Published:Updated:

``ரஜினிக்கு நாங்கள் தூண்டில் போடவில்லை... அவரே ஒதுங்கிவிட்டார்!’’ - சொல்கிறார் கரு.நாகராஜன்

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

``முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் இப்படியெல்லாம் அபத்தமாகப் பேச முடியுமா என்று எனக்கு அதிர்ச்சியாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது'' என்கிறார் தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்.

2021 சட்டமன்றத் தேர்தலில், `தங்கள் கட்சி சார்பாக எம்.எல்.ஏ-க்களை வெற்றிபெறவைத்து, சட்டமன்றத்துக்குள் அனுப்பிவைத்துவிட வேண்டும்' என்று வெறித்தனமாக வேலை செய்திருக்கிறது தமிழக பா.ஜ.க!

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் ஆரம்பித்து, தொகுதிப் பங்கீடு, பிரசாரக் களம் எனப் பல்வேறு தளங்களிலும் `அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி'யினரிடையே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், ஒருவழியாக ஒற்றுமையோடு தேர்தலைச் சந்தித்து முடித்திருக்கின்றார்கள்.

இந்தநிலையில், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளரான கரு.நாகராஜனை நேரில் சந்தித்துப் பேசினேன்...

பா.ஜ.க தலைமை அலுவலகம்
பா.ஜ.க தலைமை அலுவலகம்

``கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்குக்கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனியரான உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததில் வருத்தமில்லையா?''

``இதில் வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை. தொகுதிப் பங்கீட்டில், `இந்தத் தொகுதி கிடைத்தால், இந்தத் தலைவருக்கு வழங்கலாம்' என்று 40 தொகுதிகள் வரை முன்னரே முடிவெடுத்து தலைவர்கள் முயன்றனர். ஆனால், பட்டியலின் எண்ணிக்கை 40-லிருந்து 30 ஆகி, அடுத்து 20 என்று ஆகிவிடவே பலருக்கும் சீட் கிடைக்கவில்லை. குறிப்பாக, கட்சியின் பொதுச்செயலாளர் நான்கு பேர்களில் யாரொருவருக்குமே கிடைக்கவில்லை.

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது, குறிப்பிட்ட தொகுதிகள் எங்களுக்குக் கிடைக்காமல் கூட்டணிக் கட்சிகளின் கைகளுக்குப் போய்விட்டதாலும் சில தலைவர்களால் போட்டியிட முடியவில்லை. மற்றபடி கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கும் சீட் வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அது அந்த வேட்பாளரின் தகுதியின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டிருக்கிறது.''

''எந்தத் தொகுதியை நீங்கள் எதிர்பார்த்து களப்பணி ஆற்றிவந்தீர்கள்?''

''எனக்கு மயிலாப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. தொகுதியிலுள்ள அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியில் பெண்களுக்கான உதவித் திட்டங்கள், மருத்துவ உதவிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிறைய விழாக்கள் நடத்தி மக்கள் ஆதரவைத் திரட்டிவைத்திருந்தேன். ஆனால், கடவுள் இந்தமுறை வாய்ப்பு கொடுக்கவில்லை. அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருப்போம்!''

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

''கோவையில், உ.பி முதல்வர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்து மக்கள் கவனத்தை ஈர்த்துவிட்டாரே கமல்ஹாசன்?''

''கமல்ஹாசன் நல்ல நடிகர்... இதிலும் நன்றாக நடித்திருக்கிறார்... அவ்வளவுதான்!''

''பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைவர்களின் பிரசார வருகை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே..?''

