Published:Updated:

ராஜ் பவன் Vs தமிழ்நாடு சட்டமன்றம்: ஆளுநருக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றும் முதல்வர், அமைச்சர்கள்!

ஆளுநர் மாளிகை Vs தமிழ்நாடு சட்டமன்றம்

``இந்திய வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஓர் ஆளுநரை, எந்த ஆளுநர் மாளிகையும் பார்த்தது இல்லை" என பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் தவிர தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கட்சிகளும் ரவியின் தன்னிச்சையான போக்குக்குத் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

Published:Updated:

ராஜ் பவன் Vs தமிழ்நாடு சட்டமன்றம்: ஆளுநருக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றும் முதல்வர், அமைச்சர்கள்!

``இந்திய வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஓர் ஆளுநரை, எந்த ஆளுநர் மாளிகையும் பார்த்தது இல்லை" என பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் தவிர தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கட்சிகளும் ரவியின் தன்னிச்சையான போக்குக்குத் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

ஆளுநர் மாளிகை Vs தமிழ்நாடு சட்டமன்றம்

``இந்திய வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஓர் அநாகரிகமான ஆளுநரை, எந்த ஆளுநர் மாளிகையும் பார்த்தது இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவியேற்றுவிட்டு, ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வின் பிரசார பீரங்கிபோல ஆளுநர் செயல்படுகிறார்" என பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் தவிர தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கட்சிகளும் தமிழ்நாடு ஆளுநர் ரவியின் தன்னிச்சையான போக்குக்குத் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. குடியரசுத் தலைவரிடம் மனு, ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம், கண்டனப் பொதுக்கூட்டம் என ஆளுநருக்கு எதிராகப் பொதுவில் கர்ஜித்துக்கொண்டிருந்த தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் தற்போது சட்டமன்றத்திலும் மிகக் கடுமையாகச் சாட்டையைச் சுழற்றி அதிரடி காட்டிக்கொண்டிருக்கின்றன. அப்படி சமீபகாலத்தில் ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், எழுப்பப்பட்ட எதிர்ப்புக் குரல்கள் பற்றி விரிவாகக் காண்போம்.

மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ரவி
மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ரவி

சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது ஆளும் தி.மு.க அரசு. குறிப்பாக, 2023-ம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9-ம் தேதி தொடங்கியபோது, ஆளுநர் உரையை வாசித்த ஆர்.என்.ரவி, தமிழ்நாடு, திராவிட மாடல், சமூக நீதி, பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற வார்த்தைகளை உச்சரிக்காமல் தவிர்த்தார். மேலும், `தமிழ்நாடு’ எனக் குறிப்பிட்ட இடங்களிளெல்லாம் `தமிழகம்’ என வார்த்தையை மாற்றிப்படித்தார். கூடுதலாக உரையில் இடம்பெறாத சிலவற்றையும் சேர்த்துப் படித்தார்.

தமிழ்நாடு அரசு வழங்கிய உரையைத் தன்போக்குக்கு மாற்றி சில தகவல்களைத் தவிர்த்தும், நீக்கியும், சேர்த்தும் படித்த ஆளுநரின் செயல்பாட்டுக்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``அமைச்சரவை கூடி ஒப்புதல் வழங்கிய உரையை மாற்றி வாசித்த ஆளுநர் உரை அவைக்குறிப்பில் இடம்பெறாது" என அதிரடியாகத் தீர்மானம் கொண்டுவந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர் ரவி, தேசியகீதம் பாடுவதற்கு முன்பாகவே சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த சம்பவமும் நிகழ்ந்தது.

சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யும் ஆளுநர்
சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யும் ஆளுநர்

அதைத் தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி இரண்டாவது முறையாக ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குக் காரணமும் ஆளுநரின் தன்னிச்சையான நடவடிக்கைகள்தான். குறிப்பாக, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 14-க்கும் மேற்பட்ட சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டுவந்தார். குறிப்பாக, ஆன்லைன் ரம்மியால் 44 உயிர்ப்பலிகள் ஏற்பட்டும் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடைசெய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம்தாழ்த்திவந்தார்.

