Published:Updated:

‘பாஜக 40 சதவிகித கமிஷன் ஆட்சி; நாட்டிலேயே கர்நாடகாவில்தான் அதிக ஊழல்’ – ராகுல் காந்தி காட்டம்!

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே

``46 நாள்களுக்கு முன்பு ராகுல் காந்தி பேசியதற்கு, நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் ஆதாரம் கேட்டிருக்கின்றனர். ஆனால், கர்நாடகாவில் நடக்கும் ஊழல்கள் குறித்து ஆதாரம் கொடுத்தாலும், விசாரணை நடத்தவதில்லை." - கார்கே

Published:Updated:

‘பாஜக 40 சதவிகித கமிஷன் ஆட்சி; நாட்டிலேயே கர்நாடகாவில்தான் அதிக ஊழல்’ – ராகுல் காந்தி காட்டம்!

``46 நாள்களுக்கு முன்பு ராகுல் காந்தி பேசியதற்கு, நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் ஆதாரம் கேட்டிருக்கின்றனர். ஆனால், கர்நாடகாவில் நடக்கும் ஊழல்கள் குறித்து ஆதாரம் கொடுத்தாலும், விசாரணை நடத்தவதில்லை." - கார்கே

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே

கர்நாடகாவில் வரும் மே மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரியங்கா காந்தி உட்பட பல தலைவர்கள் பிரசாரத்துக்காக கர்நாடகத்துக்கு வந்து சென்றனர். கர்நாடகா தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியினர், ‘பெண்களுக்கு மாதம் ரூ.2,000, 200 யூனிட் மின்சாரம் இலவசம், வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ விலையில்லா அரிசி’ என மூன்று வாக்குறுதிகளைக் கூறியிருக்கின்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி
நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி

தேர்தலுக்கான வாக்குறுதிகளைத் தயாரிக்க, 4 நாள்களுக்கு முன்பு டெல்லியில், அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில், முக்கிய வாக்குறுதிகளை வெளியிட, இன்று, எம்.பி ராகுல் காந்தி பெல்காம் மாவட்டத்துக்கு வந்திருந்தார். அங்கு, தேர்தலுக்கான (யுவ கிராந்தி சமவேஷா) இளைஞர் புரட்சி மாநாட்டைத் தொடங்கிவைத்தார். கடந்த அக்டோபர் மாதம் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, தேர்தலுக்காக முதன் முறையாக கர்நாடகா வந்திருக்கும் அவருடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

’பா.ஜ.க 40 சதவிகிதம் ஊழல்!'

நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘இதுவரை கர்நாடகாவில், தற்போது நடப்பதைப்போல, ஊழல் மற்றும் தவறான ஆட்சி நடந்ததில்லை. கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க அனைத்துப் பணிகளிலும், 40 சதவிகிதம் ஊழல் செய்கிறது. அரசுப் பணி ஒப்பந்ததாரர்களே பிரதமருக்கும், அமித் ஷாவுக்கும் புகார் தெரிவித்திருக்கின்றனர். ஒரு பணிக்கு 100 ரூபாய் என்றால் இவர்கள் கமிஷன் பெறுவதற்காக, 200 ரூபாய் என மதிப்பீடு தயாரிக்கின்றனர்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

46 நாள்களுக்கு முன்பு ராகுல் காந்தி பேசியதற்கு, நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் ஆதாரம் கேட்டிருக்கின்றனர். ஆனால், கர்நாடகாவில் நடக்கும் ஊழல்கள் குறித்து ஆதாரம் கொடுத்தாலும், விசாரணை நடத்தவதில்லை.

என்னை நிர்வகிக்கும் ரிமோட் கன்ட்ரோல் யாரிடமோ இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கிறார்; உங்கள் ரிமோட் கன்ட்ரோல் ஜே.பி.நட்டாவிடமா இருக்கிறது... ராகுல் காந்தியை பா.ஜ.க-வினர் துன்புறுத்துகிறார்கள்; துன்புறுத்தட்டும். ராகுல் காந்தி பயமற்றவர், உண்மையைப் பேசுபவர். அவரை நீங்கள் சிறையில் அடைப்பீர்களா... நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம்’’ எனக் காட்டமாகப் பேசினார்.

‘இந்தியா அதானியின் சொத்து கிடையாது!'

நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ‘‘கர்நாடகாவில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு, வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு உதவ ‘யுவநிதி’ திட்டத்தின் மூலம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய்; பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும். 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கர்நாடகாவிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும், பா.ஜ.க ஊழல் செய்வதாகக் குற்றம்சாட்டுகின்றனர். ஒப்பந்ததாரர்கள் அமைப்பின் தலைவர், இங்கு நடக்கும் 40 சதவிகிதம் ஊழல் குறித்து பிரதமருக்கே புகாரளித்திருக்கிறார். ஆனால், இதுவரை பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து வாய்திறக்கவில்லை. 40 சதவிகித கமிஷன் பா.ஜ.க அரசால், நாட்டிலேயே கர்நாடகாவில்தான் அதிக ஊழல் நடக்கிறது.

காங்கிரஸ் இங்கு மீண்டும் ஊழலற்ற, அரசுப் பணிகளில் கமிஷன் பெறாத நேர்மையான அரசை நிறுவும். பிரதமரின் நண்பர்கள் அனைத்து நன்மைகளையும் பெறுவதுதான், ஊழலுக்கு வழிவகுக்கிறது. இந்தியா அதானியின் சொத்து கிடையாது, யாருடைய சொத்தும் கிடையாது; இந்த நாடு விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் என அனைவருக்கும் சொந்தமானது’’ என, பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.