Published:Updated:

`ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்!'- மக்களவையில் கொதித்த பா.ஜ.க பெண் எம்.பி-க்கள்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி ( ANI )

ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும் என பா.ஜ.க எம்.பி ஸ்மிரிதி இரானி மக்களவையில் பேசியுள்ளார்.

நாட்டில் சமீபத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். ``பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? `உள்நாட்டு தயாரிப்பு மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவோம்' என்றார் பிரதமர். எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? இது ரேப் இன் இந்தியாவாக மாறியுள்ளது” என்று கூறினார். மேலும் குடியுரிமை மசோதா மற்றும் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை குறித்து இந்தப் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசினார்.

ரேப் இன் இந்தியா' எனக் கூறியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் பா.ஜ.க எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க பெண் எம்.பி.க்கள் எழுந்து நின்று கண்டனம் தெரிவித்தனர்.

ஸ்மிரிதி இரானி பேசுகையில், ``இந்திய வரலாற்றில் முதன்முறையாக காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மகன், இந்தியப் பெண்களை வன்கொடுமை செய்யுங்கள் என வெளிப்படையாகக் கூறுகிறார். இதுதான் நாட்டு மக்களுக்கு அவர் விடுக்கும் செய்தியா? அவர் தண்டிக்கப்பட வேண்டும்” எனப் பேசினார்.

அதன்பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஸ்மிரிதி இரானி, ``இந்தியப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட வேண்டும் என ராகுல் விரும்புகிறாரா?, பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியல் ஆயுதமாக ராகுல் காந்தி பயன்படுத்துகிறார். பெண்கள் அவருக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள். ஆனால், நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். ராகுல் காந்தி கூற்றுப்படி பார்த்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்களும் மோசமானவர்களா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

ஸ்மிரிதி இரானி
ஸ்மிரிதி இரானி
ANI

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தார். ``நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டம் பற்றித் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், நாம் செய்தித்தாளைத் திறந்துபார்த்தால் பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளைத்தான் பார்க்கிறோம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமை செய்திகள்தான் அதிகம் வருகிறது.

`நீண்டகாலம் நீடிக்காது!’ -  குடியுரிமை மசோதாவுக்கு எதிராகக் கேரள முதல்வரின் குரல்

டெல்லியை `ரேப் கேப்பிடல்' என நரேந்திர மோடி பேசிய வீடியோ என்னுடைய மொபைல்போனில் உள்ளது. அதை நான் ட்வீட் செய்கிறேன் அனைவரும் பாருங்கள். வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகின்றன. குடியுரிமை மசோதாதான், நம் கண் முன்னே இருக்கும் மிகப்பெரிய பிரச்னை. அந்தப் பிரச்னையை திசை திருப்புவதற்காக பா.ஜ.கவினர் இவ்வாறு செய்கின்றனர்'' என்றார்.

பிரதமர் மோடி பேசிய அந்த வீடியோவை ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார். அந்த வீடியோ கேப்சனில் , ``மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். 1.வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிவதற்கும். 2.இந்திய பொருளாதாரத்தைச் சீரழித்ததற்கும். 3. நான் பதிவிட்டுள்ள வீடியோவில் உள்ள அவரது பேச்சுக்காகவும்” என ராகுல் பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு