Published:Updated:

அரிசி உண்பதற்கா, இல்லை எத்தனால் எடுப்பதற்கா?- ராகுலின் கேள்வியும், மத்திய அரசின் பதிலும்!

அரிசி
அரிசி

தேசிய உயிரி எரிபொருள் 2018 (National Policy on biofuels) சட்டத்தின்படி அபரிமிதமாக இருக்கும் அரிசியை எத்தனால் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம் என்ற சட்டம் உள்ளது. அதன் மூலமே இந்த அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, கைகளை, கை சுத்திகரிப்பான் உபயோகித்து கழுவுதல்; சமூக இடைவெளியைப் பின்பற்றுதல்; முகக் கவசம் பயன்படுத்துதல் ஆகியவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கைகளைச் சுத்தப்படுத்துதல் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும் என்பதாலும் கைகளை, கை சுத்திகரிப்பான் மூலம் கழுவுவதால் வைரஸ் வலு இழந்துவிடும் என்பதாலும் சுத்திகரிப்பான் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் 152 புதிய கை சுத்திகரிப்பான் ( Hand Sanitizer) நிறுவனங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள வரைமுறைப்படி கை சுத்திகரிப்பான் தயார் செய்ய, எத்தனால், H2O2, கிளிஸரால் ஆகியவற்றின் கலவையும் அல்லது எத்தனாலுக்குப் பதிலாக ஐஸோப்ரோபைல் ஆல்கஹாலை மூலப்பொருள்களாகப் பயன்படுத்தலாம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக எத்தனாலின் தேவை என்பது தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. சமீபத்தில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேவைக்கு அதிகமாக உள்ள அரிசியை கை சுத்திகரிப்புக்குத் தேவையான, எத்தனால் தயாரிக்க பயன்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய உயிரி எரிபொருள் கமிட்டி அறிவித்திருந்தது.

Rahul Gandhi
Rahul Gandhi

தேசிய உயிரி எரிபொருள் 2018 (National Policy on biofuels) சட்டத்தின்படி அபரிமிதமாக இருக்கும் அரிசியை எத்தனால் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம் என்ற சட்டம் உள்ளது. அதன் மூலமே இந்த அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்திய உணவுக் கழக (Food Corporation of India) சட்டத்தின்படி இந்தியாவுக்கு, 21 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமை இருப்பில் இருப்பது அவசியம். கடந்த மார்ச் 10-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 58.49 மில்லியன் டன் தானிய வகைகள் இருப்பில் உள்ளன. அதில் 30.57 மில்லியன் டன் அரிசி உள்ளது. ஆக அபரிமிதமாக உள்ள அரிசியை இந்திய உணவுக் கழகத்தின் மூலம் எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தலாம். எத்தனால், கை சுத்திகரிப்பான் தயாரிப்புக்கு மட்டுமல்லாமல் குறைவான புகையை வெளியேற்றும் பெட்ரோலியம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம் என்று அரசு கூறியுள்ளது.

''சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் தினக் கூலிகள் உணவில்லாமல் வாடுகின்றனர். ஏழைகளுக்கு உணவளிப்பதாக அரசு அறிவிக்காமல், அவர்களுக்கு அதிர்ச்சி ஊட்டும் விதமாக இவ்வாறு அறிவித்துள்ளது"
காங்கிரஸின் பிரதிநி பவான் ஹீரா

இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ``ஏழைகள் உணவில்லாமல் கஷ்டப்படும் நிலையில், பணக்காரர்கள் பயன்படுத்தும் கை சுத்திகரிப்பான் தயாரிக்க அரிசியை உபயோகிப்பதா?'' என்று மத்திய அரசைச் சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``ஏழைகள் எப்பொழுது இந்த உண்மை நிலையைப் புரிந்துகொள்ளப் போகிறார்கள். நீங்கள் இங்கு பசியால் வாடுகிறீர்கள். அவர்கள் பணக்கார்கள் உபயோகிக்கும் கை சுத்திகரிப்பான் தயாரிக்க உங்கள் அரிசியைத் திருடுகிறார்கள்" என்று கூறி ஏழைகளை இதை எதிர்த்துப் போராடவும் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக, ``அவர் என்ன கூறுகிறார் என்றே தெரியவில்லை. அபரிதமாக இருக்கும் அரிசியை மட்டுமே நாங்கள் பயன்படுத்துகின்றோம். கை சுத்திகரிப்பான் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒன்று அல்ல. மாநில அரசுகளுக்கு நாங்கள் தேவையான உணவுப் பொருள்களை வழங்கி வருகிறோம். கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிட எதிர்மறை எண்ணங்கள் பயன்படாது" என்று அவர் ராகுல் காந்தியைச் சாடியுள்ளார்.

லாக்டெளனுக்குப் பின் தமிழகத்தில் என்னவெல்லாம் நடக்கும்? - வாசகரின் ஜாலி பகிர்வு #MyVikatan

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இதுபற்றிப் பேசுகையில்,

"கொரோனா தொற்று இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. உலகத்தில் இருக்கும் வல்லுனர்கள் கூற்றின் படி இன்னும் ஆறு ஏழு மாதங்களுக்கு நெருக்கடியான சூழல் தான் இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே கிடைக்கின்ற தானியங்களை அறுவடை செய்ய ஆள் கிடைக்காமல் தவிக்கும் சூழல் உள்ளது. இருப்பில் இருக்கின்ற தானியங்களை யாருக்கு அவசியமோ, தேவையோ அவற்றுக்கு முறையாகப் பயன்படுத்த வேண்டும். சானிடைசர் செய்ய மூலப்பொருள்கள் பல உள்ளன. அரிசியிலிருந்து தான் செய்ய வேண்டும் என்று இல்லை.

பசியாலும் பட்டினியாலும் வாடிக் கொண்டுள்ள மக்களுக்கு உரிய வேளாண் விளைச்சலில் கை வைக்கக்கூடாது. இதற்குப் பின்னால் எந்த பெரிய தொழில் குடும்பம் உள்ளது என்று தெரியவில்லை. தற்பொழுது சுங்கச்சாவடிகளை லீசுக்கு எடுத்திருப்பது பெரிய தனியார் தொழில் குழுமங்கள் தான். அவ்வாறு இதுவும் இருக்குமோ எனப் பயப்படுகிறேன். எது இல்லாமலும் நம்மால் வாழ முடியும். உணவு இல்லாமல் வாழ முடியாது. ஆக அரசாங்கம் வாழ்வாதாரமான அரிசியை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது" என்று கூறினார்.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு குறித்து, தமிழக பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர், வானதி ஸ்ரீனிவாசனிடம் பேசினோம். "தேசிய உயிரி எரிபொருள் சட்டத்தின் படி ஓர் ஆண்டில் தேவைக்கு அதிகமான உணவுப் பயிர்களின் விளைச்சல் இருந்தால், தேசிய உயிரி எரிபொருள் கமிட்டி ஒப்புதலுடன் எத்தனால் எடுக்கலாம் என்ற சட்டம் உள்ளது. இதன் மூலம் இந்த வருடம் விளைச்சல் அதிகம் இருக்கும் என்று கணிக்கப்படுவதால், அபரிமிதமாக இருக்கும் பயிர்களை உபயோகித்து எத்தனால் தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த எத்தனாலை ஆல்ஹகால் சார்ந்த கை சுத்திகரிப்பான், எத்தனால் சார்ந்தபெட்ரோல் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளன. இதில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. நான் பிரதமருக்கு வைத்திருக்கும் வேண்டுகோள் என்னவென்றால் அரிசியில் ஸ்டார்ச் அதிகம் இருப்பது போல மரவள்ளிக்கிழங்கு, மக்காச் சோளம் ஆகியவற்றிலும் அதிகம் உள்ளது. இதன் மூலம் எத்தனால் எடுத்தால் விவசாயிகள் பயன்பெறுவர் என்று கூறியுள்ளேன்.

மேலும், இதுகுறித்து இப்போது எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் தற்பொழுது கை சுத்தி கரிப்பானின் தேவை அதிகம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இதற்காக வெளிநாட்டில் இருந்து வாங்கி, அந்நிய செலவாணியை அதிகரிக்க முடியாது. நம்மிடம் இருக்கும் விலை பொருட்களைக் கொண்டே எத்தனாலை உருவாக்க வேண்டும். இந்திய உணவுக் கழகத்தில் உள்ள உணவுப் பொருள்கள் எலிக்குப் போனாலும் பரவாயில்லை, ஏழைகளுக்கு அளிக்க மாட்டோம் என்று மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், சுப்ரீம் கோர்ட்டில் கூறியவர்கள் காங்கிரஸ்காரர்கள். தற்போதைய சூழலில் அரசியல் செய்யாமல் நோயிலிருந்து மக்களை காப்பாற்ற உதவி செய்தால் நன்றாக இருக்கும்" என்கிறார் வானதி சீனிவாசன்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

கடந்த மாதம், நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேஷன் அட்டை உள்ள 80 கோடி மக்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி மற்றும் ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். கூலி வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் சென்றுள்ளவர்களுக்கு இந்தச் சலுகை பயன் அளிக்காது என்பதுதான் உண்மை. தவிர, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் சொல்வதுபோல கை சுத்திகரிப்பான்கள் பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்துவதல்ல, இந்த நேரத்தில் அனைவருக்கும் அது தேவையான ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், உணவில்லாமல் கையேந்தும் ஏழை மக்களின் எண்ணிக்கைதான் நம் நாட்டில் அதிகம். முதலில், சாப்பாட்டுக்கும் வழியின்றி தவிக்கும் அந்த மக்களின் பசியைப் போக்கிவிட்டு, சுத்திகரிப்பான் தயாரிக்க அரிசியை வழங்கலாமே இந்த அரசாங்கம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

சானிடைஸர் தயாரிப்புக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அரிசி... மக்கள் கருத்து என்ன? #VikatanPoll

அடுத்த கட்டுரைக்கு