Published:Updated:

முறியடிக்கப்பட்ட பா.ஜ.க சதி; கரையவைத்த பிரியங்கா! - சச்சின் பைலட் மீண்டும் `கை'கோத்த பின்னணி

சச்சின் பைலட்

ராஜஸ்தான் அரசியலில் ஒரு மாதகாலம் நடந்துவந்த `ஆடுபுலி ஆட்டம்’ முடிவுக்கு வந்துவிட்டது. `இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது சச்சினா... ராகுலா... பிரியங்காவா... வசுந்தராவா?' என்ற விவாதம் தேசிய அளவில் களைகட்டியிருக்கிறது.

முறியடிக்கப்பட்ட பா.ஜ.க சதி; கரையவைத்த பிரியங்கா! - சச்சின் பைலட் மீண்டும் `கை'கோத்த பின்னணி

ராஜஸ்தான் அரசியலில் ஒரு மாதகாலம் நடந்துவந்த `ஆடுபுலி ஆட்டம்’ முடிவுக்கு வந்துவிட்டது. `இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது சச்சினா... ராகுலா... பிரியங்காவா... வசுந்தராவா?' என்ற விவாதம் தேசிய அளவில் களைகட்டியிருக்கிறது.

Published:Updated:
சச்சின் பைலட்

அழகாக இருந்தால் போதுமா?

``எனக்கு 30 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது. அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது’’ என்று ஜூலை 12-ம் தேதி அறிவித்தார் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்.

``சச்சின் பைலட் பா.ஜ.க-வுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார். நல்ல ஆங்கிலம், பார்க்க அழகாக இருப்பது மட்டுமே அரசியலுக்குப் போதாது. நாட்டுக்காக உங்கள் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம். கொள்கை, கருத்தியல், அர்ப்பணிப்புதான் அரசியலில் பேசும்’’ என்று எதிர்த் தாக்குதல் நடத்தினார் முதல்வர் அசோக் கெலாட்.

செக் வைத்த கெலாட்!

காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு பெற்றவராகவும் சச்சின் இருந்தார். அவரிடம் பல மணி நேரம் உரையாடினார் பிரியங்கா காந்தி. ``முதல்வர் பதவியை எனக்குத் தர வேண்டும். அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’’ என்று சச்சின் காட்டிய உறுதியை பிரியங்கா ரசிக்கவில்லை. ``இனி பேசிப் பயனில்லை’’ என்ற முடிவுக்கு வந்தார். விளைவு, துணை முதல்வர் பதவியை இழந்தார் சச்சின். தொடர்ந்து சச்சின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேருக்கு சபாநாயகர் தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், `சபாநாயகர் சி.பி.ஜோஷி எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என நீதிமன்றம் உத்தரவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`ராஜஸ்தான் சட்டப்பேரவையிலுள்ள 200 இடங்களில் பெரும்பான்மைக்குத் தேவையான 101 உறுப்பினர்களைவிட கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ-வின் ஆதரவு மட்டுமே கெலாட் தரப்புக்கு இருந்தது. சச்சின் அணியை நீக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டால், பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை குறையும். அதனால், கெலாட் தரப்பு எளிதில் வெற்றி பெறலாம். ஆனால், தகுதிநீக்கத்துக்கு எதிரான வழக்கில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்றால், அவர்கள் தொடர்ந்து காங்கிரஸுக்கு எதிராக வாக்களிக்கலாம். அதனால், ராஜஸ்தானில் அசோக் கெலாட் அதிகாரத்தில் நீடிப்பது கடினமாகும்' என்ற களநிலவரத்தையும் காங்கிரஸ் உணர்ந்து வைத்திருந்தது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ஆட்சியைக் கவிழ்க்க ஆடியோ!

`கட்சியின் சீனியருக்கும் ஜூனியருக்கும் இடையே சமநிலையை உருவாக்காததன் விளைவை காங்கிரஸ் அனுபவிக்கப்போகிறது. ராஜஸ்தானிலும் காங்கிரஸின் கை தளரப் போகிறது' என விவாதங்கள் பறந்தன. போதாக்குறைக்கு ஹரியானாவிலுள்ள குருகிராமில் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தங்கவைத்தார் பைலட். `பா.ஜ.க அரசின் விருந்தோம்பலில் இருக்கிறார் சச்சின்' என கெலாட் ஆதரவாளர்கள் கொதித்தனர். கெலாட்டும், தனது ஆதரவாளர்களை ஜெய்ப்பூர் ரிசார்ட்டில் தங்கவைத்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், சச்சின் பைலட்டின் ஆதரவாளரான பன்வர்லால் ஷர்மா மற்றும் சஞ்சய் ஜெயின் ஆகியோருடன் ஆட்சியைக் கவிழ்க்கப் பேரம் பேசியது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியானது.

ரிசார்ட் அரசியல்!

காங்கிரஸ் தலைமை அசோக் கெலாட்டை முன்வைத்து, சச்சின் ஆடிய கபடியால் எரிச்சலடைந்தது. `சச்சின் பைலட் தான் பா.ஜ.க-வில் சேர மாட்டேன் என்று கூறிய பேட்டியைப் பார்த்தோம், அப்படியில்லையென்றால் பா.ஜ.க ஆளும் ஹரியானா அரசின் பாதுகாப்பிலிருந்து அவர் வெளியே வர வேண்டும். பா.ஜ.க-வுடன் அனைத்து உரையாடல்களையும் நிறுத்த வேண்டும். ஜெய்ப்பூருக்குத் திரும்ப வேண்டும்' எனக் கொதித்தார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜீவாலா .

அசோக் கெலாட் மற்றும் சச்சினின் `ரிசார்ட்' அரசியல், பா.ஜ.க., காங்கிரஸுடன் திரைமறைவு பேரம், ஆடியோ வெளியீடு என ராஜஸ்தான் மாநிலமே தகித்துக்கொண்டிருந்த வேளையில், கடந்த சில நாள்களாக சச்சினுடன் நடந்துவந்த சமரசப் பேச்சு முடிவுக்கு வந்திருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிரியங்கா என்ட்ரி!

`சச்சின் பைலட் ரிட்டர்னில் என்ன நடந்தது?' என காங்கிரஸ் கமிட்டியின் முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம். ``காங்கிரஸ் கட்சியில் பல்வேறு காலகட்டங்களில் பல பிரச்னைகள் நடந்துள்ளன. அவற்றையெல்லாம் தீர்ப்பதற்குக் கட்சியில் சில நடைமுறைகள் உள்ளன. குறிப்பாக, கட்சிக்குள் ஒரு தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதை கட்சித் தலைமை எப்போதும் அனுமதிப்பதில்லை. மாநிலக் கட்சிகளில் மாநிலத் தலைமையின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டு கட்சி இயங்கும். தேசியக் கட்சிகளில் அது போன்ற நிலை இல்லை. மாநிலங்களில் ஒரு சமநிலைத்தன்மையை காங்கிரஸ் உருவாக்கியுள்ளது.

தேர்தலின்போது, `இவர்தான் முதல்வர், பிரதமர்’ என அறிவிப்பதில்லை. அந்தவகையில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்தபோது முதல்வர் யார் என்பதை அறிவிக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு மேலிடப் பார்வையாளர்களை தலைமை அனுப்பும். அதன் பிறகே முதல்வர் யார் எனத் தேர்வு நடத்தப்படும். அந்தப் பதவிக்கு இரண்டு பேர் போட்டியிட்டால், அனுபவத்தின் அடிப்படையில் முதல்வர், துணை முதல்வர் பதவி வழங்கப்படும். ராஜஸ்தானில் காங்கிரஸின் வெற்றிக்கு சச்சினும் பாடுபட்டார். அவரைவிட மூத்தவரும் மூன்று முறை முதல்வராகவும் இருந்த கெலாட்டுக்கும் எம்.எல்.ஏ-க்களிடம் ஆதரவு அதிகம் இருந்தது. 27 வயதிலிருந்து தொடர்ந்து பொறுப்புகளில் இருந்துவந்தார். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரிடம் குடும்பரீதியாகவும் நெருக்கமான நண்பராக இருந்தார்.

அசோக் கெலாட் - சச்சின் பைலட்
அசோக் கெலாட் - சச்சின் பைலட்

சச்சின் பைலட்டை கெலாட் கடுமையாக விமர்சனம் செய்ததை கட்சி மேலிடம் ரசிக்கவில்லை. காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டாலும் கட்சிக்கு எதிராக, சச்சின் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சச்சின் பைலட் மீது ராகுல், பிரியங்காவுக்கு உள்ள நல்ல புரிந்துணர்வின் காரணமாக பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது. பிரியங்கா காந்தி எடுத்த தொடர் முயற்சி, பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகள் காரணமாக, ராகுலை சந்திக்க வைத்ததில் பிரியங்காவின் முயற்சி முக்கியமானது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் எப்படியிருக்கிறது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. அனைவரையும் அரவணைத்துச் செல்வதுதான் காங்கிரஸின் நோக்கம். இதன் மூலம் ராஜஸ்தானில் ஆட்சிக்கு ஏற்பட்ட ஆபத்து விலகியிருக்கிறது" என விவரித்து முடித்தார்.

வெற்றி யாருக்கு?

சச்சின் ரிட்டர்ன் குறித்துப் பேசியிருக்கும் அசோக் கெலாட், `அரசை கவிழ்க்க, பா.ஜ.க பல முயற்சிகளை மேற்கொண்டது. அதன் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. அதிருப்தியில் இருந்தவர்கள் இன்று கட்சிக்குத் திரும்பியுள்ளனர். கட்சித் தலைமை அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டால் அவர்களை நானும் வரவேற்பேன்' என்று உற்சாகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வசுந்தரா ராஜே
வசுந்தரா ராஜே

`ராஜஸ்தானில் ஆட்சி கவிழ்ந்தாலும், அதனால் தனக்கு எந்தவித லாபமும் இல்லை என்பதால் பா.ஜ.க-வும் நிலவரத்தை கவனித்து வந்தது. ராஜஸ்தானில் வசுந்தரா ரஜே சிந்தியாவின் பிரதான எதிரியாகப் பார்க்கப்படுபவர் சச்சின் பைலட். அதனால், அவரும் அரசியல் குழப்பத்துக்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்துவந்தார். காங்கிரஸ் கூடாரத்தில் `இதயம் இனித்தது, கண்கள் பனித்தன' என்ற காட்சியை வசுந்தரா எதிர்பார்த்துக் காத்திருந்தார். முடிவில் காங்கிரஸ், பா.ஜ.க-வை முன்வைத்துக் காரியம் சாதித்துக்கொண்டார் சச்சின். அவருக்கு காங்கிரஸ் தலைமை கொடுத்த உறுதிமொழி என்ன என்பது போகப் போகத் தெரியும்' என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.