''சர்ச்சை என்று எதுவும் இல்லை. மக்களிடையே நல்ல வரவேற்புதான் கிடைத்திருக்கிறது. எதிர்க்கட்சிகள்தான் வேண்டுமென்றே சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருக்கின்றனர். கூட்டத்தில் கைதட்டல் கிடைக்க வேண்டும் என்பதற்காக உதயநிதி ஸ்டாலின், 'சுஷ்மா ஸ்வராஜும் அருண் ஜெட்லியும் பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்காமல் மரணமடைந்துவிட்டனர்' என்று சர்ச்சைக்குரிய வகையில் அநாகரிகமாகப் பேசியிருந்தார். இப்போது, 'அப்படியெல்லாம் நான் பேசவில்லை. நான் பேசியதில் நடுவிலுள்ள சில வரிகளை மட்டும் எடுத்துப் போட்டுவிட்டார்கள்' என்று கதை விட்டுக்கொண்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இவர் இப்படியென்றால், இவரது தந்தை மு.க.ஸ்டாலினோ, 'பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்ற தலைவர்கள் பண மூட்டைகளோடு தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்' என்று காமெடியான புகார் ஒன்றைப் பிரசாரத்திலேயே சொல்லிச் சென்றார். முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் இப்படியெல்லாம் அபத்தமாகப் பேச முடியுமா என்று எனக்கு அதிர்ச்சியாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. ஒருவேளை கடந்த காலத்தில், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ் கட்சி இருந்தபோது அதன் தலைவர்கள் இப்படித்தான் பண மூட்டைகளோடு தமிழ்நாட்டு தேர்தல் களத்துக்கு வந்தார்களோ... அந்த அனுபவத்தில்தான் தி.மு.க தலைவர் இப்படியெல்லாம் பேசுகிறாரோ... என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.''

''பிரசார களத்தில், பா.ஜ.க தலைவர்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்கள்தானே..?''

''தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் வேண்டுமென்றே பொய்ப் பிரசாரங்களை தொடர்ந்து செய்துவருகிறார்கள். அவற்றை எதிர்கொள்ளும்விதமாக சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு எங்கள் கட்சியினரும் ஏதாவது பேசியிருக்கலாம்.

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மிடாஸ் சாராய ஆலையை இழுத்து மூடுவோம்' என்று கடந்த 2006 தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். சொன்னபடி செய்தாரா? ஆட்சிக்கு வந்த பிறகு மிடாஸிலிருந்துதான் அதிக அளவு சரக்கைக் கொள்முதலே செய்தார்கள். ஆக, எல்லாம் பொய்ப் பிரசாரம்!''

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

''உங்கள் கூட்டணியிலுள்ள அ.தி.மு.க அரசும்கூட, இப்போதுவரை தி.மு.க தலைவர்களின் மது ஆலைகளிலிருந்து மது கொள்முதல் செய்துவருகிறதுதானே?''

''அதாவது ஒரு பிஸினஸ் இருக்கிறவரை, அந்த பிஸினஸை நடத்தத்தான் வேண்டும். அந்த பிஸினஸ் வேற... ஆனால், அந்த பிஸினஸ் தேவையா, இல்லையா என்று கொள்கைரீதியாக முடிவெடுக்க வேண்டியது முக்கியம். அந்தவகையில், 'மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொல்லியிருக்கிறோம்! இதுதான் எங்கள் லட்சியம். ஆனால், இப்படி தி.மு.க தேர்தல் அறிக்கையில், 'மது விலக்கு' பற்றி ஏதும் சொல்லியிருக்கிறார்களா... இல்லையே!''

''தேர்தல் களத்தில், அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக் கட்சியினர் சரிவர ஒத்துழைக்கவில்லை என்ற பேச்சு கிளம்பியிருக்கிறதே..?''

''அப்படியெல்லாம் எந்தப் பேச்சும் இல்லை. எங்கள் கூட்டணியின் பலம்கண்டு பொறாமைப்படுபவர்கள்தான் இது போன்ற வதந்திகளைக் கிளப்பிவிட்டுவருகின்றனர்.

பெரம்பூர் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தின்போது '50, 100 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், 800 பேர் வரை வந்துவிட்டனர்' என்று அ.தி.மு.க-வினரே ஆச்சர்யப்பட்டனர். அந்த அளவுக்கு இரு கட்சித் தொண்டர்களும் ஆர்வத்தோடு இணைந்து பணியாற்றியிருக்கிறோம். இன்னும் வேற லெவலில் பா.ஜ.க வளரும்!''

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

''பசுமைத் தீர்ப்பாய நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருப்பது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறதே..?''

''ஒவ்வொரு துறையிலும் காலியாகி வரக்கூடிய பதவிகளில் புதியவர்களைப் பொறுப்பேற்கச் செய்வது மத்திய அரசின் கடமை. அந்தவகையில் மக்களோடும் சமூகத்தோடும் ரொம்பவும் நெருக்கமான தொடர்புடைய துறையாக பசுமைத் தீர்ப்பாயம் இருக்கிறது. எனவே, அந்தத் துறையிலிருந்து வெளிவரும் தீர்ப்புகள் மக்களுக்குச் சாதகமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மத்திய அரசு கிரிஜா வைத்தியநாதனை நியமனம் செய்திருக்கிறது. இதை எப்படித் தவறு என்று சொல்கிறீர்கள்?''

`கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது மாநிலங்களின் கடமை!’ - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

''நடிகர் ரஜினிகாந்துக்கான 'தாதா சாகேப் விருது' அறிவிப்பு தேர்தலுக்கு முன்பாக வெளியானது, அவரது ரசிகர்களின் வாக்குகளை பா.ஜ.க-வுக்கு திருப்புகிற நோக்கம்தானே?''

''தாதா சாகேப் விருதை யாராவது ஒரு சாதாரண நடிகருக்குக் கொடுத்திருந்தால், நீங்கள் கேள்வி எழுப்பலாம். ரஜினிகாந்த், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர். இந்தியா மட்டுமன்றி சிங்கப்பூர், சீனா, மலேசியா, ஜப்பான் என சர்வதேச நாடுகளிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கக்கூடியவர். அவர் நடித்தவையெல்லாம் வெற்றிப்படங்கள். இப்படிப்பட்ட சிறப்புகள்கொண்ட ஒருவருக்கு விருது கொடுத்ததில் என்ன ஆச்சர்யம் அல்லது ஒருதலைப்பட்சம் இருக்க முடியும்?''

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

''விருதுக்குத் தகுதியானவர் ரஜினிகாந்த் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், விருது அறிவிப்பை மிகச்சரியாக வாக்குப்பதிவுக்கு முந்தைய தேதியில் அறிவித்ததுதான் கேள்விக்குள்ளாகிறது..?''

''ரஜினி மட்டுமா விருது வாங்குகிறார்... அதற்கு முந்தைய வாரத்தில்கூட நடிகர் தனுஷுக்கு விருது கிடைத்திருப்பதாக அறிவிப்பு வெளியானது. நடிகர் விஜய் சேதுபதிக்குக்கூட சிறந்த குணச்சித்திர நடிகருக்கான அகில இந்திய விருது கிடைத்தது. ஆக, இது தொடர்ச்சியான நிகழ்வுகள்தான். தி.மு.க ஆதரவாளர்கள் எதையுமே மிகைப்படுத்தி சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதால் இப்படியெல்லாம் தெரிகிறது!''

கியூபா: முடிவுக்கு வந்த `காஸ்ட்ரோ' சகோதரர்களின் சகாப்தம்... ராவுல் காஸ்ட்ரோ ஓய்வால் என்ன சிக்கல்?

''தமிழக அரசின் 'அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது' என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தல் மிகச்சரியாக வாக்குப்பதிவுக்கு மறுநாள் வெளியாகியிருப்பதும் செய்திகளில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறதே..?''

''இதெல்லாம் ரொம்ப தவறு. எத்தனையோ வழக்குகளில் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன. எனவே, இதையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்க வேண்டியதில்லை.

கொரோனா காலகட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்குச் செல்ல முடியவில்லை எனவே தேர்வை ரத்து செய்வது சரிதான்... ஆனால், கொரோனாவுக்கு முன்பே தேர்ச்சி பெறாமல் வைத்திருந்த அரியர்ஸை எப்படி கொரோனா ஊரடங்கைக் காட்டி ரத்து செய்யலாம் என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருக்கிறது. எனவே, இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துத்தான் நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்குகிறது. மற்றபடி இதைத் தேர்தலோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பேசுவது தவறானது.''

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

''ரஜினிகாந்துக்கு 'விருது' அறிவித்தும்கூட கடைசிவரை பா.ஜ.க-வின் தூண்டிலில் அவர் சிக்கவேயில்லையே?''

(சிரிக்கிறார்) ''நாங்கள் எந்தத் தூண்டிலும் போடவில்லை... அவரே 'அரசியலுக்கு வருகிறேன்' என்றார். 'சிறப்பாகச் செயல்படுவேன், ஆன்மிக அரசியல், இப்போ இல்லைனா எப்போ...' என்றெல்லாம் சொன்னார். கடைசியில் அவரே 'எனக்கு ஓய்வு வேண்டும்' என்றும் சொல்லிவிட்டார். இதில் எங்கிருந்து பா.ஜ.க வந்தது? அப்படி அவர் பின்னணியில் பா.ஜ.க இருந்திருந்தால், நாங்கள் சொல்வதையல்லவா அவர் செய்திருக்க வேண்டும்! மோடி, அமித் ஷா என எல்லோருக்கும் ரஜினி நல்ல நண்பர்... அவ்வளவுதான்!''

அடுத்த கட்டுரைக்கு