Election bannerElection banner
Published:Updated:

விஐபி தொகுதி: ராஜபாளையம்... பாலாஜிக்கு பலவீனமா?

ராஜேந்திர பாலாஜி.
ராஜேந்திர பாலாஜி.

ராஜேந்திர பாலாஜி தொகுதியில் தீவிரமாகக் களப்பணி ஆற்றக்கூடியவர்களை வளைத்து தனக்காக வேலை செய்ய வைத்துள்ளார்.

‘‘சிவகாசி என்னுடைய கோட்டை. கடைசிவரை இந்தத் தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுவேன்’’ என்று வீராவேசமாகப் பேசிவந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார். காரணம், ‘ரா... ரா ரகசியம்’ என்கிறார்கள்!

தங்கப்பாண்டியன்
தங்கப்பாண்டியன்

ஜோதிடத்தைப் பெரிதும் நம்பும் ராஜேந்திர பாலாஜி, சில மாதங்களுக்கு முன்பு தன் ஆஸ்தான ஜோதிடர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது, ‘‘உங்கள் பெயரின் முதல் எழுத்தான ‘ரா’ உடன், ராஜபாளையம் தொகுதியின் முதல் எழுத்தும் ஒன்றிப்போகிறது. அங்கு போட்டியிட்டால் முடிசூடலாம்” என்று அவர்கள் ஆலோசனை கூறினார்களாம். இதையடுத்தே, கட்சித் தலைமையிடம் மன்றாடி ராஜபாளையத்துக்குத் தாவிவிட்டார் என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். இதனால், பா.ஜ.க சார்பில் அங்கு போட்டியிட காத்திருந்த கெளதமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எதிர்முனைகளில் தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், அ.ம.மு.க-வில் காளிமுத்து போட்டியிடுகிறார்கள். ஆனால் ராஜேந்திர பாலாஜிக்கும், தங்கப்பாண்டியனுக்கும் இடையேதான் உண்மையான போட்டி நடக்கிறது. நாடார் சமுதாய வாக்குகளை முழுமையாக நம்புகிறார் தங்கப்பாண்டியன். கடந்த ஐந்தாண்டுகளில் தனது மாத ஊதியத்தைத் தொகுதி முழுவதுமுள்ள கிராமப்புற மக்களுக்கு உதவித்தொகையாகப் பிரித்துக்கொடுத்ததால், தங்கப்பாண்டியனுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. தொகுதியில் கணிசமாகவுள்ள ராஜூக்கள், நெசவாளர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக நம்புகிறார் தங்கப்பாண்டியன். அதேசமயம், அவர் தொகுதிக்குள் பெரிதாகத் திட்டங்களை நிறைவேற்றாதது அவருக்கு மைனஸ்.

சாத்தூரில் மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காததால், அங்கு அ.ம.மு.க வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் ராஜவர்மன், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகத் தன் ஆதரவாளர்களை ராஜபாளையத்தில் இறக்கிவிட்டிருக்கிறார். ராஜேந்திர பாலாஜியோ, தொகுதியில் தீவிரமாகக் களப்பணி ஆற்றக்கூடியவர்களை வளைத்து தனக்காக வேலை செய்ய வைத்துள்ளார். அ.தி.மு.க-வுக்கு விழும் முக்குலத்தோர் வாக்குகள் சிதறினாலும், பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள் தன்னைக் காப்பாற்றும் என்று நம்பியிருந்தார் ராஜேந்திர பாலாஜி. ஆனால், புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுவதால் அந்த வாக்குகள் சிதறும் சூழல் உருவாகியிருக்கிறது. வேறு வழியில்லாமல், பிற சமுதாய மக்களின் வாக்குகளை வளைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.

ராஜேந்திர பாலாஜி.
ராஜேந்திர பாலாஜி.

சிவகாசியில் சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்களை ராஜேந்திர பாலாஜி நிறைவேற்றாதது ராஜபாளையம் வரை எதிரொலிக்கிறது. இருப்பினும், ஜோதிடர்களின் அருள்வாக்கும் ‘பட்டுவாடா’ வகையறாக்களும் தன்னைக் காப்பாற்றும் என்று நம்புகிறார் ராஜேந்திர பாலாஜி. ஊரிலுள்ள கோயில்களிலெல்லாம் அவருக்காக பூஜைகளும் யாகங்களும் தூள்பறக்கின்றன. ஆனால், தொகுதி நிலவரம் அவருக்குப் போக்குக் காட்டுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு