Election bannerElection banner
Published:Updated:

`ராஜ்நாத் சிங் குறிப்பிடாத சமவெளி; இந்திய பகுதிகளை சீனாவுக்குக் கொடுத்துவிட்டார் மோடி’-ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

``இந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது பிரதமரின் பொறுப்பு. அவர் அதை எப்படிச் செய்வது என்பது அவருடைய பிரச்னை, என்னுடையது அல்ல” என்கிறார் ராகுல் காந்தி.

இந்தியா, சீனா இடையே எல்லையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பதற்றம் நிலவிவருகிறது. ஒருபுறம், இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும், அரசு மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும், மறுபுறம் சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. இதனால் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழலே நீடித்துவந்தது.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

இந்தநிலையில், நேற்று மாநிலங்களவையில் கிழக்கு லடாக் பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``இந்தியாவின் இறையாண்மையைக் காப்பாற்ற, நமது பாதுகாப்புப் படை எப்படிப்பட்ட சவால்களையும் எதிர்கொள்ளும் என நிரூபித்திருக்கிறார்கள். சீனாவுடனான எங்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் மூலம், பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகளில் படைகளைக் குறைப்பதற்கான உடன்படிக்கைக்கு வழி ஏற்பட்டது. லடாக் விவகாரத்தில், சீனா மிரட்டலாக நடந்துகொண்டபோதும் இந்தியா படைகளைக் குவித்து பதிலடி கொடுத்தது. லடாக் விவகாரத்தில் ஓர் அங்குல நிலத்தைக்கூட விட்டுத் தர மாட்டோம்” என்றார் அதிரடியாக.

`ஒரு இன்ச் நிலம்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்’ - தற்போதைய எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங்

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லடாக் விவகாரத்தில் மத்திய அரசு சீனாவுக்கு விட்டுக்கொடுப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார். ``நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், கிழக்கு லடாக் நிலவரம் குறித்து எடுத்துரைத்தார். தற்போது நமது படைகள் நிலை 4-ல் இருந்து, 3 -க்கு மாற்றப்பட்டிருக்கிறது. நிலை 4, நமது நிலபரப்புதான். ஆனால், நமது படை அங்கிருந்து விலக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி ஏன், நமது நிலத்தை சீனாவுக்கு விட்டுக்கொடுக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தொடர்ந்து பேசியவர், ``பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது விளக்கத்தில் டெப்சாங் சமவெளி குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. சீனா அங்கிருந்துதான் இந்தியாவுக்குள் நுழைந்தது. உண்மை என்னவென்றால், சீனாவுக்கு பிரதமர் மோடி நமது நிலத்தை வழங்கிவிட்டார். இந்த விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும்.

பிரதமரால் சீனர்களுக்கு எதிராக நிற்க முடியவில்லை. அவர் நமது ராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார். அவர் நமது ராணுவத்தின் தியாகத்தை காட்டிக்கொடுக்கிறார். இந்தியாவில் இதைச் செய்ய யாரும் அனுமதிக்கக் கூடாது. இந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது பிரதமரின் பொறுப்பு. அவர் அதை எப்படிச் செய்வது என்பது அவருடைய பிரச்னை, என்னுடையது அல்ல” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு