Published:Updated:

``ட்விட்டர் இந்திய அரசியலை வரையறுப்பதை நாம் அனுமதிக்க வேண்டுமா?!''-கொதித்துப் பேசிய ராகுல் காந்தி!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தியைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் பலரின் ட்விட்டர் கணக்குகளும் தொடர்ச்சியாக முடக்கப்பட்டுவரும் நிலையில், இந்த நடவடிக்கை 'ஜனநாயகத் தாக்குதல்' என்று ராகுல் வீடியோ ஒன்றில் கொதித்துப் பேசியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லியில் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் அந்தப் புகைப்படத்தை ட்வீட் செய்த சில மணி நேரங்களிலேயே, அந்தப் புகைப்படம் ட்விட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் பாதுகாப்பு விதிகளுக்கு எதிராக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து, ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்திலிருந்து அந்தப் பதிவை நீக்கிய ட்விட்டர் நிறுவனம், விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாகக் கூறி, ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கையும் தற்காலிகமாக முடக்கியது. அதேபோல், அந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ கணக்கும் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

தொடர்ந்து முடக்கப்படும் காங்கிரஸ் கட்சியினரின் ட்விட்டர் கணக்குகள்; என்ன காரணம்?

ட்விட்டரின் இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பாக நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் ரோஹன் குப்தா செய்தியாளர்கள் சந்திப்பில், மத்திய அரசின் அழுத்தத்துக்கு ஏற்ப ட்விட்டர் நிறுவனம் செயல்படுவதாகவும், மக்களின் குரலாக ஒலிக்கும் காங்கிரஸின் குரலை நெரிக்க முயற்சிப்பதாகவும் கடுமையாகச் சாடியிருந்தார். இந்தநிலையில், ட்விட்டரின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ட்விட்டரை 'சார்பு ஊடகம்' என்று விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் 'ட்விட்டரின் ஆபத்தான விளையாட்டு' என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பேசி யூடியூபில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் ராகுல், ``ட்விட்டர் நிறுவனம் எங்களின் அரசியல் செயல்பாட்டில் தலையிடுகிறது. ட்விட்டரின் இந்த நடவடிக்கை ராகுல் காந்தி என்ற தனிநபர் மீதான தாக்குதலோ, காங்கிரஸ் கட்சியின் மீதான தாக்குதலோ கிடையாது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஒரு நிறுவனம் நம்முடைய அரசியலை வரையறுத்து அதன் வணிகத்தைச் செய்துகொண்டிருக்கிறது. இது ஓர் அரசியல்வாதியாக எனக்குப் பிடிக்கவில்லை.

ட்விட்டர் நிறுவனத்தின் இந்தப் போக்கை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்தியர்களாகிய நாம் அனைவரும் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டதால் நமக்கான அரசியலை வரையறுக்க ட்விட்டர் மாதிரியான நிறுவனங்களை நாம் அனுமதிக்கப்போகிறோமா இல்லை நமக்கான அரசியலை நாமே வரையறுக்கப் போகிறோமோ? ட்விட்டர் இன்று முடக்கியிருப்பது என்னை மட்டுமல்ல... என்னை ட்விட்டரில் பின்தொடரும் 19-20 மில்லியன் மக்களின் கருத்துரிமையையும்தான். ட்விட்டர் நிறுவனத்தின் இந்தச் செயல் அந்த நிறுவனம் மக்களுக்கான 'நடுநிலை' நிறுவனம் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறது.
நமது ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. நாங்கள் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. எங்களுக்கு எதிராக ஊடகங்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதுவரை என்னால் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாத கருத்துகளை ட்விட்டர் மூலம் கொண்டு சேர்த்துவந்தேன். ஆனால், தற்போது ட்விட்டரும் மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் ஒருசார்பு ஊடகம் என்பது தெளிவாகப் புரிந்திருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் இந்த வீடியோ யூடியூபில் தற்போது வைரலாகிவருகிறது. ராகுல் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் பலரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டிருப்பதை அடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தியின் புகைப்படத்தைப் தங்கள் ட்விட்டர் ப்ரோபைலில் வைத்து, ட்விட்டர் நிறுவனத்துக்கு கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ட்விட்டர் நிறுவனம், தாங்கள் எந்தவித பாரபட்சமுமின்றி நியாயமான முறையில் செயல்பட்டுவருவதாகவும், தங்களின் நிறுவன விதிகளை மீறிப் பதிவிட்டதால் ராகுல் மீதும், காங்கிரஸ் கட்சியினர் மீதும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டு ராகுல் காந்தி சிறுமியை அடையாளப்படுத்தியதைத் தொடர்ந்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தங்களை எச்சரித்ததாகவும், அதற்குப் பிறகே ராகுல் காந்தியின் கணக்கை முடக்கியதாகவும் தங்கள் தரப்பு விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது.
பொதுவாக, ஒருவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டால் அவரால் ட்வீட் செய்ய முடியாது. இருப்பினும் தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு நேரடியாக மெஸேஜ் அனுப்ப முடியும். ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்பது தெரியவில்லை. இந்தநிலையில், ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் ராகுல், இன்ஸ்டாகிராமில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு