Published:Updated:

`கண்டுகொள்ளாத தி.மு.க; கலங்கும் காங்கிரஸ்?!' -ராகுல்காந்தி வருகையின் `சமரச' பின்னணி

ஸ்டாலின் - ராகுல்
ஸ்டாலின் - ராகுல்

ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க தலைமையை வற்புறுத்தியிருக்கிறார்கள் காங்கிரஸார். ஆனால் தி.மு.கவினர் இதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளுக்குள்தான் ஏகப்பட்ட கலவரங்கள் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் இன்று வரையிலும் ராஜ்யசபா வேட்பாளர்கள் யாரை அறிவிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் என்றால் வேட்பாளர்களை அறிவித்த தி.மு.க கூட்டணிக்குள்ளும் கலவரம் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள். அதுவும் பிரஷாந்த் கிஷோரின் வருகையால் தி.மு.க தனித்து நிற்கவேண்டும் என்ற மன நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அக்கட்சி வட்டாரத்தில் பேசினோம்.

ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள்
ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத்தலைவராக கே.எஸ் அழகிரி நியமிக்கப்பட்டதிலிருந்தே தி.மு.க - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உள்ளாட்சித் தேர்தல் சீட் பங்கீட்டில் கூட்டணி தர்மத்தை தி.மு.க காப்பாற்றவில்லை என்று கே.எஸ் அழகிரி பேசிய விவகாரம் பெரிய அளவில் தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து கராத்தே தியாகராஜனும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று சொல்லி பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி போட்டார். இதனால் காங்கிரஸ்காரர்கள் பேச்சுக்களை தி.மு.க-வினர் ரசிக்கவில்லை. ஒருகட்டத்தில் அவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு காட்டி தொடங்கினர் தி.மு.கவினர். ஒரு பொதுக்கூட்டத்தில் கே.என்.நேரு, ''காங்கிரஸ் கட்சிக்கு இனி தி.மு.க பல்லக்கு தூக்கக் கூடாது.

கூட்டணி என்ற பெயரில் நம்மோடு சேர்ந்துகொள்கிறார்கள். பின்பு நம்மேயே திட்டுகிறார்கள். இதுவரை நடந்தது போதும். இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது. இதுகுறித்து தலைமையிடம் வலியுறுத்த இருக்கிறேன்'' என எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் பேசினார். பதறிப்போன காங்கிரஸ் சர்ச்சைக்குக் காரணமான கராத்தே தியாகராஜனை சஸ்பெண்டு செய்தது.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்., அழகிரி
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்., அழகிரி

இதற்கிடையே, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்றிணைத்தும், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளை இணைத்தும் டெல்லியில் போராட்டம் நடத்தக் காங்கிரஸ் கமிட்டி தலைமையில் முடிவு செய்யப்பட்டது. இதில் எதிர்க்கட்சிகள் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்தது. ஆனால், அந்தக் கூட்டத்தை தி.மு.க புறக்கணித்தது.

அதற்குக் காரணம் , ``உள்ளாட்சித் தேர்தலில் போதிய இடங்களை தி.மு.க எங்களுக்கு அளிக்கவில்லை என்றும் ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்குத் தலைவர் பதவி கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தோம். தி.மு.கவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு எதிராக இருந்தது" என்று கே.எஸ்.அழகிரி கடுமையான வார்த்தைகளால் அறிக்கைவிட்டதே என்று டி.ஆர். பாலு வெளிப்படையாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தினர் தி.மு.க தலைமையிடம் பேசியிருக்கிறது.

அவர்கள் நடந்தவற்றை முழுமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு கே.எஸ்.அழகிரியை டெல்லிக்கு அழைத்து லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறது தலைமை. பின்னர் அழகிரியின் போக்கில் நிறைய மாற்றங்கள் இருந்தன. இந்த நிலையில் தற்பொழுதுகூட ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று தலைமை சார்பில் வற்புறுத்தியிருக்கிறார்கள். ஆனால் தி.மு.க-வினர் இதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ என மூவரின் பெயரை வேட்பாளராக அறிவித்தது.

கே.என்.நேரு
கே.என்.நேரு

இதனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள், ``பிரஷாந்த் கிஷோரின் வருகைக்குப் பிறகு தி.மு.கவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கூட்டணிக் கட்சிகளைக் கழற்றிவிட்டு தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க நினைக்கிறது. தி.மு.க கூட்டணியில்தான் நாம் இருக்கிறோம் அவர்களிடம் நாம் சீட் விவகாரம் பற்றிப் பேசுகிறோம். ஆனால் அவர்கள் கொஞ்சம் கூட மதிக்காமல் வேட்பாளரை அறிவித்திருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்'' எனக் கொந்தளிக்கிறார்கள். இந்த விவாகரத்தில் கே.எஸ்.அழகிரிக்குக் கூட்டணிக் கட்சிகளையும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களையும் சரியாகக் கையாளத் தெரியவில்லை என்று டெல்லி தலைமையிடம் புகார் வாசித்திருக்கிறார்கள்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

இதை மாற்ற வேண்டும் என்று இரு கட்சித் தலைவர்களையும் சமரசம் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறது காங்கிரஸ் தலைமை. அதன் முதல்கட்ட வேலையாக இந்த மாத இறுதிக்குள் ராகுல் காந்தி சென்னைக்கு வர இருக்கிறார்.

அவர் கலந்து கொள்ளும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டமும் சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் காங்கிரஸார். அப்போது இரு கட்சிகளுக்குள் நிலவி வந்த பனிப்போரை முடித்து வைக்கப் போகிறார் ராகுல் என்று பேசத்தொடங்கியிருக்கிறார்கள்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு