Published:Updated:

பரப்பன அக்ரஹாரா சிறையில் `திடீர்' ரெய்டு! - சசிகலா அறையில் செல்போன் பறிமுதல்?

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பட்டன் கத்தி, சூரி போன்ற 37 வகையான ஆயுதங்களும் கஞ்சா, செல்போன் மற்றும் சிம் கார்டுகள் போன்ற பொருள்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரப்பன அக்ரஹாரா சிறை
பரப்பன அக்ரஹாரா சிறை

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பார்க்க இன்று சசிகலாவின் குடும்பத்தினர் பெங்களூரு சிறைக்கு வரவிருந்த நிலையில், மத்திய குற்றவியல் போலீஸார் சிறையில் ரெய்டு நடத்தியுள்ளனர். இதில், சட்ட விரோதமாகக் கைதிகள் வைத்திருந்த ஆயுதங்களும் சசிகலா அறையிலிருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுதம்
ஆயுதம்

இதுகுறித்து, பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை வட்டாரத்தில் பேசினோம். '' சசிகலா அடைக்கப்பட்டிருப்பதால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையைத் தமிழக மக்கள் உற்றுக் கவனித்து வருகிறார்கள்.

சசிகலாவும் இளவரசியும் சிறை விதிமுறைகளை மீறி வருவதாகவும், இவர்களுக்கு அதிகாரிகள் சட்ட விரோதமாகப் பல உதவிகளைச் செய்து வருவதாகவும் அடிக்கடி சர்ச்சைகள் எழுந்தன.

கஞ்சா குப்பிகள்
கஞ்சா குப்பிகள்

இந்நிலையில், சிறைக்குள் சட்டவிரோதமான நடவடிக்கைகள் நடந்து வருவதாக வந்த தகவலை அடுத்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டேல் தலைமையில் திடீரென இன்று காலை 5 மணியிலிருந்து 10 மணி வரை சிறை முழுவதும் ரெய்டு நடத்தியுள்ளனர். இதில் பட்டன் கத்தி, சூரி போன்ற 37 ஆயுதங்களும் கஞ்சா, செல்போன் மற்றும் சிம் கார்டுகள் போன்ற பொருள்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சசிகலா அறையிலிருந்து செல்போனைக் கைப்பற்றியுள்ளனர்'' என்றார்கள்.

''சிறையில் நடந்தது வழக்கமான ரெய்டுதான். சமீப நாள்களாகச் சிறைக்குள் அடிக்கடி கேங் வார் நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து ரெய்டைத் தீவிரப்படுத்தினோம். இதில் சிறைத்துறை விதிமுறையை மீறி பலர் பொருள்களை வைத்திருந்தார்கள். அதைக் கைப்பற்றி இருக்கிறோம். சசிகலாவிடம் செல்போன் கைப்பற்றவில்லை'' என விளக்கம் கொடுக்கின்றனர் சிறைத்துறை உயர் அதிகாரிகள்.