Published:Updated:

ராகுல் காந்தியின் வீடியோ உரையாடல்கள்... அக்கறையா? அரசியலா?

ராகுல் காந்தி

முன்பைப் போல மத்திய அரசை தீவிரமாக தாக்காமல் மிதமான ஆக்கபூர்வமான விமர்சனங்களே ராகுல் காந்தியிடமிருந்து வரத் தொடங்கின. இவை ராகுல் காந்தியின் அணுகுமுறையில் ஏற்பட்டு வரக்கூடிய மாற்றம் எனப் பலராலும் பார்க்கப்பட்டது.

ராகுல் காந்தியின் வீடியோ உரையாடல்கள்... அக்கறையா? அரசியலா?

முன்பைப் போல மத்திய அரசை தீவிரமாக தாக்காமல் மிதமான ஆக்கபூர்வமான விமர்சனங்களே ராகுல் காந்தியிடமிருந்து வரத் தொடங்கின. இவை ராகுல் காந்தியின் அணுகுமுறையில் ஏற்பட்டு வரக்கூடிய மாற்றம் எனப் பலராலும் பார்க்கப்பட்டது.

Published:Updated:
ராகுல் காந்தி

கொரோனா நோய் தொற்று உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது. அதன் தாக்கம் அனைத்துத் தளங்களிலும் உணரப்பட்டு வருகிறது. அதற்கு அரசியலும் விதிவிலக்கல்ல. உலகம் முழுவதும் நடைபெறவிருந்த தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் கணக்குகளை மட்டுமல்ல, அரசியல் களங்களையும் கொரோனா நெருக்கடி மாற்றியமைத்திருக்கிறது.

கொரோனாவிலிருந்து மீண்டு வரும் உலகம் புதியதாக இருக்கும். கொரோனா தற்போதைக்கு நம்மைவிட்டு விலகப்போவதில்லை, வைரசுடனே வாழ்வதற்குப் பழக வேண்டும் என்கிற குரல்கள் அரசியல்வாதிகள் மத்தியில் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

உலகம் சுற்றும் வைரஸ்
உலகம் சுற்றும் வைரஸ்

ஊரடங்கிலிருந்து விடுபட உலகநாடுகள் ஆயத்தமாகி வருகின்றன. இனிவரக்கூடிய காலங்களில் தேர்தல் அரசியலின் பரிமாணங்களும் பெரிய அளவில் மாற்றம் பெரும் என யூகங்கள் வலம்வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தேர்தல் அரசியல் திருவிழா போல பார்க்கப்படும் இந்தியாவில் இதன் தாக்கம் நிச்சயமாக உணரப்படும். உள்ளாட்சித் தேர்தல், சட்டசபைத் தேர்தல், பொதுத் தேர்தல், இடைத் தேர்தல் என வருடம் முழுவதும் இந்தியாவின் ஏதாவதொரு பகுதியில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கும். இந்தியா `துடிப்பான ஜனநாயகம்’ (Vibrant Democracy) எனக் குறிப்பிடப்படுவதுண்டு. கட்சி, சின்னங்கள், கொள்கைகளை மையப்படுத்திய இந்தியாவின் தேர்தல் அரசியல் சமீப ஆண்டுகளாக தலைவர்களை (Presidential Form) மையப்படுத்தி நகர்த்தப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடிக்கு மாற்றாக யார் (Modi vs who?) என்றே பா.ஜ.க தன்னுடைய பிரசாரத்தைக் கட்டமைத்தது. எதிர்க்கட்சிகள் சார்பில் வலுவான கூட்டணியும் இல்லை, மோடிக்கு மாற்றாக பிரதமர் வேட்பாளர் யாரும் நிறுத்தப்படவில்லை. உலகம் முழுவதுமே வலுவான தலைவர், வலுவான தலைமை என்கிற பிம்பம் தேர்தல்களில் முக்கியமான ஒரு பங்கு வகிக்கின்றன. இலங்கையில் ராஜபக்சேவும் அதைத்தான் செய்தார். அமெரிக்காவில் ட்ரம்ப்பும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த நிலையில் தலைவர்களுக்கு அடிமட்டம் வரையிலான செல்வாக்கையும் கட்சியின் கட்டமைப்பைத் தொடர்ந்து பலமாக கட்டிக்காக்கும் வலிமையையும் மக்கள் முன்னர் காட்ட வேண்டிய தேவை உள்ளது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லையென்றாலும் கருணாநிதி, சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு, தி.மு.க கட்டமைப்பைப் பலமாகக் கட்டிக்காத்தார் என்பது இங்கே அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்ளக்கூடியதே. அதே முயற்சியில்தான் தற்போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்.

