Published:Updated:

`ஒன்றிணைவோம் வா’ என அரசியல் செய்கிறார்! -ஸ்டாலின் குறித்து ராஜேந்திரபாலாஜி

அரிசிப் பைகள் வழங்கும் ராஜேந்திர பாலாஜி
அரிசிப் பைகள் வழங்கும் ராஜேந்திர பாலாஜி

``கொரோனா வைரஸின் தாக்குதலிலிருந்து தப்பிக்க பிரதமர், முதல்வர் உட்பட உலகத் தலைவர்கள் அனைவரும் `விலகி இருப்போம்’ என கூறுகிறார்கள். ஸ்டாலின் மட்டும் `ஒன்றிணைவோம் வா’ என அனைவரையும் அழைத்து அரசியல் செய்கிறார்” என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 75 கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பூசாரிகள் என 517 பேருக்கு, 20 கிலோ அரிசிப் பையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் நோக்கில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், சிவகாசி சிவன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், விருதுநகர் சிவன் கோயில்களில், அந்தந்த கோயில்களின் சுற்றுப்பகுதிகளிலுள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது.

அரிசிப் பைகள் வழங்கும் ராஜேந்திர பாலாஜி
அரிசிப் பைகள் வழங்கும் ராஜேந்திர பாலாஜி

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ``கொரோனா வைரஸால் பிரதமர், முதல்வர் உட்பட அனைவரும் விலகி இருப்போம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மட்டும் `ஒன்றிணைவோம் வா’ என அனைவரையும் அழைத்து அரசியல் செய்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 16 பேர் மட்டுமே கொரோனா வார்டில் சிகிச்சையில் உள்ளனர்.

அரசியல் பேசக்கூடிய தருணம் இது கிடையாது. கொரோனா வைரஸின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், `வீட்டில் இரு.. விலகி இரு.. தனித்திரு” என்றுதான் பிரதமர், முதல்வர் உட்பட உலகத் தலைவர்கள் அனைவருமே கூறி வருகிறார்கள். ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மட்டும் `ஒன்றிணைவோம் வா' என்று கூறிக் கொண்டு இந்தநேரத்தில் அரசியல் செய்து வருகிறார். ஸ்டாலினைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸை வைத்து அரசியல்தான் செய்கிறாரே தவிர, மக்களைப் பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அவரை செல்போனில் இரண்டு நாளில் 2 லட்சம் பேர் தொடர்புகொண்டனர் என்பதெல்லாம் கட்டுக்கதை. மக்களை ஏமாற்றும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அரிசிப் பைகள் வழங்கும் ராஜேந்திர பாலாஜி
அரிசிப் பைகள் வழங்கும் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க-வினர் உள்ளிட்ட பல கட்சியினரும் மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வருவதைப் போல, தி.மு.க-வினரும் உதவிகளைச் செய்ய வேண்டுமென்று ஒரு கட்சியின் தலைவராக ஸ்டாலின் கூற வேண்டுமே தவிர, அரசைக் குறைகூறிக் கொண்டே இருக்கக் கூடாது. பிரச்னைகள் வரும்போது பொதுமக்கள் தேடி வருவது கோயில்களைத்தான். கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்களுக்கு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக வராது" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு