Published:Updated:

`டெல்லியில் அதிரடிகாட்டும் ராகுல்; பதறுகிறதா பாஜக?’ - காங்கிரஸ் குற்றச்சாட்டும், பாஜக பதிலும்

டெல்லியைக் குலுங்கவைத்த ராகுல் யாத்திரை ( ட்விட்டர் )

ராகுல் டெல்லியில் அதிரடிகாட்டி வருகிறார். மறுபுறம் கொரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி மத்திய அரசு யாத்திரையை ஒத்திபோட கோரிக்கை வைத்திருக்கிறது. இதற்கு பாஜக பதற்றத்தில் இருப்பதாக விமர்சனம் செய்திருக்கிறது, காங்கிரஸ்.

`டெல்லியில் அதிரடிகாட்டும் ராகுல்; பதறுகிறதா பாஜக?’ - காங்கிரஸ் குற்றச்சாட்டும், பாஜக பதிலும்

ராகுல் டெல்லியில் அதிரடிகாட்டி வருகிறார். மறுபுறம் கொரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி மத்திய அரசு யாத்திரையை ஒத்திபோட கோரிக்கை வைத்திருக்கிறது. இதற்கு பாஜக பதற்றத்தில் இருப்பதாக விமர்சனம் செய்திருக்கிறது, காங்கிரஸ்.

Published:Updated:
டெல்லியைக் குலுங்கவைத்த ராகுல் யாத்திரை ( ட்விட்டர் )

தொடர் தோல்வி, மூத்த நிர்வாகிகளால் பிரச்னை என காங்கிரஸ் கடந்த எட்டு ஆண்டுகளாகவே பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் விரக்தியைச் சந்தித்தனர். இதற்கிடையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை அறிவித்தார். இது காங்கிரஸ் தொண்டர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

முன்னதாக இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா உட்பட பல மாநிலங்கள் வழியாகச் சென்று ராஜஸ்தான், ஹரியானா மாநிலத்தைக் கடந்து டெல்லியில் நுழைந்திருக்கிறது. இதில், காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்லாமல், பிற கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், சினிமா நடிகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

பாரத் ஜோடோ யாத்திரை
பாரத் ஜோடோ யாத்திரை
ட்விட்டர்

குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை நடந்தபோது பங்கெடுத்த சோனியா காந்தி, பின்னர் டெல்லியில் நுழைந்திருக்கும் பாரத் ஜோடோ யாத்திரையில் மீண்டும் கலந்துகொண்டார். முன்னதாக ராகுல் காந்தியின் தலைமையிலான இந்த யாத்திரைக்கு டெல்லியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்ட யாத்திரை டெல்லியை அதிரவைத்தது என்று மகிழ்ச்சியில் பொங்குகிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

மறுபுறம் இந்த யாத்திரையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால், நாட்டின் நலன் கருதி யாத்திரையை ஒத்திப்போட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு, `பாரத் ஜோடோ யாத்திரை, மக்களிடம் மிகுந்த வரவேற்பும் செல்வாக்கும் பெற்றுவருகிறது. எனவே, இந்த யாத்திரையை நிறுத்தவே மத்திய அரசு இவ்வாறு செயல்படுகிறது’ என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

ஜெய்ராம் ரமேஷின் ட்விட்டர் பதிவு
ஜெய்ராம் ரமேஷின் ட்விட்டர் பதிவு
ட்விட்டர்

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவில், "இந்தியாவில் நான்கு பேரை பாதித்திருக்கும், சீனாவில் வேகமாகப் பரவிவரும் உருமாறிய ஓமிக்ரான் BF.7 வகை வைரஸ், குஜராத் மற்றும் ஒடிசாவில் ஜூலை, செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கண்டறியப்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கடந்த டிச.21-ம் தேதி இது தொடர்பாக ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். நிலைமை குறித்து ஆராய பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை டெல்லிக்குள் நுழையவிருக்கிறது. இப்போது உங்களுக்கு இந்தக் கால வரிசை புரிகிறதா?" என்று தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று, ராகுல் காந்தியுடன் உரையாடியவர்களிடம் உளவுத்துறை விசாரணை நடத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் , "இந்த யாத்திரை குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதற்றத்தில் இருக்கின்றனர்.

எனவே, யாத்திரையில் பங்கேற்று ராகுல் காந்தியுடன் உரையாடியவர்களிடம் உளவுத்துறை தொடர்ந்து கேள்வியெழுப்பிவருகிறது" என்று தெரிவித்திருக்கிறார். இதுபோல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டிவருகின்றனர். எனவே, உண்மையிலேயே பாஜக-வுக்கு பயம் அதிகரித்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

கோபண்ணா
கோபண்ணா

இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, "கொரோனவை எதிர்கொள்வது மற்றும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. உண்மையிலேயே தொற்று அதிகரிக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் இருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், கொரோனா தொற்று குறித்து ஆரம்பத்திலிருந்தே ஒரு தெளிவான கொள்கை இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரை இழப்பதற்குக் காரணமாக இருந்தது, மோடி அரசு. சுகாதாரக் கட்டமைப்பு உள்ளிட்ட எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை.

இவ்வளவு இழப்புக்குப் பிறகும் பாடம் கற்றதாகத் தெரியவில்லை. அதேநேரத்தில் மோடி, அமித் ஷா கலந்துகொள்ளும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கிறார்கள். இங்கெல்லாம் கொரோனா பாதுகாப்பு நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா... இதெல்லாம் இல்லாமல் பாரத் ஜோடோ யாத்திரையில் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட கருத்து. யாத்திரைக்கு மக்களிடம் வரும் அமோக ஆதரவைச் சகிக்க முடியாத மோடி அரசு மற்றும் அமைச்சராக இருப்பவர்கள் இது போன்ற கருத்துகளைப் பரப்பிவருகிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து இல்லை" என்றார்.

 - நாராயணன் திருப்பதி
- நாராயணன் திருப்பதி

இது குறித்து நம்மிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "நாட்டின் மீது தேசப்பற்று அற்றுப் போயிருக்கிறார்கள், காங்கிரஸ் கட்சியினர். தேசப்பற்று இல்லாமல் சீனா எல்லையில் நடந்த சம்பவங்கள் குறித்து ராணுவமும், இந்திய அரசும் சொன்னதை ஏற்க மறுத்து தேசம் பிரச்னையில் இருக்க வேண்டும் என நினைத்து தேசத்துரோக செயலில் ஈடுபடும் காங்கிரஸ் கட்சி, மக்கள் நலன் குறித்து அக்கறை காட்டாமல் இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா அலை மீண்டும் வருகிறது என்ற எச்சரிக்கையை மக்களுக்காக, மக்கள் நலனுக்காக அரசு கொடுத்தால், அதைத் தங்களுக்காக என்று காங்கிரஸ் கட்சி சொல்கிறது. இது ஒருவேளை கொரோனா வந்தால்கூட மக்கள் நாசமாக வேண்டும் என்கின்ற அவர்களின் எண்ணத்தையே பிரதிபலிக்கிறது. கடந்த ஒருவாரமாகத்தான் கொரோனா குறித்த பிரச்னை அதிகமாக இருக்கிறது. எனவேதான் மத்திய அரசு இதை அறிவித்தது. கடந்த ஒரு வாரத்தில் பிரதமர் எந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்?" என்றார்.