Published:Updated:

`ஆட்சியைக் கலைக்கும் பணியில் இதைக் கவனித்திருக்க மாட்டீர்கள்!' -மோடிக்கு சுட்டிக்காட்டிய ராகுல்

மோடி மற்றும் ராகுல் காந்தி
மோடி மற்றும் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடியை விமர்சித்து ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இந்த வெற்றியில் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவர் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மேலும், கட்சியின் முக்கியப் பொறுப்புகள் எதுவும் இவருக்கு வழங்கப்படாததால் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சிந்தியா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகியுள்ளது மத்தியப்பிரதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக 22 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியுள்ளனர். இதனால், கமல்நாத் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியானது கவிழும்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிந்தியா, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர், டெல்லி பா.ஜ.க தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில், அவர் பா.ஜ.கவில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை விமர்சித்து ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்த ட்வீட்டில் பிரதமர் மோடியை டேக் செய்து, ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பதில் தீவிரமாக நீங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இதனால், உலகளாவிய எண்ணெய் விலையில் 35 சதவிகிதம் சரிந்துள்ளதை நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம். பெட்ரோல் விலையை 60 ரூபாய்க்கும் கீழ் குறைப்பதன் மூலம் இந்தியர்களுக்கு நன்மை ஏற்படும். அதற்கு நீங்கள் வழி செய்வீர்களா? வீழ்ச்சி அடைந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவியாக இருக்கும்" என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸை சாய்க்கும் ரிசார்ட் அரசியல்... என்ன நடக்கிறது மத்தியப் பிரதேசத்தில்?
அடுத்த கட்டுரைக்கு