் தேவையில்லை. ஆனால், அங்கு பயணித்து அந்த மாநில மக்களையும், முக்கியத் தலைவர்கள் மற்றும் வீரர்களையும் சந்திப்பதற்கான சுதந்தரத்தை உறுதிசெய்யுங்கள்' என்று கூறியிருந்தார்.

காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்
காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்

இந்தச் சூழ்நிலையில் ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ``ராகுல் காந்தி இந்த விவகாரத்தை அரசியலாக்குவதுடன் பொதுமக்களிடையே மேலும் பிரச்னைகளையும் அமைதியின்மையையும் ஏற்படுத்துகிறார். மேலும், அவர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைப்பதால் இந்த விவகாரத்தை உள்ளூர் காவல்துறைக்கு அனுப்புகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கும் ட்விட்டரில் பதிலளித்துள்ள ராகுல் காந்தி, ``அன்புள்ள மாலிக், என்னுடைய கோரிக்கைக்கு உங்களின் பலவீனமான பதிலைக் கண்டேன். ஜம்மு - காஷ்மீர் மக்களை சந்திக்கும்படி நீங்கள் விடுத்த அழைப்பை நான் எந்த நிபந்தனையும் இன்றி ஏற்றுக்கொள்கிறேன். நான் எப்போது வரலாம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்கும் தொடர்ச்சியாக காஷ்மீர் விவகாரத்தில் மோதிக்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பரபரப்புகளுக்கு மத்தியில் நாளை சுதந்தர தினமும் கொண்டாடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.