ஆன்லைன் சூதாட்டம்: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்
ஆன்லைன் சூதாட்டம்: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்

அந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசிய ஆளுநர் ரவி, ``ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நிறுத்திவைக்கப்படும் மசோதாக்களைக் குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்துக்காகவே நாகரிகமாக நிறுத்திவைப்பு என்கிறோம். நிறுத்திவைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகத்தான் பொருள்" என தான்தோன்றித்தனமாகவும் பதிலளித்தார். இதற்கு பா.ஜ.க தவிர அனைத்துக் கட்சிகளும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தன.

அந்த நிலையில்தான், `சட்டமன்றத்தில் ஆளுநர் குறித்து பேசக் கூடாது, அவருக்கு எதிராகத் தீர்மானம் மேற்கொள்ளக் கூடாது' என்று உள்ள விதியைத் தளர்த்துவதற்கான தீர்மானத்தை தி.மு.க அரசு கொண்டுவந்தது. இந்தத் தீர்மானத்துக்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்பதால், சட்டப்பேரவையில் கதவுகள் மூடப்பட்டு வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. அப்போது தீர்மானத்துக்கு ஆதரவாக 144 வாக்குகளும் எதிராக பா.ஜ.க-வின் இரண்டு வாக்குகளும் பதிவாயின. இது போன்று வாக்கெடுப்பு நடத்தப்படுவது 2017-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவே முதல்முறையாக இருந்தது.

ஆளுநர் ரவி, 
முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து, ஆளுநர் ரவி தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து பேசினார். அப்போது, ``ஆளுநர், அரசியல் சட்டத்தைக் கடந்து ஓர் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் இப்படியொரு தீர்மானத்தை ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நான் முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார். நமது ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் `நண்பராக' இருப்பதற்குத் தயாராக இல்லை என்பதை அவர் பதவியேற்றதிலிருந்து செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்திவருகின்றன" எனக் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, ``மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசையும், மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களையும் வலியுறுத்துவது என்றும் மக்களாட்சி தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இந்தச் சட்டமன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், இந்தப் பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்துக்குள் ஒப்புதல் அளித்திட வேண்டுமென்று, ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இந்தப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" எனும் தீர்மானத்தை நான் மொழிகிறேன் எனக் கூறி நிறைவுசெய்தார்.

சட்டமன்றம்
சட்டமன்றம்

சட்டமன்றத்தில் ஆளுநரை விளாசியெடுத்த அமைச்சர்கள் உரை:

சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது ஒருபுறமிருக்க, ஆளுநரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கும் பேச்சுகளும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மத்தியில் அதிகரித்திருக்கின்றன.

குறிப்பாக, கடந்த 10-ம் தேதி சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ``ஆளுநர் பதவி தேவையில்லை என்பது எங்கள் கட்சி தோன்றியபோதே பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்களெல்லாம் ஆளுங்கட்சியாக வருவோமோ என்று தெரியாதபோதே ஆளுநர் தேவையில்லை என்று தெரிவித்த கட்சி தி.மு.க. பல மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக்கெல்லாம் காரணம் ஆளுநர்கள்தான். மேற்கு வங்கத்தில் மம்தாவோடு செய்த தகராறு காரணமாக சபாஷ் கொட்டி ராஜ்யசபா தலைவராக்கியிருப்பார்கள். அதைப் பார்த்துதான் நமது ஆளுநருக்கு ஒரு நப்பாசை.

சட்டப்பேரவை  | ஸ்டாலின் | துரைமுருகன்
சட்டப்பேரவை | ஸ்டாலின் | துரைமுருகன்

ஆளுநரை போய் பலமுறை நாங்கள் பார்த்திருக்கிறோம். முதல்வரோடு நான் சென்றிருக்கிறேன், பேசியிருக்கிறோம். ஆனால், பேசினோமே தவிர காரியம் ஒன்றும் நடக்கவில்லை. இவர் மனதில் ஒரு மாதிரியாக உள்ளே வைத்துக்கொண்டு பேசுகிறார். அவர் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது என்பது நிராகரிக்கப்பட்டது என்று அர்த்தம் என ஆளுநர் பெருமையாகக் கூறிவருகிறார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருப்பவர்கள் ஆளுநராக மட்டும் அல்ல, இந்தியக் குடிமகனாகவே இருக்கத் தகுதியற்றவர்கள். உங்களுக்கு ஒரு கட்சிக் கொள்கை இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு போங்கள்!" எனக் காட்டமாகப் பேசினார்.

மேலும், ``ஆளுநர் மாளிகையில் ஒளிபரப்பப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் படத்தில், காந்தியும் இல்லை, நேருவும் இல்லை; ஆனால் சாவர்க்கர் அடிக்கடி காட்டப்பட்டார். காந்தி இல்லாமல் சுதந்திரப் போராட்டமா... யார் அப்பன் வீட்டுப் பணத்தை வைத்து அவர் இல்லாத படத்தைக் காட்டுகிறீர்கள்... பா.ஜ.க-வாக இருந்தால், போய் அந்தக் கட்சியில் சேர்ந்துவிடுங்கள்!" என ஆளுநருக்கு எதிராக ஆத்திரமாகப் பேசினார்.

அதேபோல, கடந்த 18-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி இதற்கான மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநருக்கும் சித்த மருத்துவத்துக்கும் என்ன சண்டையென்றே தெரியவில்லை.

ஆளுநர் ரவி, 
முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்

ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நீண்டநாள்களாக இருப்பிலேயே வைத்திருந்தார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் அழுத்தத்தின் காரணமாகக் கேட்டபோது, மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. பிறகு, இரண்டாவது முறையாக மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. இரண்டாவது முறையாகத் திருப்பி அனுப்பப்பட்ட பிறகும் கடந்த மாதம் ஆளுநர் ஒரு விளக்கம் கேட்டு அனுப்பியிருக்கிறார்" என ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சாடினார்.

இந்த நிலையில், ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் ஆளுநர் செலவினங்கள் தொடர்பாகப் பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ``நிதித்துறை விதியைப் பின்பற்றுவது நம் கடமை. அதனடிப்படையில், ஆளுநர் செலவினங்கள் தொடர்பாக மூன்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில், ஐந்து கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் செலவினங்களை இந்த ஆண்டு மூன்று கோடியாகக் குறைத்திருக்கிறோம்.

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

காரணம், கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட இரண்டு கோடி நிதியை அவர்கள் செலவு செய்யாமல் இருக்கின்றனர். அதேபோல, ஆளுநர் நிதிகள் கணக்கில் வராமல் இருப்பதை, மத்திய அரசு தணிக்கை செய்வதற்கு முன்பாக, மாநில அரசு அதைத் தணிக்கை செய்வதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், நிதி மேலாண்மை விதிமுறைக்கு உட்பட்டு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு விரைவில் முதலமைச்சர் கையெழுத்திடுவார்" எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``ஆளுநர் செலவினங்களில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. அது ஆளுநராக இருந்தாலும் ஆண்டவனாக இருந்தாலும் தப்பு செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தாக வேண்டும். இல்லையெனில், அது சரிசெய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்றார். தொடர்ந்து, ``தமிழ்நாட்டுக்கு புதிய சட்டமன்றம் கட்டப்பட வேண்டும். ஆளுநர் மாளிகை இருப்பது தமிழ்நாடு அரசின் இடம்தான், அங்குகூட கட்டலாம்" என ஆளுநரை சீண்டும்வகையில் கலாய்த்திருக்கிறார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

இப்படி தி.மு.க அமைச்சர்கள் மட்டுமல்லாமல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., த.வா.க என பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களும் சட்டமன்றத்தில் ஆளுநர் தொடர்பாக தனித் தீர்மானங்கள் நிறைவேற்றியும், விமர்சித்தும் பேசிவருகின்றனர்.