`எனது முடிவை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன்!’ - ரஜினிகாந்த் #LiveUpdates

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை மற்றும் முக்கியச் செய்திகளின் தொகுப்பு!
ரஜினி செய்தியாளர் சந்திப்பு!

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனையை முடித்து விட்டு வீடு திரும்பிய ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``ஆலோசனைக் கூட்டத்தில் எனது கருத்தை நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். நிர்வாகிகள் தங்களது கருத்தை முன் வைத்தனர். அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரைவில்முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன். எனது முடிவுக்கு ரசிகர்கள் கட்டுப்படுவதாக உறுதி அளித்திருக்கிறார்கள்” என்றார்.
நாளை காலைக்குள் அறிக்கை!
நடிகர் ரஜினிகாந்த், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கடந்த இரண்டு மணி நேரமாக நடத்திவந்த ஆலோசனை முடிவுக்கு வந்திருக்கிறது. ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் தனது முடிவை வெளியிடுவார் என்றும் அது தொடர்பான அறிக்கை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கூட்டத்தை முடித்து வெளியே வந்த நிர்வாகிகள் சிலர், ``ரஜினி நல்ல முடிவை எடுப்பார். ரஜினி எடுக்கும் முடிவுக்கு நாங்கள் எங்கள் முழு ஆதரவை தெரிவிப்போம்’ என்றனர்.
ஆலோசனைக் கூட்டம் நிறைவு!
நடிகர் ரஜினிகாந்த், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கடந்த இரண்டு மணி நேரமாக நடந்து வந்த ஆலோசனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. கூட்டத்தில் `மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை’ என ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் `அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள்’ என ரஜினி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜனவரி மாதம் கட்சி தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், கட்சி தொடங்கினால் கொரோனா காலகட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
`கட்சி ஆரம்பிக்கலாமா?’ -ரஜினி தீவிர ஆலோசனை
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், `கட்சி ஆரம்பிக்கலாமா?’ எனக் கேள்வி கேட்டு, நிர்வாகிகளின் பதிலை ரஜினி கேட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள், ரஜினியே முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கிடையே வரும் ஜனவரி மாதம் ரஜினி கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதாகவும், அவ்வாறு தொடங்கினால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும் இன்று ஆலோசனை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது!
ரஜினி இன்று முக்கிய முடிவு!

நடிகர் ரஜினிகாந்த், கொரோனா பரவல் காரணமாக, கட்சி தொடங்கும் திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனைநடத்துகிறார். சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று காலை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதனால் அங்கு மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள்.