2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, `எப்படி அனைத்துத் திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் வருகிறது?’ என ராகுல் காந்தி பேசியிருந்தார். இது பேசுபொருளாகவே, `இத்தகைய பேச்சு ஒட்டுமொத்த மோடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கிறது’ எனக் கூறி குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், ராகுல் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த வாரம் விசாரணை முடிவடைந்த நிலையில், ராகுல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த நீதிபதி வர்மா, ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் வழங்கி, ஜாமீனும் வழங்கினார்.
ராகுலுக்கு இவ்வாறு சிறைத் தண்டனை விதித்ததற்கு, அரசியல் கட்சித் தலைவர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க-வைச் சாடிவருகின்றனர். அந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``மோடி அரசு, அரசியல்ரீதியாகத் திவாலாகிவிட்டது. இது கோழைத்தனம். உயர் நீதிமன்றத்தில் நாங்கள் மேல்முறையீடு செய்வோம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், `ஆயுதங்களை விடவும் வார்த்தைகள் மோசமானவை என்பதை ராகுல் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார்.

ராகுல் மீதான தீர்ப்பு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் ஊடகத்திடம் பேசிய ராஜ்நாத் சிங், ``வாள்களால் ஏற்படும் காயங்களைவிடவும், வார்த்தைகளால் ஏற்படும் காயங்கள் மிகவும் ஆழமானவை என்பதை ராகுல் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் பேசும்போது எல்லை மீறிப்போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை, இந்தச் சம்பவத்தின் மூலம் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.