Published:Updated:

சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்? - சர்ச்சையும் அமைச்சரின் பதிலும்!

சர்ச்சை

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தன்னை சந்திக்க வந்த பழங்குடியின மக்களை சாதிய வன்மத்தோடு மரியாதை குறைவாக நடத்தினாரா? என்பதற்கு அமைச்சரும், தனுஷ்குமார் எம்.பி.யும் விளக்கம் அளித்துள்ளனர்.

சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்? - சர்ச்சையும் அமைச்சரின் பதிலும்!

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தன்னை சந்திக்க வந்த பழங்குடியின மக்களை சாதிய வன்மத்தோடு மரியாதை குறைவாக நடத்தினாரா? என்பதற்கு அமைச்சரும், தனுஷ்குமார் எம்.பி.யும் விளக்கம் அளித்துள்ளனர்.

Published:Updated:
சர்ச்சை

குருவிக்காரர்கள், நரிக்குறவர்களை, பழங்குடியினர் பெயரில் குறவர் பட்டியலில்(ST) சேர்க்கும் தமிழக அரசின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை கண்டித்தும், குஜராத் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட அவர்களை, தமிழ்குடி குறவர் பட்டியலோடு சேர்க்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டியில் வன வேங்கை கட்சியினர் கடந்த ஒரு வாரக்காலமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.

உண்ணாவிரதம்
உண்ணாவிரதம்

இந்நிலையில், மக்களின் போராட்டத்தை அறிந்த தொகுதி தி.மு‌.க.எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வனவேங்கை கட்சி நிர்வாகிகளை அழைத்துச்சென்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கைகளை எடுத்துச்சொல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 23-ந்தேதி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனை சென்னையிலுள்ள அவரின் இல்லத்தில் வன வேங்கை கட்சி தலைவர் இரணியன் மற்றும் மாநில நிர்வாகிகள் சந்திக்க சென்றனர். அப்போது, அலுவல்ரீதியாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனை சந்திக்க தென்காசி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தனுஷ்குமார் எம்.பி.யும் அங்கு வந்திருக்கிறார்.

இந்நிலையில், வனவேங்கை கட்சியினரை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சந்திக்க அழைத்தபோது, தனுஷ்குமார் எம்.பியும் அவர்களுடன் நின்றுள்ளார். அப்போது பேசிய அமைச்சர், வனவேங்கை கட்சி நிர்வாகிகளையும், தனுஷ்குமார் எம்.பி.யையும் நிற்கவைத்தே பேசி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தச்சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன நிலையில் இந்தவிவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்ணாவிரதம்
உண்ணாவிரதம்

சாதிய வன்மத்தோடு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நடந்துகொண்டாரா? குற்றச்சாட்டின் பிண்ணனியில் நடந்தது என்னவென்பதை அறிய வனவேங்கை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உலகநாதனிடம் பேசினோம்.

உலகநாதன்
உலகநாதன்

``எங்களது கட்சி பழங்குடி மக்களுக்கான கட்சி. தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர்(ST) பெயரில் குறவர் இனத்தோடு சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் யாரும் உண்மையில் குறவர்கள் இல்லை. குருவிக்காரர்கள் குஜராத்தை பூர்விகமாக கொண்டவர்கள். இவர்கள் நக்கலே, வாக்கரிபோலே என இரு சாதிப்பிரிவினராக உள்ளனர். இவர்களது மொழி ஹிரானி. இந்த மொழிக்கு எழுத்துருவம் கிடையாது. அதேபோல நரிக்குறவர்களும் குறிஞ்சி நிலத்தினுடைய குறவர்கள்‌ கிடையாது. இந்த இரு சமூகத்தினரையும் தமிழ்க்குடி குறவர் இனத்தின் பெயரை சொல்லி அழைப்பதால் அரசுத்திட்டங்கள், பயன்கள், ஒதுக்கீடு என எல்லாம் அவர்களுக்கே செல்கிறது. இது உண்மையான இனத்திற்கு கிடைக்க வேண்டிய பலனை கெடுப்பதாகும்.

எனவே, அவரவர் சாதிப்பெயரிலேயே அந்த இனமக்கள் அழைக்கப்படவேண்டும். இரண்டு வெவ்வேறு சாதிகளையும் ஒரே பெயரால் குறவர் என அழைக்கக்கூடாது. ஊசி,பாசி விற்பவர்கள், ஆபாசமாக உடையணிந்து நடனமாடுவதெல்லாம் குறவர் இனத்தின் அடையாளமே கிடையாது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்‌.காலத்திலிருந்தே திரைப்படங்களின், வழியாகவும், சொல்லாடல்கள் வழியாகவும் குறவர் இனத்தின் அடையாளம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அமித்ஷா போன்றவர் கூட குறவர் இன மக்களின் வீட்டில் அசைவ உணவு சாப்பிட்டோம் என வெளியே விளம்பரப்படுத்துவதும் உண்மையான தமிழ்க்குடி குறவர்களை குறிப்பது இல்லை.

எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை
எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

இப்படியான குற்றச்சாட்டின்‌ மூலமாக அவர்களுக்கான உரிமையை பறிக்க நினைப்பது எங்கள் நோக்கமல்ல. அவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆனால், குறவர் இனத்தின் பெயரால் அவர்களை பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதே எங்களது கோரிக்கை. இதுதொடர்பாக தொடர் போராட்டம் நடத்தினோம். மனுக் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவேதான் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை வழங்கிய ஒப்புதலை திரும்பபெற வலியுறுத்தியும் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினோம்.

இதில் எங்கள் தலைவர் இரணியன் உள்பட அனைவரும் கலந்துக்கொண்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல்நலம்குன்றி தலைவர் இரணியன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில்தான் ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் எங்களை சந்தித்து போராட்டத்தை வாபஸ் வாங்க கேட்டுக்கொண்டார். ஆனால் நாங்கள் எங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை, போராட்டத்தை கைவிடமாட்டோம், இதுசம்பந்தமாக தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்ததன்பேரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு தகவல் சொல்லி அனுமதி வாங்கிவிட்டதாக கூறினார். இதைத்தொடர்ந்தே, மாநில நிர்வாகிகள் என்ற முறையில் தலைவர் இரணியன், நான் மற்றும் இதர மாவட்ட கட்சி உறுப்பினர்கள் 15 பேர் அமைச்சரை சந்திக்க கடந்த 23-ந்தேதி சென்னைக்கு சென்றோம்.

கோரிக்கை
கோரிக்கை

அங்கு, கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர் தங்கியுள்ள அன்பு இல்லத்திற்கு காலை 11 மணிக்கு சென்றுவிட்டோம். ஆனால், அமைச்சரை சார்ந்தவர்கள் எங்களை வேண்டுமென்றே மதியம் 3 மணி வரை வெளியே காத்திருக்க வைத்தனர். காலத்தாமதம் குறித்து விசாரித்தபோது அமைச்சர் தூங்கிக்கொண்டிருக்கிறார் என எங்களுக்கு தெரியவந்தது. அந்தசமயம் கட்சி சார்ந்து அலுவல்ரீதியான பணிக்கு அமைச்சரை சந்திப்பதற்காக தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தனுஷ்குமார் எம்.பி.யும் அங்கு வந்தார். எங்களை சந்தித்ததும் கோரிக்கைகளை கேட்டறிந்த தனுஷ்குமார் எம்.பி., இதுகுறித்து அமைச்சரிடம் பேசலாம் என கூறினார். ஒருவழியாக, பிற்பகல் 3 மணிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்‌ எங்களை சந்திக்க உள்ளே அழைத்தபோது எங்களுடன் தனுஷ்குமார் எம்.பி.யும் வந்தார்.

