Published:Updated:

`தாஜ்மஹாலையும்கூட விற்றுவிடுவார்கள்!' - தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க-வை விமர்சித்த ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

``வெறுப்பு என்பது நம்முடைய வரலாற்றில் இல்லை. நம்முடைய நாடு அன்பிற்கானது" என்றும் ராகுல் காந்தி பேசினார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாள்களில் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய பிரதான கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேலைவாய்ப்பின்மை, பட்ஜெட் போன்ற பிரச்னைகளை மையமாக வைத்து, மற்ற பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளையும் விமர்சித்துப் பேசியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

டெல்லியில், ஜங்புரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு ராகுல்காந்தி பேசுகையில்,``நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நேர்காணலில், `எவ்வளவு வேலைவாய்ப்புகள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன' என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், `நான் எவ்வளவு எண்ணிக்கையைக் கூறினாலும் ராகுல் காந்தி, நான் பொய் சொல்லுகிறேன் என்பார்' என்று பதிலளித்தார். வேலைவாய்ப்பு உருவாக்கத்தைப் பற்றி அவர் பேச விரும்பவில்லை" என்றார். மேலும், வேலைவாய்ப்பை அதிகரிக்க அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

`அங்கே இயல்பான சூழல் இல்லை!’ - ஸ்ரீநகரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி!

தொடர்ந்து பேசிய அவர், ``நிதியமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பால் வெறும் 15 நபர்கள்தான் பலனடைவார்கள். மோடி, அதானிக்கு வழங்கிய திட்டங்களை வரிசையாகக் கூறினால், குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும் என நினைக்கிறேன். அதானி மற்றும் அம்பானி ஆகிய பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவர்களால்தான் அரசாங்கம் செயல்படுகிறது. பிரதமர் மோடியால் அல்ல. `மேட் இன் இந்தியா' என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். ஆனால், ஒரு தொழிற்சாலையும் அமைக்கவில்லை" என்று கூறினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேலும், ``இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஏர் இந்தியா, ரயில்வே, ரெட் ஃபோர்ட் உட்பட அனைத்தையும் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், தாஜ்மஹாலையும்கூட விற்றுவிடுவார்கள். `மேட் இன் இந்தியா' திட்டத்தைக் கொண்டுவந்தால், 2 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.

நம்முடைய வரலாற்றில் வெறுப்பு என்பது இருந்தது இல்லை. இது அன்பிற்கான நாடு. பா.ஜ.க-வினர் மதத்தைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், எந்த மதமும் வன்முறையைப் பற்றி பேசவில்லை. பா.ஜ.க-வினரும் ஆம் ஆத்மி கட்சியினரும் சமுதாயத்தில் வெறுப்பையே பரப்புகின்றனர். காங்கிரஸ் ஒருபோதும் இதைச் செய்யாது" என்று பேசினார்.

எல்.ஐ.சி போன்ற நிறுவனங்களை தனியார்மயமாக்குவது சரியா?- நிபுணர்கள் பார்வையில் பட்ஜெட் 2020
அடுத்த கட்டுரைக்கு