Published:Updated:

உ.பி-க்குள் நுழைந்த ராகுல்... உற்று நோக்கும் பாஜக... மாற்றங்களுக்கான விதையைத் தூவியிருக்கிறதா?

ராகுல் யாத்திரை

பல மாநிலங்களில் தடம்பதித்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, உத்தரப்பிரதேசத்தில் அரசியல் மாற்றங்களுக்கான விதையைத் தூவியிருக்கிறதா?

உ.பி-க்குள் நுழைந்த ராகுல்... உற்று நோக்கும் பாஜக... மாற்றங்களுக்கான விதையைத் தூவியிருக்கிறதா?

பல மாநிலங்களில் தடம்பதித்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, உத்தரப்பிரதேசத்தில் அரசியல் மாற்றங்களுக்கான விதையைத் தூவியிருக்கிறதா?

Published:Updated:
ராகுல் யாத்திரை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் `பாரத் ஜோடோ யாத்திரை’ எனப்படும் இந்திய ஒற்றுமைப் பயணம், அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக தாக்கத்தை இந்திய அரசியலில் ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். முன்பு, ராகுல் காந்தியெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று பா.ஜ.க தலைவர்கள் சொல்லிவந்தனர். அந்த நிலையை ராகுல் காந்தியின் நடைப்பயணம் மாற்றியிருக்கிறது. இன்றைக்கு, பொதுக்கூட்டமாக இருந்தாலும், தேர்தல் பிரசாரமாக இருந்தாலும், செய்தியாளர்கள் சந்திப்பாக இருந்தாலும், ராகுல் காந்தியைப் பற்றியோ, அவரின் நடைப்பயணத்தைப் பற்றியோ பா.ஜ.க தலைவர்களால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

ராகுல் காந்தி, பிரியங்கா
ராகுல் காந்தி, பிரியங்கா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி உடல்நலம் சரியில்லாமல் டெல்லியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நேரத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுவருகிறார். ஒன்பது நாள் இடைவெளிக்குப் பிறகு, டிசம்பர் 3-ம் தேதி யாத்திரை தொடங்கிய ராகுல் காந்தி, டெல்லியிலிருந்து காசியாபாத் வழியாக உத்தரப்பிரதேசத்துக்குள் நுழைந்தார். அவரை, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி உற்சாகத்துடன் வரவேற்றார்.

உ.பி எல்லையில் ராகுல் காந்திக்கு வரவேற்பளித்த பிரியங்கா காந்தி, “என் அண்ணன் ஒரு போர் வீரர். அவரின் புகழைக் குலைப்பதற்காகவும், நற்பெயரைக் கெடுப்பதற்காகவும் பல ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவழித்தது. மேலும், அரசின் அனைத்து அமைப்புகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும், என் அண்ணனை அவரின் லட்சியப் பயணத்திலிருந்து தடுக்க முடியவில்லை. அம்பானியும் அதானியும் தலைவர்களை விலைக்கு வாங்கினார்கள். ஆனால், என் அண்ணனை அவர்களால் வாங்க முடியவில்லை. அவரை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி
பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

மேலும், “ராகுல் காந்தி கூறியதைப்போல, நாம் இங்கு அன்புக்கடையைத் திறக்கிறோம். பா.ஜ.க பரப்பும் வெறுப்புணர்வுக்கு எதிரான நம்முடைய அன்புக்கடையின் கிளைகளை உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வீதியிலும் திறங்கள்” என்று காங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா வேண்டுகோள் விடுத்தார்.

இன்றைய உத்தரப்பிரதேச அரசியலில் காங்கிரஸ் கட்சியின் முகமாக பிரியங்கா இருக்கிறார். அவரது தலைமையில்தான் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, சமூகச் செயற்பாட்டாளர் மேதா பட்கர் உட்பட அரசியலுக்கு அப்பாற்பட்ட பல ஆளுமைகளும் பங்கேற்றுவருகிறார்கள். இந்தப் பயணத்தில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் டெல்லியில் பங்கேற்றார். உத்தரப்பிரதேசத்தில் ராகுலின் பயணத்தில், தேசிய மாநாடு கட்சியின் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, இந்திய அரசின் உளவு அமைப்பான `ரா’-வின் முன்னாள் தலைவர் அர்ஜித் சிங் துலாத் ஆகியோர் இணைந்தனர்.

பாரத் ஜோடோ யாத்திரை
பாரத் ஜோடோ யாத்திரை
ட்விட்டர்

பாரத் ஜோடோ யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியபோது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பல்வேறு மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டு ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்தனர். உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சௌத்ரி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகிய முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும், உத்தரப்பிரதேசத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து, அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா மஹந்த் சத்யேந்திர தாஸ் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், “தேசத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு, ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும். அதற்காக, பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றைக்கு மேற்கு உத்தரப்பிரதேசத்தில் நடைப்பயணத்தை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்குச் செல்கிறார். பகத்பாத், ஷாம்லி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களில் 30 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள்.

நடைப்பயணத்தில் ராகுலுடன் கனிமொழி
நடைப்பயணத்தில் ராகுலுடன் கனிமொழி

கேரளாவில் 18 நாள்கள், கர்நாடகாவில் 21 நாள்கள், மத்தியப் பிரதேசத்தில் 18 நாள்கள், ராஜஸ்தானில் 16 நாள்கள் என மற்ற மாநிலங்களில் பல நாள்களை ஒதுக்கி யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்துக்கு வெறும் மூன்று நாள்களை மட்டுமே ஒதுக்கியிருக்கிறார். இது குறித்து அரசியல் விமர்சகர்களிடமிருந்து கேள்வி எழுந்தது.

தற்போது, பாரத் ஜோடோ யாத்திரைக்கு, பரவலான வரவேற்பு கிடைத்திருப்பதால், இந்த யாத்திரையின் இரண்டாம் கட்டத்தில், உத்தரப்பிரதேசத்துக்குக் கூடுதல் நாள்களை ராகுல் ஒதுக்கக்கூடும். காங்கிரஸிடமிருந்து விலகியிருக்கும் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரிய லோக் தளம் ஆகியவை ராகுலின் நடைப்பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்க முன்வந்திருப்பதை உ.பி அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றமாகப் பார்க்கலாம். இந்த மாற்றத்தை காங்கிரஸ் எப்படிப் பயன்படுத்தப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வி!.