அரசியல்
அலசல்
Published:Updated:

ராகுல் யாத்திரையில் இறந்த தொண்டரின் குடும்பத்தை அலைக்கழிக்கும் காங்கிரஸ்!

யாத்திரை கணேசனுக்கு இரங்கல்
பிரீமியம் ஸ்டோரி
News
யாத்திரை கணேசனுக்கு இரங்கல்

சென்னைக்கு போங்க... தஞ்சாவூருக்கு போங்க... பொறுமையா இருங்க...

‘கட்சிக்காக, திருமணம்கூடச் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர் யாத்திரை கணேசன். ராகுலின் யாத்திரையில் கலந்துகொண்டபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். அவரின் குடும்பத்துக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய நிவாரணத் தொகையைக்கூட வழங்காமல், கட்சித் தலைமை அலைக்கழிக்கிறது’ என்று குமுறுகிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். என்ன நடந்தது என விசாரித்தோம்..

தஞ்சாவூரிலிருக்கும் கீழவாசல் பூமால் ராவுத்தன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு காட்டிய இவர், ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்திருக்கிறார். கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நடைப்பயணங்களில் கலந்துகொண்டதால், ‘யாத்திரை கணேசன்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டிருக்கிறார்.

ராகுல் யாத்திரை
ராகுல் யாத்திரை

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட கணேசன், கடந்த 11-11-2022-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து ராகுல் காந்தி உட்பட தேசிய, மாநிலத் தலைவர்கள் கணேசனுக்கு இரங்கல் தெரிவித்தனர். கூடவே, மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டியும், தமிழக காங்கிரஸ் கமிட்டியும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாகத் தெரிவித்தது. ஆனால், கணேசனின் குடும்பத்துக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்பதோடு, அவரின் குடும்பத்தினர் தொடர்ந்து அலைக்கழிக்கப் படுவதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய கணேசனின் சகோதரர் சீனிவாசன், “என் அண்ணன் தீவிரமான காங்கிரஸ் விசுவாசி. 59 வயதிலும் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்றார் அண்ணன். அப்போது லாரி மோதி அவர் இறந்ததால், 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாகக் கட்சியின் சார்பில் அறிவித்தார்கள். ஆனால், இதுவரை ஒரு ரூபாய்கூட அவரின் குடும்பத்துக்குக் கிடைக்கவில்லை. அதைவிடக் கொடுமை, இறப்புச் சான்றிதழ் பெறுவதற்குக்கூடக் கட்சியினர் உதவவில்லை. நாக்பூர் மருத்துவமனை பிணவறையிலிருந்து அவரின் உடலைப் பெற்றபோது இந்தி மொழியில் ஒரு சான்று கொடுத்தார்கள். அது எதற்கானது என்றுகூட எங்களுக்குத் தெரியவில்லை. இங்கிருக்கும் அரசு அலுவலகங்களில் அதைக் கொடுத்தால், அது இறப்புச் சான்றிதழ் அல்ல என்று ஏற்க மறுக்கிறார்கள்.

யாத்திரை கணேசனுக்கு இரங்கல்
யாத்திரை கணேசனுக்கு இரங்கல்

இதையெல்லாம் தஞ்சாவூர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜேந்திரனிடம் சொல்லி முறையிட்டோம். அவர், ‘தலைவர் உங்களைச் சந்திப்பதற்குத் தேதி கொடுக்கவில்லை. நீங்க சென்னைக்குப் போங்க’ என்றார். அதனால், சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து தலைவர் கே.எஸ்.அழகிரியைச் சந்தித்தேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு, “தஞ்சாவூருக்குப் போய் மாவட்டத் தலைவரிடம் சொல்லுங்கள்’ என்றார். தஞ்சாவூரிலுள்ள கட்சி நிர்வாகிகளோ, ‘ஜோதிமணியிடம் பேசுங்கள்...’ என்றார்கள். அவரின் உதவியாளர் லோகநாதனின் வாட்ஸ்அப்பில் எங்கள் கோரிக்கையைத் தெரிவித்தேன். “பொறுமையாக இருங்கள். அக்காவிடம் தெரிவிக்கிறேன்” என்றார். ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை” என்றார் மனக்கசப்புடன்.

தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் சிலரிடம் பேசினோம். “தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பதவி பறிபோகும் முன்பே ரிட்டையர்டு மனநிலைக்கு வந்துவிட்டார். கட்சியைப் பற்றியோ, தொண்டர்களைப் பற்றியோ சிந்திப்பதில்லை. அதனால்தான், யாத்திரை கணேசன் குடும்பத்தை அலட்சியம் செய்துவருகிறார். அவர்களுக்கு விரைவில் நியாயம் கிடைக்க வில்லையென்றால், கே.எஸ்.அழகிரியைக் கண்டித்து நடைப்பயணம் மேற்கொள்வோம்” என்றனர்.

யாத்திரை கணேசன்
யாத்திரை கணேசன்

இது குறித்து விளக்கம் கேட்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியைத் தொடர்புகொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அதையடுத்து தஞ்சாவூர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜேந்திரனிடம் விளக்கம் கேட்டோம். “யாத்திரை கணேசன் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கர்நாடகத் தேர்தல் காரணமாக, கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அங்கு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். எனவேதான் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. யாத்திரை கணேசனின் உடலைக் கொண்டு வரும்போதே, `ஒரு வழக்கறிஞரைத் துணைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறினேன். நானும் ஒரு சாமானியன்தான். என்னால் மட்டுமே எல்லாவற்றையும் சரிசெய்து கொடுக்க முடியாது” என்றார்.

ராகுல் யாத்திரையில் இறந்த தொண்டரின் குடும்பத்தை அலைக்கழிக்கும் காங்கிரஸ்!

அதையடுத்து எம்.பி ஜோதிமணியிடம் கணேசன் குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கை குறித்துக் கேட்டோம். “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, பணம் தருவதற்கு முடிவுசெய்துவிட்டது. அதற்குள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் இல்லத்தில் திருமணம் வந்துவிட்டது. எனவேதான் சிறு தாமதம் ஏற்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா காங்கிரஸ் நிவாரணம் தருவதாகச் சொல்லவில்லை. அந்த மாநில, கட்சி நிர்வாகி ஒருவர்தான், நிவாரணம் கொடுப்பதாகச் சொன்னார். அதையும் தொடர்ந்து ஃபாலோ செய்துவருகிறேன். விரைவில் பெற்றுத் தருகிறேன்” என்றார்.

சீனிவாசன்
சீனிவாசன்

தலைவர்களின் உயிர்த் தியாகத்தைப் பெருமையாகச் சொல்லும் காங்கிரஸ் கட்சி, இந்தத் தொண்டரின் உயிர்த் தியாகத்தையும் மதிக்குமா?