2017-ம் ஆண்டு இறுதியில் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல் காந்தி. அவர் தலைமையில் காங்கிரஸ் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடித்துவிட்டது, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க-விடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் இதே வெற்றி 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரவில்லை. பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்க காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. இதற்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இடைக்காலத் தலைவராக மீண்டும் சோனியா காந்தி பொறுப்பேற்றார். தற்போதும் காங்கிரஸ் தலைமை தொடர்பான கேள்விகளுக்கு விடையில்லாமலே உள்ளன. தலைமைக்கும், காங்கிரஸ் காரிய கமிட்டியைக் கலைத்துவிட்டு கட்சிப் பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற குரல்கள் கட்சிக்குள்ளிலிருந்தே வலுவாக எழத் தொடங்கின. ராஜினாமாவுக்குப் பிறகு கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகியே இருந்தார் ராகுல் காந்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தோல்விக்குப் பிறகு கட்சித் தலைமை கடமையிலிருந்து விலகிவிட்டது என மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார். தோல்வி தொடர்பாகவும், கட்சியை மீண்டும் எவ்வாறு பலப்படுத்த வேண்டும் என்பது பற்றி காங்கிரஸ் விரைவாக ஆய்வு செய்ய வேண்டும் எனப் பல இளம் தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தச் சிக்கல் தற்போது வரை தீர்க்கப்படாமலே உள்ளது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

இந்நிலையில் ராகுல் காந்தி எப்போது வேண்டுமானாலும் மீண்டும் காங்கிரஸ் தலைவராக வரக்கூடும் எனச் செய்திகள் உலவத் தொடங்கியிருக்கின்றன. சிறிய இடைவெளிக்குப் பிறகு மத்திய அரசின் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து வைக்கத் தொடங்கினார் ராகுல் காந்தி. முன்பைப் போல மத்திய அரசை தீவிரமாக தாக்காமல் மிதமான ஆக்கபூர்வமான விமர்சனங்களே ராகுல் காந்தியிடமிருந்து வரத் தொடங்கின. இவை ராகுல் காந்தியின் அணுகுமுறையில் ஏற்பட்டு வரக்கூடிய மாற்றம் எனப் பலராலும் பார்க்கப்பட்டது. கொரோனா நெருக்கடி தொடர்பாக இந்தியாவில் வலுவாக குரல் எழுப்பியவர் முதல் நபர் ராகுல் காந்தி. கொரோனா நெருக்கடி தொடர்பாக ராகுல் காந்தியின் எச்சரிக்கைகளை மத்திய அரசு புறந்தள்ளியதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் `கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்த வழிவகுத்துவிடக்கூடாது, அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்’ என ட்வீட் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு அது தொடர்பான விதிகளைத் திருத்தியது.

தற்போது ராகுல் காந்தி பொருளாதார நிபுணர்கள் மட்டும் வல்லுநர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் உரையாடி அதைத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அபிஜித் பேனர்ஜி ஆகியோருடன் உரையாடி உள்ளார் ராகுல் காந்தி. அதில் கொரோனா நெருக்கடியால் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பாதிப்புகள் மற்றும் இந்திய அரசு செய்ய வேண்டிய செய்யத் தவறுகிற விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.

ரகுராம் ராஜன் - அபிஜித் பேனர்ஜி
ரகுராம் ராஜன் - அபிஜித் பேனர்ஜி

குறுகிய காலம் அரசியல் வனவாசத்தில் இருந்துவந்த ராகுல் காந்தி மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இதுபோன்ற உரையாடல்களை ஏற்படுத்தி வருகிறார் என்கிற பார்வை ஒருபுறம் இருந்து வருகிறது. ஆனால் ராகுல் காந்தியிடம் வலுவான தலைவர் என்கிற பிம்பம் இல்லாமல் அனைத்துத் தரப்பு வல்லுநர்களைக் கலந்தாலோசிக்கும் இயல்புடைய (Accomodative Leadership) தலைவர் என்கிற அணுகுமுறையே இருக்கிறது.

வலுவான தலைவர் என்பதற்கான போட்டியில் ராகுல் காந்தியின் அணுகுமுறை அவருக்குப் பலன்களைத் தருமா என்கிற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. அரசியலில் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ராகுல் காந்திக்கு இது போன்ற உரையாடல்கள் தேவை என்று பார்க்கப்பட்டாலும், அந்த உரையாடல்களின் முக்கியத்துவத்தையும் புறந்தள்ளிவிட முடியாது. இந்த உரையாடல்களின் இந்தியப் பொருளாதாரத்தில் செய்யப்பட வேண்டிய பல பரிந்துரைகளையும் ரகுராம் ராஜனும், அபிஜித் பேனர்ஜியும் முன்வைத்துள்ளனர்.

2014-ம் ஆண்டு தொடங்கி மத்திய அரசு, பிரதமர் அலுவலகத்திலிருந்தே இயங்கி வருகிறது. அனைத்து முக்கிய முடிவுகளும் பிரதமர் அலுவலகத்திலிருந்தே எடுக்கப்படும்படியாக அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் முக்கிய முடிவுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்கிற பல வல்லுநர்களின் கருத்தும் உள்ளது. அவர்களில் ரகுராம் ராஜனும் ஒருவர். மத்திய அரசு பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை எதிர்கொள்ள சிறப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி போன்ற உலகப் புகழ் பெற்ற இந்தியப் பொருளாதார வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்கிற கோரிக்கையும் உள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வரும் ரகுராம் ராஜன், `எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் வந்து பணியாற்றத் தயார்’ என சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த சீரான முன்னெடுப்புகள் அவசியம் எனப் பல தரப்பிலும் உணரப்பட்டு வருகின்றது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆக்கபூர்வமான விவாதங்களை எதிர்க்கட்சிகள் முன்வைப்பதும், அதைக் கலந்தாலோசிக்கும் மனப்பான்மையோடு ஆளுங்கட்சி ஏற்றுக்கொண்டு தேவையானவற்றை நடைமுறைப்படுத்துவதுமே இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு அழகாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism