Published:Updated:

ராஜகண்ணப்பன் - திருமா 'நாற்காலி' சர்ச்சை! - உண்மையில் நடந்தது என்ன?

ராஜகண்ணப்பன் - திருமா

சோபா நாற்காலியில் அமைச்சர் ராஜகண்ணப்பனும், பிளாஸ்டிக் நாற்காலியில் திருமாவளவனும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அந்தப் புகைப்படம்தான் தற்போது சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.

ராஜகண்ணப்பன் - திருமா 'நாற்காலி' சர்ச்சை! - உண்மையில் நடந்தது என்ன?

சோபா நாற்காலியில் அமைச்சர் ராஜகண்ணப்பனும், பிளாஸ்டிக் நாற்காலியில் திருமாவளவனும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அந்தப் புகைப்படம்தான் தற்போது சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.

Published:Updated:
ராஜகண்ணப்பன் - திருமா

``தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி-யை அவமதித்துவிட்டார். இதுதான் தி.மு.க கடைபிடிக்கும் சமத்துவமா?'' என சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படத்தை முன்வைத்து, அமைச்சர் ராஜகண்ணப்பனை சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாள்களாக நெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர். அதேபோல, ``இதுதான் நீங்கள் கடைபிடிக்கும் சுயமரியாதையா?'' என திருமாவளவனை நோக்கியும் அவர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

ராஜகண்ணப்பன் - திருமா
ராஜகண்ணப்பன் - திருமா

கடந்த 31-ம் தேதி அமைச்சர் ராஜகண்ணப்பனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை வாழ்த்துவதற்காக அவரின் இல்லத்துக்குச் சென்றார் திருமாவளவன். சந்திப்புக்குப் பிறகு, இருவரும் அருகருகே அமர்ந்து பேசும் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில், சோபா நாற்காலியில் அமைச்சர் ராஜகண்ணப்பனும் பிளாஸ்டிக் நாற்காலியில் திருமாவளவனும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அந்தப் புகைப்படம்தான் தற்போது சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது. ``அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதிய மனநிலையோடுதான் இப்படி நடந்துகொண்டார்'' என அவர்மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோல, ``இப்படியொரு நாற்காலியில் அமரச் சொன்னால், முடியாது எனத் திரும்பி வராமல் கைகட்டி அமர்ந்திருக்கிறார்'' என திருமாவளவனையும் சிலர் விமர்சித்துவருகின்றனர்.

உண்மையில் அன்று நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசுவிடம் பேசினோம்.

``அமைச்சர் கண்ணப்பன் வீட்டுக்கு வெளியில் வந்து எங்கள் தலைவரை வரவேற்றார். அவர் அமர்திருப்பதைப்போலவே பக்கத்தில் இருந்த நாற்காலியில்தான் எங்கள் தலைவரையும் அமரச் சொன்னார். தலைவர்தான் விருப்பப்பட்டு இந்த நாற்காலியில் அமர்ந்தார். இப்போது மட்டுமல்ல, பொதுக்கூட்ட மேடைகளில் அவருக்கென்று பிரத்யேகமான இருக்கை தயார் செய்வோம். ஆனால், அதில் அவர் உட்கார மாட்டார். நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது கால்மேல் கால் போட மாட்டார். அவருடைய அணுகுமுறை முதிர்ச்சியாக இருக்கும். கட்சித் தொண்டர்கள் வீட்டுக்குப் போனால், பாயில் உட்கார்ந்துகொள்வார். எப்போதும், எங்கேயும் எளிமையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார். அது அவருடைய இயல்பு.

வன்னி அரசு - வி.சி.க
வன்னி அரசு - வி.சி.க

அதேபோல, கைகைட்டி உட்காருவதும் அவருடைய பழக்கம். அவர் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை நீங்கள் பார்த்தாலே அது தெரியும். ஆனால், `அமைச்சருக்கு முன்பாக அடக்க ஒடுக்கமாக இருக்கிறார் திருமாவளவன்’ எனச் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். எங்கள் தலைவரின் மீது சாதியரீதியாக வன்மம், வெறுப்பு இருப்பவர்கள் இந்த வழியில் அதைத் தீர்த்துக்கொள்கின்றனர். அரசியல்ரீதியாக எங்களின் மீது விமர்சனங்களை முன்வைக்க முடியாதவர்கள், எங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள்தான் இப்படி நடந்துகொள்கின்றனர். சமூக வலைதளங்களில் இந்த வேலையைச் செய்வது நாம் தமிழர் கட்சியினர்தான். அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குத் தெரிந்து செய்கின்றனரா, அவரே இதை ஊக்கப்படுத்துகிறாரா என்று தெரியவில்லை. அதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், இது போன்ற செயல்கள் வன்மையான கண்டனத்துக்கு உரியவை'' என்றார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில் பேசினோம்.

``அமைச்சர் அமர்ந்திருப்பதைப்போலவே அருகில் இன்னொரு நாற்காலி இருக்கிறது. அதில்தான், திருமாவளவன் அவர்களை அமரச் சொன்னோம். ஆனால், நடுவில் சிலை இருந்ததால், நாற்காலியில் அமர்ந்துகொண்டு முகம்பார்த்துப் பேசுவதற்கு தோதாக இல்லையென்று அவர்தான் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார். இருவரும் நீண்டகால நண்பர்கள். பழைய விஷயங்களைச் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தனர். திருமாவளவன் கிளம்பியபோதுகூட வாசல்வரைக்கும் சென்று வழியனுப்பிவிட்டு வந்தார் அமைச்சர். ஆனால், உண்மை என்னவென்று தெரியாமல் சிலர் வேண்டுமென்றே அமைச்சர்மீது அவதூறு பரப்பிவருகின்றனர்'' என்றனர் ஆதங்கமாக.

ராஜகண்ணப்பன்
ராஜகண்ணப்பன்

மேற்கண்ட இந்தப் புகைப்படத்தை நாம் தமிழர் கட்சியினர்தான் சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர், விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு குறித்து, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், பாக்கியராசனிடம் பேசினோம்.

``எங்கள் கட்சியினர் யாரும் அந்தப் படத்தைப் பகிரவில்லை, விமர்சனங்களை முன்வைக்கவில்லை. ஒரு சிலர் `அண்ணன் திருமாவளவன் எப்படி இருக்க வேண்டியவர், ஏன் இப்படி அமர்ந்திருக்கிறார்...’ என ஆதங்கத்தில் சில கருத்துகளைப் பதிவிட்டிருக்கலாம். சாதியக் கண்ணோட்டத்தில் செய்தார்கள் என்பதெல்லாம் தவறான குற்றச்சாட்டு'' என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism