Published:Updated:

`ஒரே நாளில் பல புக்கிங்; பயணமும் இல்லை, ரத்தும் இல்லை’ -மாநிலங்களவைக்கு செலவுவைத்த உறுப்பினர்கள்?

மாநிலங்களவை
மாநிலங்களவை

உறுப்பினர்கள் பயணம் செய்யாத டிக்கெட்டுகளுக்கும் இந்த அவை பணம் செலவளிக்க வேண்டுமா?

மக்கள் பிரதிநிதிகளுக்கு, அரசு பல்வேறு சலுகைகளை வழங்குவது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணச் செலவுகளுக்கு அரசு பெரும் தொகையைச் செலவளிக்கிறது. மக்கள் பணிக்காக செல்பவர்களுக்காக வழங்கப்படும் முன்னுரிமையாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலர், செல்லாத இடங்களுக்கும் அதிகப்படியான டிக்கெட்டுகளைப் பதிவுசெய்திருப்பதை ரயில்வே நிர்வாகம் கண்டுபிடித்து, மாநிலங்களைவைக்கு தெரியப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பின் பிரிவு 6 (1) -யின்படி ரயில்களில் இலவச பயணம் மேற்கொள்ளலாம், அதிகபட்சமாக ஏ/சி முதல் வகுப்பில் விரும்பும் நேரத்தில், விரும்பும் ரயிலில் பயணிக்கலாம். அப்படிப் பயணிக்கையில், அவருடன் அவரது கணவர் அல்லது மனைவி உடன் பயணிக்கலாம். அவருடன் பயணிக்கும் நபருக்கான கட்டணத்தையும் நாடாளுமன்றம் செலுத்தும்.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலர், இந்தச் சலுகைகளை அலட்சியமாகக் கையாள்வதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், உண்மையில் பயணம் செய்யவேண்டிய நபர்களுக்கு காத்திருப்பிலிருந்து பெர்த் கிடைக்காத நிலை ஏற்படுவதை ரயில்வே கண்டுபிடித்துள்ளது. 2019 -ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினர்களின் ரயில் டிக்கெட்டுகளுக்காக மட்டும், 8 கோடி ரூபாய் வரை கட்டப்பட்டுள்ளது. இது, கடந்த காலங்களை ஒப்பிடுகையில் மிக அதிகம்.

மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்

வழக்கத்தைவிட இந்தத் தொகை அதிகமாக இருக்க, இது தொடர்பான விசாரணையில் இறங்கியிருக்கிறது ரயில்வே. அப்போதுதான் சில உறுப்பினர்கள், ஒரேநாளில் ஒரே இடத்தில் இருந்து பல்வேறு டிக்கெட்டுகளை புக் செய்வதும், தங்களுக்கு உகந்த நேரத்தில் வரும் ரயிலில் பயணம் மேற்கொள்வதும், மற்ற டிக்கெட்டுகளை கேன்சல் செய்யாமலே இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக உறுப்பினர்களுக்குத் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ள மாநிலங்களவை உறுப்பினரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, `இது மிகவும் மோசமான செயல். பொது மக்களின் பணத்தை வீணடிக்கும் செயல்’ என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

மாநிலங்களவை பொதுச் செயலாளர் தேஷ் தீபக் வர்மா, ``மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு இந்த அவை செலுத்தவேண்டிய பாக்கிகளை ஆராய்ந்ததில், சில உறுப்பினர்கள் ஒரேநாளில் பல்வேறு ரயில்களில் டிக்கெட்டுகள் புக் செய்ததும், பயணம் செய்யாத ரயிலின் டிக்கெட்டுகளை ரத்துசெய்யாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பயணம் செய்யாத டிக்கெட்டுகளுக்கும் இந்த அவை பணம் செலவழிக்க வேண்டுமா?

ரயில்
ரயில்
மாதிரி புகைப்படம்

தேவையில்லாத டிக்கெட்டுகளை சரியான நேரத்தில் ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் அவையின் செலவீனங்களைக் குறைக்க முடியும். மேலும், தேவையான நபர்களுக்கு சரியான நேரத்தில் டிக்கெட்டுகள் கிடைக்கும்” என்றார். வெங்கையா நாயுடு உடனான ஆலோசனைக்குப் பின்னர், உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பிய மாநிலங்களவை பொதுச் செயலாளர், ``உறுப்பினர்கள் இனி ரயில் டிக்கெட் புக் செய்து, அதனைப் பயன்படுத்தாமலும், ரத்தும் செய்யாமலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் ஊதியத்திலிருந்து, அந்த டிக்கெட்டுக்கான பணம் பிடித்தம்செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும்... நடைமுறையும்...! #My Vikatan

இது தொடர்பாக அதிகாரிகள் சிலர் பேசுகையில், ``ரயில்வேக்கு இதன் மூலம் நஷ்டம் இல்லை என்றாலும், இது தவறான நடவடிக்கை. செலவுசெய்யும் பணம் என்பது குறைவான தொகை ஒன்றும் கிடையாது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி டிக்கெட்டுக்கான கட்டணங்கள் ரூ.6000 வரை செல்கிறது. இதற்கும் நாடாளுமன்றம்தான் பணம் கட்டுகிறது. இப்படியாக டிக்கெட்டுகளை புக் செய்துவிட்டு தானும் பயணிக்காமல் மற்றவர்களுக்கும் விட்டுத் தராமல் இருப்பது தவறு” என்கிறார்கள். நாடு பொருளாதார ரீதியாகப் பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், மக்கள் பிரதிநிதிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு