அரசியல்
அலசல்
Published:Updated:

கர்நாடகாவில் ராகுல் பற்றவைத்த நெருப்பு... 2023 சட்டமன்றத் தேர்தலில் பலன் கொடுக்குமா?

ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ராகுல் காந்தி

இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தொடரும். ஒருபோதும் நிறுத்தப்படாது. புயலோ, மழையோ, வெயிலோ, குளிரோ இந்த நடைப்பயணத்தை நிறுத்த முடியாது

ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ கர்நாடக அரசியல் களத்தைப் பரபரப்பாக்கியிருக்கிறது. காங்கிரஸின் இந்த யாத்திரைக்குப் போட்டியாக பா.ஜ.க சார்பில் முதல்வர் பசவராஜ் மொம்மையும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் யாத்திரை தொடங்கும் அளவுக்கு ஆளுங்கட்சியைச் சீண்டிப் பார்த்திருக்கிறது. வரும் 2023, மே மாதம் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ராகுலின் இந்த யாத்திரை பல்வேறு தாக்கங்களை உண்டாக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கடந்த செப்டம்பர் 7-ம் தேதி, பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, 150 நாள்கள், 3,570 கிலோமீட்டர் பயணம் செய்து நகரில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. யாத்திரை தொடங்கிய மூன்று நாள்களில் கேரளாவை வந்தடைந்த ராகுல், அங்கே 18 நாள்கள் யாத்திரை மேற்கொண்டார். செப்டம்பர் 30-ம் தேதி கர்நாடகாவில் யாத்திரையைத் தொடங்கிய ராகுல், இரண்டு வாரங்களாக கர்நாடகாவில் சுழன்றடித்துவருகிறார். கர்நாடக மாநிலத்தில் மொத்தமாக 21 நாள்கள் யாத்திரை செல்ல ராகுல் திட்டமிட்டிருக்கும் நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஆதரவைப் பார்த்து காங்கிரஸாரே வியந்து நிற்கிறார்கள். தாங்கள் ‘ஏற்பாடு’ செய்யாத இடங்களிலிருந்தெல்லாம் பெண்களும் இளைஞர்களும் குவிவதைப் பார்த்து, அடுத்தது நம் ஆட்சிதான் என்று உற்சாகத்தில் இருக்கிறது மாநில காங்கிரஸ்.

கர்நாடகாவில் ராகுல் பற்றவைத்த நெருப்பு... 2023 சட்டமன்றத் தேர்தலில் பலன் கொடுக்குமா?

போட்டுத் தாக்கும் ராகுல்!

குறிப்பாக, மைசூருரில் கொட்டும் மழையில் ராகுல் நிகழ்த்திய உரை ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்தது. “இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தொடரும். ஒருபோதும் நிறுத்தப்படாது. புயலோ, மழையோ, வெயிலோ, குளிரோ இந்த நடைப்பயணத்தை நிறுத்த முடியாது’’ என ராகுல் பேசியதை மக்கள் கூட்டம் சிறிதும் அசையாமல் உன்னிப்பாக கவனித்தது, எதிர்க்கட்சிகளின் தூக்கத்தைக் கெடுத்தது. வேலையில்லாத, 2,200 இளைஞர்களைச் சந்தித்து உரையாடியது, கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்களுடன் உரையாடியது, விவசாயிகளைச் சந்தித்தது, மடாதிபதிகளைச் சந்தித்தது என கர்நாடக மண்ணில் ஆல் ரவுண்டராக வலம்வருகிறார் ராகுல். ஆளும் பா.ஜ.க அரசின் மீதான ராகுலின் ஊழல் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் முக்கியப் பேசுபொருளாகியிருக்கிறது.

நாட்டிலேயே அதிக ஊழல் மிகுந்த அரசாக கர்நாடக அரசுதான் இருக்கிறது எனக் கடுமையாக விமர்சித்தார் ராகுல். ``ஒவ்வோர் அனுமதிக்கும் 40% கமிஷன் வாங்கிக்கொண்டுதான் அனைத்து வேலைகளும் நடக்கின்றன. ‘முதலமைச்சர் பதவியை 2,500 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம்’ என்று பா.ஜ.க எம்.எல்.ஏ-வே பேசுகிறார். இதேபோல உதவி ஆய்வாளர், உதவிப் பேராசிரியர், பொறியாளர் பதவிகள் 80 லட்சம் முதல் கோடி ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் மாநில பா.ஜ.க அரசின்மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். ஏற்கெனவே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் முன்னெடுத்த `பே சி.எம்’ என்கிற பிரசார யுக்தி இந்திய அளவில் கவனம் ஈர்த்த நிலையில், ராகுலின் கருத்துகள் அதற்கு மேலும் வலு சேர்த்துள்ளன.

2023 தேர்தலில் கைகொடுக்குமா?

கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசின் மீதான ஊழல் புகார்கள், உட்கட்சிப் பிரச்னைகள் அந்தக் கட்சியை பலவீனப்படுத்தியிருக்கும் நிலையில், ராகுலின் பயணம் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தும் என்ற உற்சாகத்தில் இருக்கிறார்கள் அந்த மாநில காங்கிரஸ் கட்சியினர். தற்போதுள்ள சூழ்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் எடியூரப்பாவுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவிக்கொண்டேயிருக்கிறது. அதேபோல, லிங்காயத்து மடாதிபதிகளுக்கும் பொம்மையின்மீது மிகப்பெரிய ஈர்ப்பு எதுவுமில்லை. அதனால், இதுதான் சரியான தருணம் எனக் காத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

அதேநேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில், கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிறுத்தப்பட்டிருப்பது அந்தக் கட்சிக்கு பலம் சேர்க்கும். கர்நாடகாவில் 27% தலித் வாக்குவங்கி இருப்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளலாம். ஆனால், தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. தவிர காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே.சிவக்குமார் என ஏகப்பட்ட கோஷ்டிப்பூசல்கள் இருக்கும் நிலையில், எந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ளும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

கர்நாடகாவில் ராகுல் பற்றவைத்த நெருப்பு... 2023 சட்டமன்றத் தேர்தலில் பலன் கொடுக்குமா?

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் பேசும்போது, ``கர்நாடகாவில் இப்படியோர் ஆதரவு வரும் என ராகுலே எதிர்பார்த்திருக்க மாட்டார். கண்டிப்பாக இது தேர்தலில் எதிரொலிக்கும்.

ஆனால், ராகுல் சுற்றுப்பயணம் முடித்தவுடன் கடமை முடிந்துவிட்டது என மாநில காங்கிரஸ் கட்சி இருந்துவிட்டால் எந்தப் பயனும் இல்லை. ராகுல் கொடுத்த பலத்தை மாநில காங்கிரஸ் கட்சி தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில், இந்தியாவில் காங்கிரஸ் ஆள்கிற மாநிலங்களைத் தவிர, கட்சிக் கட்டமைப்பு வலுவாக இருக்கிற மாநிலங்களில் கர்நாடகா முக்கியமானது. அதைப் பயன்படுத்தி, தொடர்ந்து மாநில அரசுக்கு எதிரான போராட்டங்களை, மக்கள் சந்திப்புகளை, யாத்திரைகளை மாநில காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு எதிராக ராகுல் முன்வைக்கும் விமர்சனங்களை, தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் சென்றால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்குகளையும் கவர முடியும். உட்கட்சிப்பூசலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் அதை வெளியில் தெரியாமலாவது பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார்கள்.