Published:Updated:

` ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலின் எதிர்கால ஆய்வுப் பட்டியல்!’ - மோடியை விமர்சிக்கும் ராகுல்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

``மகாபாரத யுத்தம் 18 நாள்கள் நடைபெற்றது. தற்போது, கொரோனா வைரஸூக்கு எதிரான யுத்தம் 21 நாள்கள் நடைபெறும்.”

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் வைரஸால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,73,165-லிருந்து 6,97,413 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 425 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக அதிகரித்திருக்கிறது. உலகளவில் அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால், மக்கள் பலரும் கடுமையான அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய நாள் முதல் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக ராகுல் காந்தி, கொரோனா பரவல் மற்றும் எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளிலும் மத்திய அரசு எடுத்தும் நடவடிக்கைகள் மீது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாகப் பல கேள்விகளை எழுப்பி வருகிறார். இந்த நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி அந்த வீடியோவில், ``மகாபாரத யுத்தம் 18 நாள்கள் நடைபெற்றது. தற்போது, கொரோனா வைரஸூக்கு எதிரான யுத்தம் 21 நாள்கள் நடைபெறும்” என்று கூறுகிறார். கொரோனா பாதிப்பு தொடங்கிய ஆரம்ப காலத்தில் ஊரடங்கு அறிவிக்கும்போது பிரதமர் மோடி இதைக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாத்தான்குளம்:`இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்!’ -ராகுல் காந்தி முதல் தவான் வரை

பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிராக ஒலி எழுப்ப மற்றும் விளக்குகள் ஏற்ற சொல்வதும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் உள்ளது. இதன் கூடவே, நாள்கள் செல்ல செல்ல பாதிப்பு எண்ணிக்கை உயர்வதையும் படம் மூலமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வீடியோவின் கேப்ஷனில், பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மற்றும் கோவிட் 19 ஆகிய தோல்வியடைந்த திட்டங்கள் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலின் எதிர்கால ஆய்வுப் பட்டியலில் இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு தொடர்பாகவும் பொருளாதாரம் தொடர்பாகவும் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து அந்தந்தத் துறை நிபுணர்களுடன் காணொலி வாயிலாகக் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். அதிலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

முன்னதாக, கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நெருக்கடியான சூழலில் இந்தத் தொற்று நோயை எதிர்த்து போராட மோடி தலைமையிலான அரசு மறுத்து வருகிறது என்றும் நாட்டின் பல பகுதிகளிலும் வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்தவிதமான திட்டம் இல்லை என்றும் பிரதமர் மோடி அமைதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா எல்லைப் பிரச்னை தொடர்பாக ராகுல் காந்தியை விமர்சிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு தொடர்பான நிலைக்குழுவின் ஒரு கூட்டத்தில்கூட ராகுல் காந்தி கலந்துகொள்ளவில்லை. ஆனால், துரதிஷ்டவசமாகத் தேசத்தைத் தொடர்ந்து மனச்சோர்வு அடைய செய்கிறார். ராணுவ வீரர்களின் வீரம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் அவர் செய்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

 India-China FaceOff: `நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி!’ - ராகுல் காந்தி
அடுத்த கட்டுரைக்கு