Published:Updated:

சுருக்கமாக பேசுங்கள்; அமைச்சர் பதில் அளிக்கட்டும்!'- நாடாளுமன்ற அவையை நடத்திய ஆ.ராசா

நாடாளுமன்ற அவையை தி.மு.க எம்.பி ஆ,ராசா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து நடத்தினார்.

ராசா
ராசா

நாட்டின் 17-வது நாடாளுமன்றக்கூட்டத்தொடர் கடந்த சில நாள்களுக்கு முன் தொடங்கியது. தமிழகத்திலிருந்து சென்ற தி.மு.க எம்.பிக்கள் தமிழில் பதவிப்பிரமாணம் செய்தனர். தி.மு.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளை எழுப்பி வருகின்றனர். அவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

ராசா
ராசா

அந்த வகையில் நேற்று நாடாளுமன்றத்தில் கல்லூரி ஆசிரியர் நியமன சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யபட்டது. இந்த மசோதா ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தாலும் முற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது. மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் இந்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மசோதா மீதான விவாதத்தில் பேசிய ஆ.ராசா, ``பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்படுத்தபட்டோருக்கு, கடன், கல்வி உதவித்தொகையை நீங்கள் வழங்கலாம். கல்விக்கட்டணத்தைக்கூட நீங்கள் ரத்து செய்யலாம். ஆனால், தனி இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது, இட ஒதுக்கீட்டின் நோக்கத்துக்கு பங்கம் விளைவிப்பதாகும். இன்னமும் நீங்கள் துரோணாச்சாரியார்களாவே இருக்கிறீர்கள். அதற்காக நீங்கள் கட்டைவிரலை கேட்டவுடன், அதை வெட்டித்தரும் ஏகலைவர்களாக நாங்கள் இருக்கமுடியாது” என்று காரசாரமாக பேசினார்.

கேரளா எம்.பி
கேரளா எம்.பி

இதையடுத்து சபாநாயகர் இல்லாத சமயங்களில் அவை உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்துவது வழக்கம். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்கள், அவையை நடத்தலாம். அதனடிப்படையில், சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று இல்லாத நிலையில், தி.மு.கவின் நீலகிரி தொகுதி எம்.பியான ஆ.ராசா அவையை நடத்தினார். அவர் சபாநாயகராக செயல்பட்டபோது கேரளாவின் மாவேலிக்கரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் (காங்கிரஸ்) சுரேஷ் கொடிகுனில் அவர் தொகுதி பிரச்சனைகள் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராசா அவரை சுருக்கமாக முடித்துக்கொள்ளுங்கள், அமைச்சர் அதுகுறித்து பதிலளிக்க வேண்டும் எனக்கூறினார்.