Published:Updated:

`போருக்குத் தயாராகும் சீனா?’ - ராகுலின் வார்னிங்கும் மோடி அரசின் அணுகுமுறையும்!

ராகுல் காந்தி - மோடி

`சீனா போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது' எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது புயலைக் கிளப்பியிருக்கிறது!

Published:Updated:

`போருக்குத் தயாராகும் சீனா?’ - ராகுலின் வார்னிங்கும் மோடி அரசின் அணுகுமுறையும்!

`சீனா போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது' எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது புயலைக் கிளப்பியிருக்கிறது!

ராகுல் காந்தி - மோடி

கடந்த டிசம்பர் 9-ம் தேதி, அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள தவாங் எல்லைப் பகுதியில் சீன ராணுவமும், இந்திய ராணுவமும் மோதிக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விஷயத்தை மத்திய அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில், `சீனா போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது' எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது புயலைக் கிளப்பியிருக்கிறது. இதையடுத்து, பா.ஜ.க-வினர் பலரும் ராகுல் காந்திக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால கூட்டத் தொடரில் டிசம்பர் 13-ம் தேதி அன்று, `அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதல் குறித்து விவாதம் நடத்த வேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அதில், ``அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துவிட்டது. சீன ராணுவத்துடனான இந்த மோதலில் இந்திய வீரர்கள் சிலர் காயமடைந்தனர். இருப்பினும் இந்திய வீரர்கள், சீன ராணுவத்தினருக்குப் பதிலடி தந்து அவர்களின் முகாமுக்கே அவர்களைத் திருப்பியனுப்பிவிட்டனர். அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு உடனடியாக சீனாவுடன் ராஜாங்க வழிகள் மூலம் பேசியது. நமது எல்லைகளைப் பாதுகாக்க நம்முடைய வீரர்கள் உறுதியெடுத்திருக்கின்றனர். நமக்கு எதிராக வரும் எந்தவித சவால்களையும் முறியடிக்க, நமது படைகள் தயாராக இருக்கின்றன'' என்று கூறியிருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த நிலையில், `பாரத் ஜோடோ யாத்திரை' 100-வது நாளை எட்டியிருப்பதை ஒட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய அவர், சீன எல்லைப் பிரச்னை குறித்தும் பேசினார். ``இந்தியாவுக்கு எதிரான போருக்குச் சீனா தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய எல்லையில் 2,000 சதுர கி.மீ பரப்பளவைச் சீனா ஆக்கிரமித்திருக்கிறது. 20 வீரர்களை 2020-ம் ஆண்டு கொன்றிருக்கிறது. தற்போது நமது வீரர்களை, சீன வீரர்கள் தாக்கியிருக்கின்றனர். எல்லை விவகாரம் தொடர்பான பல உண்மைகளை மத்திய அரசு மூடி மறைக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. எல்லையில் சீனா மேற்கொள்வது வெறும் ஆக்கிரமிப்பல்ல... இது போருக்கான முன்னேற்பாடு. சீன ராணுவம் அங்கு குவிக்கும் ஆயுதங்களைப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளலாம்'' என்று கூறியிருக்கிறார் ராகுல் காந்தி.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள், ``நமது ராணுவ வீரர்களைச் சீன ராணுவம் அடித்துவிட்டதாகக் கூறுகிறார் ராகுல் காந்தி. அவர் நமது ராணுவத்தைக் குறைத்து மதிப்பிடுகிறார்'' என்று விமர்சித்துவருகின்றனர். #IStandWithIndianArmy என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்துவருகிறார்கள்.

பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், ``ராகுல் காந்தி சீனாவுக்கு நெருக்கமானவர். அதனால்தான் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று சொல்கிறார். அவரின் கொள்ளுத்தாத்தா நேரு ஆட்சி செய்த காலகட்டமல்ல இது. புதிய இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். நேரு ஆட்சி செய்தபோது சீனாவுடனான போரில் 37,242 சதுர கி.மீ பரப்பளவை இழந்தது இந்தியா. அப்போதைய ஆட்சியாளர்கள்தான் தூங்கிக் கொண்டிருந்தார்கள். தேசப் பாதுகாப்பு குறித்துப் பொறுப்பற்ற வகையில் பேசுவதை ராகுல் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.

இந்தியா-சீனா எல்லை
இந்தியா-சீனா எல்லை

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களோ, ``இப்படித்தான் 2020-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனா தொற்று வேகமாகப் பரவுவது குறித்துச் சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார் ராகுல். ஆனால், அப்போது அவரை பா.ஜ.க கிண்டல் செய்தனர். பின்னர், மார்ச் மாதத்தில் எந்தவித முன்னேற்பாடுமின்றி ஊரடங்கை அமல்படுத்தியது மத்திய பா.ஜ.க அரசு. இப்போதும் அதே தவற்றைத்தான் பா.ஜ.க-வினர் செய்கின்றனர். மேலும், ராகுல் பேசியதை வேறு விதமாகத் திரித்து, அவர் ராணுவத்தைக் குறைத்து மதிப்பிடுகிறார் என்று சொல்லி பிரச்னையை திசை திருப்புகின்றனர். பிரதமர் மோடி, சீனா விவகாரத்தில் மெளனத்தைக் கலைத்துவிட்டு, நாட்டு மக்களிடம் இது குறித்துப் பேச வேண்டும்'' என்கிறார்கள்.

எல்லைப் பிரச்னையை உற்று நோக்கும் சிலர், ``டிசம்பர் அன்று நடந்த எல்லை மோதல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய பின்னரே விளக்கமளித்தது மத்திய அரசு. பாதுகாப்பு விஷயங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம். இந்த விவகாரத்தை வைத்து பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது. இதுபோன்ற விவகாரங்களில் ஒற்றுமையைப் பேணி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மத்திய அரசு, தேசப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முனைப்புக் காட்ட வேண்டும். சீனாவுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்த வேண்டும்'' என்கின்றனர்.