உலகநாதன்
உலகநாதன்

வீட்டினுள்ளே, மேல் சட்டை இல்லாமல் லுங்கி, பனியனுடன் சோஃபாவில் அமர்ந்திருந்த அமைச்சர், எங்களை பார்த்து 'என்ன விஷயமாக பார்க்க வந்துருகீங்கனு' எதுவும் தெரியாதது போலவே எங்களிடம் கேட்டார். அப்போது, ஏற்கனவே நாங்கள் போராட்டக்களத்திலிருந்து அவரை பார்க்க வந்ததை விளக்கிச் சொன்னபின்பும், 'அப்படியா என்கிட்ட யாரும் இதைபற்றி சொல்லலியே‌ சரி மனு எதுவும் கொண்டு வந்திருக்கீங்களானு' கேட்டு எங்களின் கோரிக்கையை வாங்கி படித்தார். இது நடக்கும்போதே, 'ஓ.. குறவர் சமுதாயமா நீங்க.. உங்களுக்குள்ளேயே 2 பிரிவாகத்தான இருக்கீங்க. அவங்களை உங்களோட சேர்க்கிறதுனால என்ன பிரச்சினை'னு கேட்டுக்கொண்டே மனுவை மேசை மீது வைத்துவிட்டு கால்மேல் கால்தூக்கி போட்டுக்கொண்டார்'. அங்கே, அமர்ந்து பேசுவதற்கு பக்கத்திலேயே சோஃபாக்கள் இருந்தது. ஆனால், மரியாதைக்குக்கூட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எங்களை உட்காருங்கனு சொல்லவில்லை. நாங்கள் கூட பரவாயில்லை, ஆனால் எங்கள் தலைவர் இரணியன் உடல்நலம் சரியில்லாத நிலையிலும் அமைச்சரை சந்திக்க வந்திருந்தார். அமைச்சரை பார்த்து பேசும்போதும் கூட தலைவர் இரணியனின் கை நரம்பில் மருத்துவமனையில் க்ளுக்கோஸ் ஏற்றப்பட்டதற்கான ஊசி இருக்கும். அதை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கவனித்தும் கூட இரணியனை அமரச்சொல்லாமலும் அருகே வந்து பேசுவதற்கு அனுமதிக்கமாலும் சாதிய வன்மத்தோடும், தீண்டாமை எண்ணத்துடனும் எங்களிடம் நடந்துக் கொண்டார்.

அமைச்சரை சந்திப்பதற்காக நாங்கள் வாங்கிச் சென்ற பூங்கொத்து, சால்வையை கூட அவர் முறையாக பெற்றுக் கொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக எங்களது சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. அந்த 20 நிமிடமும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை சந்திக்க உள்ளே சென்ற நாங்கள் 15 பேரும் நின்றுக்கொண்டுத்தான் இருந்தோம். இதில் எங்களுடன் தனுஷ்குமார் எம்.பி.யும்‌ நின்றுக்கொண்டிருந்தார். அமைச்சரின் இந்தசெயல் திராவிட மாடல் ஆட்சி செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அழகல்ல‌.

மறியல் போராட்டம்
மறியல் போராட்டம்

நாங்கள் அவமானப்படுத்தப்பட்ட தகவல் அறிந்த மலையடிப்பட்டி வன வேங்கை கட்சியினர், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை கண்டித்து ராஜபாளையத்தில் டிஜிட்டல் பேனர் வைத்தனர். இதை காவல்துறையை ஏவி ஆளும்கட்சியினர் அகற்றினர். இதனால் கொதிப்படைந்த எங்கள் கட்சியினர் 300க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுடன் திரண்டு இரவில் ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸ் மூலம் எங்கள்மீது தடியடி நடத்தினர். இதில், எங்கள் பட்டியலின மக்கள் பலர் காயமடைந்தனர். பலரை போலீஸ் கைது செய்தது. போலீஸின் இந்த அத்துமீறல்களை கண்டித்து தமிழகம் முழுவதும், வனவேங்கை கட்சியினர் சார்பில் கண்டன போராட்டங்களும், உள்ளிருப்பு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன" என கொதிப்புடன் பேசினார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனிடம் பேசுகையில், "நான், அவர்களை மரியாதை குறைவாக நடத்தியதாக சொல்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சொல்லப்படும் குற்றச்சாட்டு. மக்களோடு மக்களாக இருப்பதால்தான் இன்றைக்கும் நான் எம்.எல்.ஏ.வாக உள்ளேன். அதேப்போல, தனுஷ்குமார் எம்.பி.யும் நானும் தந்தை-மகன் உறவாகத்தான் பழகி வருகிறோம். எனவே தனுஷ்குமார் எம்.பி.யை சிறுமைப்படுத்துவதற்காக எதுவும் செய்யவில்லை. அரசியலில் பரபரப்பாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக சிலர் இந்த விஷயத்தை பெருசுப்படுத்துகிறார்கள்" என்றார்.

தனுஷ்குமார் எம்.பி.நம்மிடம் பேசுகையில், "அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்‌ என் தந்தைக்கு சமமானவர். ஆகவே, என் தந்தை முன்னால், நின்றதற்காக நான் பெருமைப்படுகிறேன். ஆனால் இதை தேவையின்றி அரசியலாக்கி பார்க்கின்றனர். அவர்களின் அரசியல்களுக்கெல்லாம் பதில் சொல்லி அமைச்சரின் மீதான எனது மரியாதையை குறைத்துக்கொள்ள முடியாது" என்றார் தன்னடக்கமாக.