Election bannerElection banner
Published:Updated:

`உங்களை விமர்சிக்க அஞ்சுகிறார்கள்!' - அமித் ஷா முன் பொங்கிய ராகுல் பஜாஜ்

தொழிலதிபர் ராகுல் பஜாஜ்
தொழிலதிபர் ராகுல் பஜாஜ் ( vikatan )

குறைகளை விமர்சிக்கும் தைரியம் யாருக்கும் இல்லை. தொழிலதிபர்களில் சிலர் அரசாங்கம் தங்கள்மீது நடவடிக்கை எடுக்குமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள்.

மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட எக்னாமிக் டைம்ஸ் நாளிதழின் விருது வழங்கும் விழா ஒன்று மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜ், "தற்போதுள்ள அரசை விமர்சித்தால் அதை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற பயம் இருக்கிறது. அதனால் விமர்சிக்கத் தயங்குகிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது அரசின்போது யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எங்களால் விமர்சிக்க முடியும். ஆனால், தற்போது அத்தகைய சூழல் இல்லை. நீங்கள் நன்றாகவே ஆட்சி செய்கிறீர்கள். ஆனால், உங்களை விமர்சிப்பதை எப்படி எடுத்துக்கொள்வீர்களோ என்ற அச்ச உணர்வு எங்களுக்கு ஏற்படுகிறது.

தொழிலதிபர் ராகுல் பஜாஜ்
தொழிலதிபர் ராகுல் பஜாஜ்
vikatan

மத்திய அரசு தற்போது நன்றாகத்தான் செயல்படுகிறது. எனினும், அதன் குறைகளை விமர்சிக்கும் தைரியம் யாருக்கும் இல்லை. தொழிலதிபர்களில் சிலர் அரசாங்கம் தங்கள்மீது நடவடிக்கை எடுக்குமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள். மத்திய அரசு வெளிப்படையாக நடந்துகொண்டு, விமர்சனத்தின் உண்மைத்தன்மைக்கேற்ப தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். நாட்டில் நடைபெறும் கும்பல் கொலைகள் சகிப்பின்மை சூழலை உருவாக்குவதால் எங்களுக்கு அச்சமாக உள்ளது. சில விஷயங்களைப் பேச விரும்பவில்லை. கும்பல் கொலைகளில் தொடர்புடைய யாரும் தண்டிக்கப்படவில்லை" என்று வெளிப்படையாக மத்திய அரசின்மீது விமர்சனம் வைத்தார்.

இவர் தனது பேச்சில், கோட்சேவை தேசபக்தனாக பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட பிரக்யா சிங் குறித்தும் குறிப்பிட்டார். "காந்தியை யார் சுட்டதென்று உங்கள் அனைவருக்குமே தெரியும். அதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால், இப்போது மட்டுமல்ல, முன்பே காந்தியை சுட்டுக்கொன்றவரை அவர் துதி பாடியிருக்கிறார். ஆனால், அவருக்கு தேர்தலில் நிற்க நீங்கள் வாய்ப்பளித்தீர்கள். யாரென்றே தெரியாத அவரை வெற்றிபெறச் செய்தீர்கள். அவரை மன்னிப்பது கடினம் என்று பிரதமர் கூறினாலும், அவருக்கு வாய்ப்பளித்துக்கொண்டே இருக்கிறார்" என்றும் குற்றம்சாட்டினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா
vikatan
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை டிவிஎஸ், பஜாஜ், ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தவிர்த்தது ஏன்? #AutoExpo2020

அவரது குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நீங்கள் கேள்வி எழுப்பியதிலிருந்தே யாரும் அச்ச உணர்வோடு இல்லையென்பதை உறுதியாகக் கூற முடியும். நாடாளுமன்றத்தில் பிரக்யாவின் கருத்துகளை பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். அத்தகைய கருத்துகளை பா.ஜ.க ஏற்றுக்கொள்ளாது. கும்பல் கொலைச் சம்பவங்கள் முன்பும் நடந்திருக்கின்றன. தற்போது குறைந்துள்ளன. அவற்றில் ஈடுபட்டவர்களைத் தண்டித்துள்ளோம். ஆனால், அவை ஊடகங்களில் வருவதில்லை. இங்கு யாரும் பயப்படத்தேவையில்லை. நரேந்திர மோடி குறித்தும் எங்களுக்கு எதிராகவும் நிறைய விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. நீங்கள் கூறியதைப்போல உருவாக்கப்பட்டுள்ள அச்சம் நிறைந்த சூழலைப்போக்க, மேம்படுத்த முயற்சி எடுப்போம். யாரும் அச்சப்படத் தேவையில்லை. வெளிப்படையாகவே செயல்பட்டு வருகிறோம்" என்றார்.

ராகுல் பஜாஜின் பேச்சுக்கு, "சொந்த கருத்தைப் பரப்புவதற்கு முன் அதற்கான காரணம் என்னவென்று ஆராய்வது நல்லது!" என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்தார்.

ராகுல் பஜாஜ், வெளிப்படையாகப் பேசக்கூடிய ஒருவர். இதற்கு முன்பே ஒருமுறை மோடி அரசை விமர்சிக்கும்போது, "ஆட்டோமொபைல்துறை மிக மோசமான சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்திக்கு ஏற்ப மார்க்கெட்டில் டிமாண்ட் இல்லை. தனியார் துறையில் பெரியளவில் முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சூழலில் வளர்ச்சி எங்கிருந்து வரும். வானத்தில் இருந்தா வளர்ச்சி வரும்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

`கைதட்டி வரவேற்கிறார்கள்.. ஆனால்..?!' -அமித் ஷா மேடையில் பேசியது குறித்து ராகுல் பஜாஜ் மகன்

முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியின்போதும், "தொழிலை முறைப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் எந்தக் கொள்கைகளும் இல்லை. முதலீட்டாளர்கள் அனைத்தையும் இழந்துகொண்டிருக்கிறார்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.

எனவே, ராகுல் பஜாஜின் குற்றச்சாட்டை காழ்ப்புணர்ச்சியாக எடுத்துக்கொள்ளாமல், அதிலிருக்கும் உண்மைத்தன்மையை கருத்தில்கொள்வது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு