Published:Updated:

`நான் சொல்வது விமர்சனம் கிடையாது.. சின்ன அட்வைஸ்!’ - ராகுல் காந்தி லைவ்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

``நான் நிறைய விஷயங்களில் பிரதமர் மோடியுடன் ஒத்துப்போவதில்லை. ஆனால் தற்போது அப்படி அல்ல. இது நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வைரஸுக்கு எதிராகப் போர் செய்ய வேண்டிய தருணம்” - ராகுல் காந்தி

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தியாவில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசியல், மதம் உள்ளிட்ட அனைத்து வகையான பொதுக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தங்களது கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று வீடியோ கான்ஃபரன்ஸில் தி.மு.க சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு
ஊரடங்கு

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி யுமான ராகுல் காந்தி இன்று மதியம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``கொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

கொரோனா தடுப்பு விஷயத்தில் நான் சொல்லும் கருத்துகளை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் சொல்வது சின்ன அட்வைஸ். அவ்ளோதான். கொரோனா வைரஸ் தொடர்பாக, அது குறித்து விஷயம் தெரிந்த சில நிபுணர்களிடம் பேசினேன். அதைவைத்துப் பார்க்கும் போது ஊரடங்கு கட்டுப்பாடு என்பது கொரோனா பரவலைத் தாமதப்படுத்துமே தவிர, தீர்வு கிடையாது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அரசு, ஊரடங்குடன் பரிசோதனைகளை விரிவுபடுத்த வேண்டும். இந்தியாவில் போதுமான அளவில் பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. பரிசோதனைகளை அதிகப்படுத்தி அதன் மூலம் ஹாட்ஸ்பாட்களைக் கண்டுபிடித்தால்தான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும். இந்த வைரஸுக்கு எதிரான போரில் நாம் ஒன்றிணைந்து போராடிதான் வெல்ல முடியும். நான் நமது நாட்டில் இருக்கும் வளங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். நாட்டின் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் நமது பொருளாதாரமும் சீரழிந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், `மாநில அரசுகள் பரிசோதனைகளை வேகப்படுத்த வேண்டும். பரிசோதனை, நிதி, உணவுப் பற்றாக்குறை, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான பாதுகாப்பு திட்டம்... இவைதான் நாம் மனதில் கொள்ள வேண்டியவை. உணவு விநியோகம் தொடர்பான விஷயத்தின் அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நமது எண்ணம் அனைத்தும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

நான் நிறைய விஷயங்களில் பிரதமர் மோடியுடன் ஒத்துப்போவதில்லை. ஆனால் தற்போது அப்படி அல்ல. இது நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வைரஸுக்கு எதிராகப் போர் செய்ய வேண்டிய தருணம். இது சண்டை போடவோ, அரசியல் செய்யவோ நேரம் அல்ல.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஏழை மக்களுக்கு நிதியுதவி செய்யுங்கள். பொருளாதார ரீதியாக நாம் பெரிய பின்னடவைச் சந்திக்க உள்ளோம் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். பரிசோதனைகள் மிக முக்கியம். இதுவரை அது ஏன் வேகமாக நடக்கவில்லை என நான் கேள்வி எழுப்பப் போவதில்லை. ஆனால் இனி அது வேகம் பெற வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு