சினிமா
Published:Updated:

என்ட்ரி ஆகும் ரஜினி... என்ன நடக்கும் 2021 தேர்தலில்?

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

25 ஆண்டுகளைத் தாண்டிய சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாக ரஜினி அறிவித்துவிட்ட பிறகு வரும் முதல் பிறந்த நாள் இது.

டிசம்பர் ஐந்தாம் தேதி ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளை எப்போதும் இல்லாத குழப்பத்துடன் எடப்பாடி பழனிசாமி கடந்திருக்கக்கூடும். உண்மையில் அவருக்கு இந்தக் குழப்பம் வந்திருக்கவே கூடாது. கட்சியில் கடைசிக் கலகக்குரல் எழுப்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சமாளித்து, அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராகவே ஆகிவிட்டார். ஆனால், பெரிய உணர்ச்சிப்பெருக்கு இல்லாத ஒரு கூட்டத்துடன் வந்து ஜெ. சமாதியில் அஞ்சலி செலுத்தினார். ‘விட்டு விடவும் மாட்டோம்... ஒதுங்கிப் போகவும் மாட்டோம்’ என அன்றைய தினம் சென்னையின் சுவர்களை அலங்கரித்த போஸ்டர்கள், ஏதோ ஒரு மறைமுகச் செய்தியை உணர்த்தின. நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை முதல் ஆளாக வரவேற்ற ஓ.பன்னீர்செல்வம், ‘அரசியலில் எதுவும் நடக்கலாம். வாய்ப்பிருந்தால் ரஜினி கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்கும்’ என்றும் சொன்னார். எடப்பாடி பழனிசாமி இப்படி ஏதும் சொல்லவில்லை. ‘ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு அ.தி.மு.க-வின் நிலை என்னவாக இருக்கும்’ என்ற குழப்பம் அவருக்கு இருக்கலாம்.
என்ட்ரி ஆகும் ரஜினி... என்ன நடக்கும் 2021 தேர்தலில்?

டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளை எப்போதும் இல்லாத உற்சாகத்துடன் அவரின் ரசிகர்கள் கொண்டாடக்கூடும். 25 ஆண்டுகளைத் தாண்டிய சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாக ரஜினி அறிவித்துவிட்ட பிறகு வரும் முதல் பிறந்த நாள் இது. தன் சினிமா கமிட்மென்ட்களை முடித்துக்கொண்டு அநேகமாக பொங்கலை ஒட்டி தனது புதிய அரசியல் கட்சியை அவர் ஆரம்பிக்கக்கூடும் என்று தெரிகிறது. அன்றிலிருந்து நான்கே மாதங்களுக்குள் தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிறது. ரஜினி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை உருவாக்குவதற்குக்கூட இதைவிட அதிக நாள்கள் தேவைப்படும். ‘இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல’ என்ற முழக்கத்துடன் ‘எல்லாத்தையும் மாத்துவோம்’ எனக் களத்தில் இறங்குவதற்கு இந்தக் காலம் போதுமானதா? இந்தக் கேள்வி அவரின் மன்ற நிர்வாகிகள் மனதில் இயல்பாகவே எழக்கூடும். ‘ரஜினியின் வசீகரமும் செல்வாக்கும் எல்லாக் குறைகளையும் ஈடுசெய்துவிடும்’ என அவர்கள் நினைக்கலாம்.

ஒரு பக்கம் மு.க.ஸ்டாலின், இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி எனத் தமிழகத் தேர்தல் களம் இருமுனைப் போட்டிக்குக் கிட்டத்தட்ட முடிவாகியிருந்த சூழலில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அமைகிறது. இப்போது தி.மு.க வலுவான கூட்டணியை வைத்திருக்கிறது. ‘காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும்’ என்ற கேள்வியைத் தாண்டி, அதில் பெரிதாகக் குழப்பங்களும் இல்லை. சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கூட்டணி இமாலய வெற்றியை சாதித்தும் காட்டியிருக்கிறது. அ.தி.மு.க-வும் அதேபோன்ற பலமான கூட்டணியை வைத்திருக்கிறது. ‘சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இடம்பெறும்’ என அமித் ஷா முன்னிலையிலேயே ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துவிட்டார். ஆனால், பா.ஜ.க இப்படி வெளிப்படையாகக் கூட்டணி பற்றிச் சொல்லவில்லை என்பது மட்டுமே குறை.

என்ட்ரி ஆகும் ரஜினி... என்ன நடக்கும் 2021 தேர்தலில்?
என்ட்ரி ஆகும் ரஜினி... என்ன நடக்கும் 2021 தேர்தலில்?

கட்சிகளின் தனிப்பட்ட வாக்கு வங்கி கணக்குகளின்படி பார்த்தால், இந்த இரண்டு கூட்டணிகள், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய எல்லாக் கட்சிகளும் சுமார் 80 சதவிகித வாக்குகளைப் பெற்றுவிட முடியும். முடிவெடுக்காத வாக்காளர்களின் 20 சதவிகித வாக்குகளுக்கு மற்ற கட்சிகளுடன் இணைந்து ரஜினியின் புதுக்கட்சி மோதவேண்டியிருக்கும். அதில் ரஜினிக்கு என்ன பங்கு கிடைக்கும் என்பது புதிரான விஷயம்.

நடிகர்களின் அரசியல் பிரவேச வெற்றிகளுக்கு எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் ஆகியோரே உதாரணமாகக் காட்டப்படுகின்றனர். ஆனால், அவர்கள் அரசியல் பிரவேசம் செய்தபோது இயல்பாகவே ஒரு வெற்றிடம் இருந்தது. தி.மு.க அரசுமீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து மக்கள் மத்தியில் அதிருப்தி கிளர்ந்தபோது, ஊழலுக்கு எதிரான முகமாக எம்.ஜி.ஆர் வந்தார். பலவீனமான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் இன்னும் பலவீனமடைந்து எம்.ஜி.ஆருக்கு வழிவிட்டது. அவரால் சுலபமாக ஜெயிக்க முடிந்தது. ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆண்டுக்கு ஒரு முதல்வரை டெல்லி மேலிடம் மாற்றியது. இதை ஆந்திர மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகச் சித்திரித்து என்.டி.ஆர் அரசியலுக்கு வந்தார். தெலுங்கு பேசும் மக்களின் அடையாளமாகத் தன்னைக் காட்டிக்கொண்டார். வலுவான எதிர்க்கட்சியே இல்லாத சூழலில் அவருக்கு இமாலய வெற்றி இன்ஸ்டன்டாகக் கிடைத்தது.

என்ட்ரி ஆகும் ரஜினி... என்ன நடக்கும் 2021 தேர்தலில்?

இந்த இருவரும் தங்கள் அளவில் நிகரற்ற தலைவராக இருந்தாலும்கூட, முதல் தேர்தலிலேயே கூட்டணி ஒன்றை உருவாக்கித்தான் போட்டியிட்டனர். எம்.ஜி.ஆருக்கு தி.மு.க.வில் ஓர் அரசியல் தொடர்ச்சி இருந்தது. அதிருப்தியில் இருந்த காங்கிரஸ்காரர்கள் பலரை இழுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் அரசியல் கட்டமைப்பை உருவாக்கினார் என்.டி.ஆர். அந்த அரசியல் அனுபவமே அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தது.

இந்த இரண்டு வெற்றிகளும் உணர்த்துவது ஒன்றைத்தான். ஆளுங்கட்சிமீது அதிருப்தி எழுந்து, அங்கு எதிர்க்கட்சி பலவீனமாக இருக்கும் சூழலில்தான் நடிகர்களின் அரசியலுக்கு வழி கிடைக்கிறது. அப்படி இல்லாதபோது, அதை ஒரு தேவையாக மக்கள் உணர்வதில்லை. சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் சிரஞ்சீவி அரசியல் பிரவேசம் செய்தபோது, அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தலைமையில் புத்துணர்வு பெற்ற எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ்தான் ஜெயித்தது. சிரஞ்சீவி கட்சியையே கலைக்க நேரிட்டது. 2006 சட்டமன்றத் தேர்தலை உத்தேசித்துக் கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் சாதிக்க முடியவில்லை. இத்தனைக்கும் கொடியை அறிமுகம் செய்து, மன்றங்களை அவர் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்தார். அந்தத் தேர்தலில் அவர் கட்சி சார்பில் விஜயகாந்த் மட்டுமே ஜெயித்தார். தி.மு.க உருவாக்கிய மெகா கூட்டணியே ஜெயலலிதாவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தது.

என்ட்ரி ஆகும் ரஜினி... என்ன நடக்கும் 2021 தேர்தலில்?

இப்போதைய சூழலிலும் ரஜினிக்கான வெற்றிடம் இங்கே இல்லை. அது உருவாக்கப்பட வேண்டும். அதை எப்படி ரஜினி உருவாக்குவார்? தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவரும் அ.தி.மு.க-வை வெல்லும் சக்தியாகப் பார்க்காமல் சிலர் வெளியேறக்கூடும். இதேபோல தி.மு.க-வில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது எனக் கருதுபவர்களும் அங்கிருந்து தாவக்கூடும். இரண்டு கூட்டணிகளிலும் இருக்கும் குட்டிக் குட்டிக் கட்சிகளுக்கு ரஜினி புது சுவாசம் அளித்திருக்கிறார். தொகுதி பேரம் படியாவிட்டால் வெளியேறப்போவதாக அவர்கள் மிரட்டக்கூடும். அதிக தொகுதிகள் கிடைக்கும் என ஆசைப்பட்டும் அவர்கள் ரஜினியை நோக்கி வரக்கூடும். அதற்கு, ‘தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சக்தியாக நான் இருக்கிறேன்’ என ரஜினி நிரூபிக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் தமிழகமே அறிந்த முகமாக இருந்தாலும், தேர்தல் பிரசாரத்துக்கு மாநிலம் முழுக்க சென்றார். மற்ற தலைவர்கள்போல அவர் நிறைய பொதுக்கூட்டங்களில் பேசவில்லை. திறந்த வேனில் நின்றபடி பயணம் செய்தார். பொதுக்கூட்டங்களில் பேசிய தலைவர்களைவிட நிறைய பேரை எம்.ஜி.ஆரால் சென்றடைய முடிந்தது. என்.டி.ஆர் ஆந்திர மக்களால் கிட்டத்தட்ட கடவுளாகப் பார்க்கப்பட்டவர். ஆனாலும், தேர்தல் பிரசாரத்துக்காக சைதன்ய ரதம் என்ற வேனில் சுமார் 75 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்தார். ஒரு தலைவரின் பேச்சு, அவருக்குக் கூடும் கூட்டம், ஒரு பகுதியில் அவர் வந்து பிரசாரம் செய்தபிறகு கட்சியினர் அடையும் உற்சாகம் எனப் பல விஷயங்கள் இணைந்தே வெற்றியைத் தீர்மானிக்கின்றன. கொரோனாச் சூழல், தன் உடல்நிலை எனப் பல விஷயங்களால் ரஜினி இப்படிச் சுற்றுப்பயணம் போக வாய்ப்பில்லை. என்னதான் முப்பரிமாண ஹோலோகிராம் உருவத்தை ஒளிர்திரையில் உருவாக்கிப் பிரசாரம் செய்தாலும், அது நிஜப் பிரசாரத்துக்கு இணையானது இல்லை. நிஜப் பிரசாரம் ஏற்படுத்தும் தாக்கத்தை அது ஏற்படுத்த முடியாது.

கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பூத் கமிட்டிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அ.தி.மு.க., தி.மு.க என்று இரண்டு கட்சிகளுமே தமிழகம் முழுக்க வலுவாக பூத் கமிட்டிகளை உருவாக்கி வைத்துள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவிலும் மக்கள் மனதை மாற்றுவது மற்றும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது போன்றவற்றில் பூத் கமிட்டிகளின் பங்கு முக்கியமானது. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 80 சதவிகித அளவுக்கு பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகள் இல்லாத நிலையில், இவை எந்த அளவுக்குத் தேர்தலுக்குப் பயன்படும் என்பதும் கேள்விக்குறி.

என்ட்ரி ஆகும் ரஜினி... என்ன நடக்கும் 2021 தேர்தலில்?

ரஜினியின் அரசியல் பயணமேகூட தொடர்ச்சிகள் அற்றதாகவே உள்ளது. 2017 டிசம்பரில் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். 234 தொகுதிகளிலும் தங்கள் கட்சி போட்டியிட உள்ளதாகச் சொன்னார். அதன்பின் மிகச்சில சூழல்களில்தான் பொது விஷயங்களுக்காக அவர் கருத்து சொன்னார். அவற்றில் பல கருத்துகள் சர்ச்சைகளையே ஏற்படுத்தின. ‘யாரையும் குறை சொல்லாத நாகரிக அரசியலையே நாங்கள் பின்பற்றுவோம்’ என்கிறார், ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன். ‘சிஸ்டம் சரியில்லை’ எனச் சொல்லும்போது, அதில் எது சரியில்லை, அது ஏன் சரியில்லை, சரியில்லாமல் போனதற்கு யார் காரணம் என்பதையெல்லாம் சொல்ல வேண்டும் அல்லவா? அது இல்லாமல் தேர்தல் அரசியல் ஏது?

கடந்த 40 ஆண்டுகளில் தமிழகத்தில் உருவான மிகச் சிறந்த மூன்றாவது அணி, 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க உருவாக்கிய கூட்டணி. தே.மு.தி.க., பா.ம.க என முரண்பாடுகள் நிறைந்த பல கட்சிகளை இணைத்து உருவாக்கிய அந்தக் கூட்டணி தமிழகத்தின் 39 தொகுதிகளில் இரண்டை வென்றது. பல தொகுதிகளில் தி.மு.க-வை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது. ஆனால், 2016 சட்டமன்றத் தேர்தலில் உருவான மக்கள் நலக் கூட்டணியும், பா.ம.க-வின் தனி முயற்சியும் ஒரு வெற்றியைக்கூடத் தரவில்லை.

‘தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை’ என்று அறிவித்துவிட்டு அரசியலுக்கு வரும் ரஜினி, யாருடன் இணையப் போகிறார்? யார் யார் அவர் பக்கத்தில் நிற்கப் போகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் தெரியும்போது, தி.மு.க-வும் மற்ற கட்சிகளும் அவருக்கு எதிரான வியூகத்தை அமைக்கக்கூடும். அது தமிழகத் தேர்தல் களத்தை இன்னும் சுவாரஸ்யம் கொண்டதாக மாற்றும்.