Published:Updated:

ரிப்பீட் ஆகும் ரெய்டுகள்... வெறும் மிரட்டல்தானா?

கே.பி.அன்பழகன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.அன்பழகன்

ஊழல் அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்று கோரி மாநிலம் முழுவதும் தி.மு.க போராட்டம் நடத்தியது

ரிப்பீட் ஆகும் ரெய்டுகள்... வெறும் மிரட்டல்தானா?

ஊழல் அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்று கோரி மாநிலம் முழுவதும் தி.மு.க போராட்டம் நடத்தியது

Published:Updated:
கே.பி.அன்பழகன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.அன்பழகன்

கமிஷன் - கலெக்‌ஷன் – கரெப்ஷன் என அ.தி.மு.க அரசுக்கு எதிராக ரைமிங்கான ஒரு விமர்சன முழுக்கத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகமெங்கும் ஒலித்தவர், மு.க.ஸ்டாலின். ஆட்சியதிகாரத்துக்கு தி.மு.க வந்தவுடன், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ரெய்டு படலம் தொடங்கியது. ஆனால், அது ‘மாதத் தவணை’ அடிப்படையிலும் மந்த கதியிலும் நடப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.

கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியின்போது, முதல்வர் உள்ளிட்ட அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை தி.மு.க கிளப்பியது. உள்ளாட்சித் துறை பிளீச்சிங் பவுடர் வாங்கியது முதல் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விட்டது வரை பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கான ஊழல் புகார்களை தி.மு.க அடுக்கியது. ‘விடியலை நோக்கி ஸ்டாலின்’, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’, ‘தி.மு.க-வின் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்’ என தி.மு.க தீவிரமாக முன்னெடுத்த போராட்டங்களில், அ.தி.மு.க அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் தீவிரமாகப் பேசினார்.

ஊழல் அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்று கோரி மாநிலம் முழுவதும் தி.மு.க போராட்டம் நடத்தியது. 2020 டிசம்பரில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட 8 அமைச்சர்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை ஸ்டாலின் அளித்தார். ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வந்த ஸ்டாலின், “இது பார்ட் – 1 தான். பார்ட் – 2 இருக்கிறது. மீண்டும் ஆளுநரைச் சந்திப்பேன்” என்றார்.

ரிப்பீட் ஆகும் ரெய்டுகள்... வெறும் மிரட்டல்தானா?
ரிப்பீட் ஆகும் ரெய்டுகள்... வெறும் மிரட்டல்தானா?

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் எனப்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை 2021 ஜூலையில் ரெய்டு நடவடிக்கையைத் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உட்பட 20 இடங்களில் சோதனை நடைபெற்றது. அந்த நடவடிக்கை, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்ததாக, ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 12 மணி நேரம் சோதனை நடத்தினர். அடுத்து, செப்டம்பர் மாதம் கே.சி.வீரமணி, அக்டோபர் மாதம் சி.விஜயபாஸ்கர், டிசம்பர் மாதம் தங்கமணி, ஜனவரி மாதம் கே.பி.அன்பழகன் என மாதம் ஒருவர் வீதம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை நடைபெற்றது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி இடங்களில் சோதனை நடந்தபோது இருந்த பரபரப்பும் முக்கியத்துவமும், தற்போது கே.பி.அன்பழகன் வீட்டில் நடந்த சோதனையின்போது இல்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் காட்டிலும் ‘பவர்ஃபுல்’லானவர் என்று தி.மு.க-வினரால் விமர்சிக்கப்பட்டவர் எஸ்.பி.வேலுமணி. “இன்றைக்கு ஒருவர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கிறார். முதலமைச்சரைவிட அதிகமாக யார் கமிஷன் வாங்குகிறார்கள் என்றால், அது அவர்தான்” என ஸ்டாலின் முன்பு சொன்னார். எல்லா ஆதாரங்களையும் திரட்டி வைத்திருக்கிறோம் என்று தி.மு.க-வினர் சொன்னார்கள். ஆனால், வேலுமணிக்கு எதிரான சோதனையில் வெறும் 13,08,500 ரூபாய்தான் கைப்பற்றப்பட்டது. சோதனைகள், விசாரணைகள் தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் ஒரு அமைச்சர்கூடக் கைது செய்யப்படவில்லை.

ஆட்சியாளர்களின் ஊழலுக்குத் துணைபுரிந்த அதிகாரிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் இப்போது முக்கியமாக எழுந்திருக்கிறது.

ரிப்பீட் ஆகும் ரெய்டுகள்... வெறும் மிரட்டல்தானா?

‘எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் ஊழல், முறைகேடுகளைக் கண்டித்து’ 2018, ஜூன் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் மாவட்ட ஆட்சியரகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கியவர், ஸ்டாலின். “ஊழலை விசாரியுங்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்தோம். அந்தத் துறையின் அதிகாரி பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி மீதான புகாரை விசாரியுங்கள் என்று டி.ஜி.பி ராஜேந்திரனைப் பார்க்கப்போனால், அவர் குட்கா ஊழலில் சிக்கியிருக்கிறார். ஊழலுக்குத் துணைபோகும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் யார் யார் என்ற பட்டியலைத் தயாரித்து வைத்திருக்கிறோம். விரைவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், கரன்சி எண்ணியவர்கள் கம்பி எண்ணுவார்கள்” என்று ஸ்டாலின் கர்ஜித்தார். ஆனால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை.

லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டு நடவடிக்கை குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது 14 புகார்களை ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நாங்கள் அளித்தோம். அவற்றின் மீது முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது” என்று கூறினார். அவரிடம், “மாதம் ஓர் அமைச்சர் என்று ரெய்டு போவதையும், அதிகாரிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “அனைத்துப் புகார்கள்மீதும் ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அதிகாரிகள், ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், ஆடிட்டர்கள் ஆகியோரைக் கொண்ட கட்டமைப்பு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் போதுமான அளவு இல்லை. அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுப்பதற்கான சுதந்திரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், கடந்த ஆட்சியில் ஊழல் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகளை தற்போதைய அரசு பாதுகாக்கிறது என்றுதான் பார்க்கிறோம்” என்றார் அவர்.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வின் சட்டப்பிரிவுச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “ஊழல் வழக்கில் யாரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 1996-ல் ஜெயலலிதா மீதும் பல அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டன. ஆனால், யாரையும் உடனே கைது செய்யவில்லை. ஜெயலலிதாவைக் கைது செய்ததுகூட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான். நினைத்தவுடன் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்துவிட முடியாது. சட்ட நடைமுறைகள் இப்படித்தான் இருக்கின்றன. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தருவோம். ஊழல் அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், அதற்கும் சில சட்ட நடைமுறைகள் உள்ளன” என்றார்.

ரிப்பீட் ஆகும் ரெய்டுகள்... வெறும் மிரட்டல்தானா?

இதுகுறித்துச் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணியிடம் பேசினேன். “எம்.எல்.ஏ., எம்.பி மீதான வழக்குகளை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல முறை சொல்லியிருக்கிறது. ஆனால், ஆறு முன்னாள் அமைச்சர்கள் மீது கைது நடவடிக்கை இல்லை, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. பிறகு எப்படி வழக்கை முடிக்க முடியும்? எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டு ஆறு மாதங்களாகியும் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை? உண்மையிலேயே அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. வெறுமனே அ.தி.மு.க-வை மிரட்டும் நடவடிக்கையாகத்தான் இதை மக்கள் பார்க்கிறார்கள்” என்கிறார் தமிழ்மணி.

அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தாவைத் தமிழகத்தில் உரிய முறையில் ஏற்படுத்தி, அதன் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையைக் கொண்டுவந்துவிட்டால், ஊழல் புகார்களையெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், 2014-க்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டிய லோக் ஆயுக்தாவை, 2018-ல்தான் தமிழகத்தில் கொண்டுவந்தார்கள். அதன்பிறகு, அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. “லோக் ஆயுக்தாவைச் செயல்பட வைப்போம்” என்பது தி.மு.க-வின் முக்கியமான தேர்தல் வாக்குறுதி. 75 சதவிகிதமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பெருமைப்படும் முதல்வர் ஸ்டாலின், லோக் ஆயுக்தாவை எப்போது செயல்பட வைப்பார்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism