Published:Updated:

ராஜேந்திர பாலாஜி: தொகுதி மாறியும் தோல்வியைத் தழுவிய பரிதாபம்! #TNelections2021

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி எடப்பாடியிடம் கெஞ்சி, இந்த முறை ராஜபாளையம் தொகுதியைக் கேட்டுப்பெற்று போட்டியிட்டதாக சொல்லப்பட்டது.

இந்தத்  தேர்தலில் திமுகவின் ஹிட் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்த அதிமுகஅமைச்சர்கள் பட்டியலில், கே.டி.ராஜேந்திர பாலாஜியும் முக்கியமானவர்.

கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு தேர்தல்களில் சிவகாசி தொகுதியில்போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் என்ற இறுமாப்பில் சொந்தக் கட்சியினரையே பகைத்துக் கொண்டது, அவர்களுக்கு மிரட்டல் விடுத்தது,.பொது இடங்களில் வாய்க்கு வந்தபடி பேசியது போன்ற காரணங்களால் தொகுதியில்.அவப்பெயர். 'மோடிதான் எங்கள் டாடி' என்ற அவரது பேச்சும்அ.தி.மு.க-வினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

மேலும், சிவகாசி தொகுதியில் பட்டாசுத் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி, உள்ளாட்சித் தேர்தலில் சிவகாசி ஒன்றியத்தில் அதிமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி போன்ற காரணங்களால், இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட்டால் தேறுவது கடினம் என்பதாலேயே, ராஜேந்திர பாலாஜி எடப்பாடியிடம் கெஞ்சி, இந்த முறை ராஜபாளையம் தொகுதியைக் கேட்டுப்பெற்று போட்டியிட்டதாக சொல்லப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையம் தொகுதியை பொறுத்தவரை அதிமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை இந்தத் தொகுதி திமுக வசம் சென்றது. திமுக சார்பில்போட்டியிட்ட தங்கபாண்டியன் 74,787 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஷியாம் 69,985 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இந்த தேர்தலில்,  ராஜேந்திர பாலாஜி களமிறங்கிய நிலையில், தொகுதி மாறி வந்தவர் என்ற குற்றச்சாட்டை பலமாக எதிர்கொண்டு, அதற்கு விளக்கம் அளித்தே சோர்ந்து போனார் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அவரது தேர்தல் பிரசாரம். திமுகவின் வலுவான வேட்பாளராக மீண்டும் தங்கபாண்டியன் போட்டியிட்ட நிலையில், அமமுகவில் காளிமுத்து, நாம் தமிழர்கட்சி சார்பில் ஜெயராஜ், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொள்கை பரப்புச்செயலர் விவேகானந்தன், புதிய தமிழகம் கட்சி சார்பில் வழக்கறிஞர் தனுஷ்கோடிஎனப் போட்டி கடுமையாகவே காணப்பட்டது.

தனது பழைய தொகுதியான சிவகாசியில் சொல்லிக் கொள்ளும்படியான திட்டங்கள்எதையும் ராஜேந்திர பாலாஜி நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு, அதிமுகவுக்கு விழும் முக்குலத்தோர் வாக்குகள் அமமுக வேட்பாளராகக் களமிறங்கிய ராஜவர்மனால் சிதறலாம் என்ற கணிப்பும், புதிய தமிழகம் கட்சிவேட்பாளரால் பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள் பிரியலாம் என்ற ஆருடமும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான விஷயங்களாக சொல்லப்பட்டவை. கூடவே ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்றதாக கூறப்பட்ட ஊழல் புகார்களும் துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜிக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தி இருந்தன.

ஊழல் புகார், முன் பின் முரணாக பல விஷயங்களைப் பேசக் கூடியவர் இப்படி பல விமர்சனகளை சுமந்து இந்த தேர்தலைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி, தனது தொகுதியான சிவகாசியில் போட்டியிடாமல் ராஜபாளையத்தில் போட்டியிட்டார் . எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என நினைத்த ராஜேந்திர பாலாஜிக்கு இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கை பின்னடைவைத் தரக்கூடியதாகவே இருந்தது. முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டதிலிருந்தே பின்னடைவிலேயே இருந்தது. அவரை எதிர்த்துப்  போட்டியிட்ட திமுகவின் தங்கபாண்டியன் முன்னிலை வகித்து வந்தார். இருப்பினும் அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்பட்ட போது இழுபறியாகவே இருந்தது, இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். முடிவில் ராஜேந்திர பாலாஜி 3,708 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் தங்கபாண்டியனிடம் தோல்வி அடைந்தார் .

அடுத்த கட்டுரைக்கு