Published:Updated:

ரூ.25 கோடி... நட்சத்திர விடுதி... காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ராஜஸ்தான் ரகளை!

அசோக் கெலாட்
அசோக் கெலாட் ( Photo: Twitter / Ashokgehlot51 )

மூன்று ராஜ்ய சபா எம்.பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுப்பதற்கு பா.ஜ.க குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு ராஜஸ்தான் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் 2018-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி முதல் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவரான சச்சின் பைலட், துணை முதல்வராக இருக்கிறார். 200 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ-க்களும், எதிர்க் கட்சியான பா.ஜ.க-வுக்கு 72 எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர்.

அங்கு, மூன்று ராஜ்ய சபா எம்.பி-க்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதற்கு, குதிரைபேரத்தில் பா.ஜ.க ஈடுபடுகிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்தில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததைப் போல ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற பா.ஜ.க முயற்சிசெய்வதாக காங்கிரஸ் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க அரசுகளை அகற்றிவிட்டு, காங்கிரஸ் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் முதல்வர் கமல்நாத்துக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, கமல்நாத் அரசைக் கவிழ்க்க ஜோதிராதித்யா முடிவுசெய்தார். ஜோதிராதித்யாவின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 17 பேர் பெங்களூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர்.

கமல்நாத்
கமல்நாத்
Photo: AP

கமல்நாத் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க செய்யும் வேலை இது என்று காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டிவந்த நிலையில், திடீரென ஜோதிராத்தியா சிந்தியா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக தலைவர் சோனியா காந்திக்கு சிந்தியா கடிதம் அனுப்பினார். கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிந்தியாவை கட்சியிலிருந்து காங்கிரஸ் நீக்கியது.

அதைத் தொடர்ந்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான அமைச்சர்கள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸிலிருந்து விலகினர். கவர்னருக்கு ராஜினாமா கடிதங்களை அனுப்பினர். 228 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் 22 பேர் ராஜினாமா செய்ததால், காங்கிரஸின் பலம் 99 ஆகக் குறைந்தது. ஆட்சியமைக்க 105 உறுப்பினர்கள் வேண்டும். பா.ஜ.க-வுக்கு 107 எம்.எல்.ஏ-க்கள் இருந்ததால் அவர்கள் ஆட்சியமைத்தனர்.

ஜோதிராதித்யா
ஜோதிராதித்யா

அதேபோன்ற கதைதான் இப்போது ராஜஸ்தானிலும் அரங்கேற்றப்படுகிறது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைப் பேரம் பேசி விலைக்கு வாங்க பா.ஜ.க முயற்சி செய்கிறது என்றும், பா.ஜ.க -வுக்கு ஆதரவு அளித்தால் ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் தலா ரூ. 25 கோடி வழங்கப்படும் என்று பா.ஜ.க தூண்டில்போடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. மேலும், பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிக்க முன்வரும் எம்.எல்.ஏ-க்களுக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.10 கோடி வழங்கப்படும் என்று பா.ஜ.க உறுதியளித்திருப்பதாகவும் காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்தப் பரபரப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தன் எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஜெய்ப்பூர் புறநகர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏ -க்கள் அனைவரும் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுடன், காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளித்துவரும் சுயேச்சை எம்.எல்.ஏ -க்களும் தங்கவைக்கப்பட்டனர். அந்த விடுதிக்கு வெளியே சாதாரண உடை அணிந்த ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர். பிறகு, அவர்கள் அனைவரும் JW மரியட் நட்சத்திர விடுதிக்கு இடம் மாற்றப்பட்டனர். அங்கு, முதல்வர் அசோக் கெலாட்டும் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் முகாமிட்டுள்ளனர். அங்கு, ராஜ்யசபா எம்.பி தேர்தலில் வாக்களிப்பதற்கான பயிற்சிகள், அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மோடி
மோடி

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் சட்டமன்ற கொறடாவுமான மகேஷ் ஜோஷி, ராஜஸ்தான் போலீஸ் டிஜிபி-க்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எம்.எல்.ஏ-க்கள் விலைக்கு வாங்கியதைப்போல, ராஜஸ்தானிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க குதிரைபேரத்தில் பா.ஜ.க ஈடுபட்டுவருகிறது என்று தமக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசைக் கவிழ்க்கும் முயற்சி நடைபெறுகிறது என்றும், தங்கள் கட்சியின் எம்.எல்.ஏ-க்களையும், தங்கள் அரசை ஆதரிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களையும் விலைக்கு வாங்க பா.ஜ.க முயற்சி செய்கிறது என்றும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

மார்ச் மாதத்தில் இருந்து எட்டு எம்.எல்.ஏ-க்கள் விலகல்... என்ன நடக்கிறது குஜராத் காங்கிரஸில்?

மூன்று ராஜ்யசபா எம்.பி-க்களைத் தேர்வுசெய்ய தங்களிடம் போதுமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார். மேலும், ``பா.ஜ.க குதிரைபேர முயற்சியில் ஈடுபட்டாலும், காங்கிரஸ் முகாமில் எந்தச் சிக்கலும் இல்லை. ராஜ்யசபா தேர்தலுக்கு மூன்று நபர்களை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்துள்ளார். மாநிலத் தலைவர் என்ற முறையில் அவர்களை வெற்றிபெற வைப்பது என் கடமை. அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு 101 எம்.எல்.ஏ-க்கள் தேவை. எங்களிடம் 107 எம்.எல்.ஏ -க்கள் இருக்கிறார்கள். மேலும், எங்கள் அரசை 12 சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் ஆதரிக்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

மோடி - அமித்ஷா
மோடி - அமித்ஷா

இந்தப் பரபரப்புக்கு மத்தியில், ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டிக்கான மேலிடப் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டேவையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலாவையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உடனடியாக ராஜஸ்தானுக்கு அனுப்பியது. அவர்கள், முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். `கொரோனா வைரஸ் பாதிப்புகள், ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள், தற்போதைய பொருளாதார நிலைமை, பா.ஜ.க ஆட்சியில் ஜனநாயக அமைப்புகள் பலவீனப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, ஏழை – பணக்காரர் இடையே அதிகரித்துவரும் இடைவெளி’ போன்ற விஷயங்கள் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ-க்களிடம் தலைவர்கள் விளக்கிப்பேசியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு பா.ஜ.க வலைவீசுகிறது என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க மறுத்துள்ளது. தங்களுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியால் நிரூபிக்க முடியுமா என்றும் சவால் விட்டுள்ளது. மேலும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாகவும் பா.ஜ.க தலைவர்கள் கூறுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராஜேந்திர ரத்தோர் குற்றம் சாட்டியுள்ளார்.

சோனியா காந்தி - ராகுல் காந்தி - அகமது படேல்
சோனியா காந்தி - ராகுல் காந்தி - அகமது படேல்

அதற்குப் பதிலடிகொடுத்துள்ள முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தான் பா.ஜ.க-வில் பல கோஷ்டிகள் செயல்படுவதாகவும், பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கட்சியிலிருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வையும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். நாடு கொரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும்போது, மோடியும் அமித் ஷா-வும் ஜனநாயகத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இரண்டு ராஜ்யசபா எம்.பி-க்களைத் தேர்வுசெய்ய காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். பா.ஜ.க தன்னிடம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் பலத்தை வைத்து ஒரு ராஜ்யசபா எம்.பி-யைத் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், இரண்டு வேட்பாளர்களை பா.ஜ.க நிறுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு