Published:Updated:

`சரண்டரா... சமரசமா?’ - ராஜேந்திர பாலாஜியின் அடுத்த மூவ் என்ன?!

ராஜேந்திர பாலாஜி
News
ராஜேந்திர பாலாஜி ( ஆர்.எம்.முத்துராஜ் )

தமிழக போலீஸுடன் சைபர் க்ரைம் பிரிவின் முக்கிய அதிகாரிகள், ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடத்தைக் கண்டறிவதில் முழுமூச்சில் ஈடுபட்டுவருகிறாரகள். அவர்களுக்கெல்லாம் ஈடுகொடுத்து தலைமறைவைத் தொடர்கிறார் ராஜேந்திர பாலாஜி.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த இரண்டு வாரங்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். அரசியலில் இது அவருக்குச் சாதகமா... பாதகமா? என்று அ.தி.மு.க-வுக்குள் பட்டிமன்றமே நடக்கிறது. அவருக்குப் பாதகம்தான் என்று பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள். நாளாக நாளாக, போலீஸாரின் கிடுக்கிப்பிடி அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆரம்பத்திலேயே, `பொய் வழக்கு போட்டு என்னை ஒழிக்க ஆளுங்கட்சியின் சதி’ என்று சொல்லிவிட்டு அப்போதைக்குச் சிறைச்சாலைக்கு போயிருக்கலாம். பிறகு, பெயில் வாங்கி வெளியே வந்திருக்கலாம். அப்படி அவர் செய்திருந்தால், அந்த ஒரு வழக்கோடு நின்றிருக்கும்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

தனிப்பட்ட ஈகோ, தி.மு.க மேலிடப் பிரமுகர்களுடன் இருந்த நட்பு, நெருக்கமான வட்டத்தில் இருக்கும் சிலரின் தவறான ஆலோசனைகள் அவரை தலைமறைவு வாழ்க்கைக்குத் தள்ளிவிட்டுவிட்டன. பொறுத்துப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரிடையாக ராஜேந்திர பாலாஜி விவகாரத்தைக் கையில் எடுத்தார். அதன் பிறகு, ராஜேந்திர பாலாஜி மீது டஜன் கணக்கில் புகார்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. பண மோசடி, வேலை வாங்கித்தருவதாக மோசடி என்று பலவித பேனர்களில் ஏழு புகார்களை போலீஸார் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாங்கி வைத்திருக்கிறார்கள். அவரின் பெயரிலுள்ள சொத்துகளை சட்டப்படி முடக்கவும் ரகசிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தருமபுரி மாவட்டத்தைவிட்டு ராஜேந்திர பாலாஜி தப்பிக்க உதவியதாக இரண்டு நபர்களை டிசம்பர் 29-ம் தேதியன்று போலீஸார் பிடித்து விசாரித்துவருகிறார்கள். முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல், ஒட்டுநர் ஆறுமுகம் இருவரும்தான் மறைமுகமாக ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்தார்களாம். இவர்களைப்போலவே, விருதுநகர் மாவட்டத்திலும் பலரை போலீஸார் பிடித்து விசாரித்துவருகிறார்கள். ராஜேந்திர பாலாஜி நாட்டைவிட்டு தப்பிவிடக் கூடாது என்பதற்காக, லுக் அவுட் நோட்டீஸ் இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

மதுரை ஆவின் நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகள் பற்றித் தனி விசாரணை நடக்கிறது. ராஜேந்திர பாலாஜிக்கு இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு, நீதிமன்றம். பெயில் கிடைக்கும் என்பது அவரின் எதிர்பார்ப்பு. அப்படி ஒருவேளை பெயில் கிடைக்கவில்லையென்றால், கைதாகவேண்டியதுதான்! நீண்ட நாள்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ முடியாது. ஒருவேளை, ஏதாவது மருத்துவச் சிகிச்சையில் இருந்ததாகக் காரணம் சொல்லி அவராக நீதிமன்றத்தில் சரண்டர் ஆகலாம். ஆனால், அடுத்தடுத்து அணிவகுத்துக் காத்திருக்கும் வழக்குகள் காரணமாக, அவர் சிறைச்சாலைக்குள்ளேயே தொடர்ந்து இருக்கவேண்டி வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராஜேந்திர பாலாஜி தரப்பினரோ,

``*முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, தமிழக போலீஸ் வேண்டுமென்றே தப்பிக்கவிட்டு, `தேடுகிறோம்’ என்று சீன் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

*செட்டில் ஆகிவிட்டது. பெயில் கிடைக்கும் வரை அவர்மீது கைவைக்க வேண்டாம். பிறகு, சட்டரீதியாக பார்த்துக்கொள்ளட்டும் என்று இரண்டு பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டிருக்கிறது.

*`முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபமாக இருக்கிறார். நீர் வெளியே வந்துவிடு...’ என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

*இது எங்களுக்கு கௌரவப் பிரச்னை. தி.மு.க அரசால் அவரைப் பிடிக்க முடியாது. அவரே மனது வைத்தால்தான் வெளியே வருவார்” என்று கைது தாமதமாவதற்குக் காரணங்களை அடுக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் தரப்பிலோ, ``நீதிமன்றத்தில் சரணடைவதற்கோ, பெயில் வாங்குவதற்கோ விடவே கூடாது. போலீஸார் அவரைக் கைதுசெய்ய வேண்டும்” என்கிறார்கள். இப்படிப் பல்வேறு வகையான பேச்சுகள் விருதுநகர் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகின்றன.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இதில் லேட்டஸ்ட்டாக, ராஜேந்திர பாலாஜி, அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவர்மீது கிளம்பிய புகார்கள், மூடிமறைக்கப்பட்ட விவகாரங்கள், புகார்கள் அனைத்தையும் தூசுதட்டி எடுக்கிறார்களாம். ராஜபாளையம் அருகில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் கொலை விவகாரம், சாத்தூரில் மீடியா தொடர்புடைய ஒரு நபர் கொலை ஆனது உள்ளிட்ட ஆறு விவகாரங்கள் தொடர்பான பழைய ஃபைல்கள் தூசுதட்டப்பட்டுள்ளனவாம்.

விருதுநகரில் நிருபர் ஒருவரை வெட்டிப் படுகாயப்படுத்தியது ஒரு கும்பல். அந்த நிருபர் கொடுத்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அந்த எஃப்.ஐ.ஆரில் ராஜேந்திர பாலாஜியின் பெயர் இருக்கிறதா... என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது... வழக்கு எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் துருவிவருகிறார்கள்.

இப்படிச் சந்தேகங்களை எழுப்பிவருகிறார்கள். அதேநேரம், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர், தற்போது ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்கும் விஷயத்தில் தீவிரமாகிவிட்டாராம். முதல்வர் அலுவலக அழுத்தத்தை அப்படி அதிகாரிகளிடம் பாஸ் பண்ணிவருகிறாராம்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் புள்ளி ராஜேந்திர பாலாஜிக்கு உதவுவதாகப் பேசப்பட்டது. ஆனால், நாளாக நாளாக அந்த அரசியல் புள்ளியும் கைவிரித்துவிட்டாராம். உளவுத்துறை ரிப்போர்ட்டைப் பார்த்து அதிர்ந்த ஆட்சி மேலிடம் `எப்படித் தப்பினார்... ஏன் பிடிக்கவில்லை?’ என்று பல்வேறு வகையில் துருவ, அந்த தி.மு.க புள்ளி சைலன்ட் ஆகிவிட்டாராம். விருதுநகர் மாவட்ட எஸ்.பி-யை மூன்று முறை தொடர்புகொண்ட அந்த தி.மு.க புள்ளி, `ராஜேந்திர பாலாஜியைச் சீக்கிரம் பிடிங்க... பிடிங்க...’ என்று அவசரப்படுத்த ஆரம்பித்துவிட்டாராம். அவர் பிடிபட்டால்தான், தன்மீதுள்ள சந்தேகப் பார்வை விலகும் என்று தி.மு.க புள்ளி நினைக்கிறாராம்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இதற்கிடையில், மோசடிப் புகார் கொடுத்தவர்களை நேரில் சந்திக்கும் ராஜேந்திர பாலாஜியின் தூதுவர்கள், `பணத்தை செட்டில் செய்கிறோம். வழக்கை வாபஸ் வாங்குங்கள்’ என்று ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் பேச்சு அடிபடுகிறது. தற்போதைய தி.மு.க அமைச்சர் ஒருவர் மீதும் இதேபோல மோசடி விவகாரத்தில் பணத்தை செட்டில் செய்வதாகச் சொல்லி அந்த அமைச்சர் தப்பித்தார். அதுமாதிரியே ராஜேந்திர பாலாஜியும் செய்யத் தயாராகிவருவதாகவும் பேசப்படுகிறது.

தமிழக போலீஸுடன் சைபர் க்ரைம் பிரிவின் முக்கிய அதிகாரிகள், ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடத்தைக் கண்டறிவதில் முழுமூச்சில் ஈடுபட்டுவருகிறாரகள். அவர்களுக்கெல்லாம் ஈடுகொடுத்து தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்கிறார் ராஜேந்திர பாலாஜி.