Published:Updated:

தலைமை தகவல் ஆணையர் ஆகிறாரா ராஜகோபால் ஐ.ஏ.எஸ்?

ஜெயலலிதாவுடன் ராஜகோபால்
ஜெயலலிதாவுடன் ராஜகோபால்

கவர்னரின் செயலாளராக இருக்கும் ராஜகோபால் ஐ.ஏ.எஸ். தலைமை தகவல் ஆணையராக நியமிக்க அரசு முடிவு செய்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் அதிகாரம் கொண்டது தகவல் ஆணையங்கள். தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷீலா பிரியா 2017 டிசம்பர் 8-ம் தேதி பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலம் 2019 மே மாதம் முடிவடைந்தது. காலியாக உள்ள தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனக் கடந்த ஜூலை மாதம் அரசு அறிவித்தது.

rti
rti

தகவல் ஆணையருக்குத் தகுதியானவர்கள் பொதுமக்கள் வாழ்க்கை முறையை நன்கு அறிந்தவர்கள், சட்டத்தில் முன் அனுபவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நிர்வாகம், இதழியல், ஆளுமை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வெங்கடேசன் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு செயல்படும் தேடுதல் குழு புதிய தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் என ஏற்கெனவே அரசு சொல்லியிருந்தது.

இப்படியான சூழலில் இந்தப் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக இருக்கும் ராஜகோபால் ஐ.ஏ.எஸ் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தலைமை தகவல் ஆணையர் அல்லது ஆணையர்கள் பதவிக்கு இதுவரையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதிகள்தான் தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு நியமிக்கப்பட்டுவந்தார்கள். கவர்னரின் செயலாளராக இருந்த ஷீலா ப்ரியாவும் தலைமைச் செயலாளராக இருந்த ஶ்ரீபதியும் ஓய்வுக்குப் பிறகு தலைமை தகவல் ஆணையராகப் பொறுப்புக்கு வந்தார்கள்.

ஷீலா ப்ரியா பதவி ஏற்ற போது..
ஷீலா ப்ரியா பதவி ஏற்ற போது..

தலைமைச் செயலாளர் ரேங்கில் இருக்கும் ராஜகோபால், தலைமைச் செயலாளர் பதவிக்கு வர விரும்பினார். இந்த நிலையில் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு அவரை நியமிக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது. முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் ஒருவர் என மூன்று பேர் அடங்கிய குழுதான் தகவல் ஆணையரைட் தேர்வு செய்யும். இந்தக் குழுவின் கூட்டம் விரைவில் கூட்டப்படலாம். அதில் ராஜகோபால் தேர்வு செய்யப்படுவார் எனக் கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பின் செல்ல