Published:Updated:

`3 நாள்கள் அந்தக் கடிதத்தால் பட்டபாடு'... கடைசி நேரத்தில் ரஜினியைக் குழப்பியது யார்?

ரஜினி
ரஜினி

ரஜினியின் நம்பிக்கைக்குரிய வட்டாரத்தில், அவரின் விசுவாசிகளில் அரசியல் சார்புள்ளவர்கள், சார்பில்லாதவரகள் என்று இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள்.

ரஜினியின் உடல்நிலை குறித்து, கடந்த அக்டோபர் 26-ம் தேதி இரவு சமூக வலைதளங்களில் திடீரென ஒரு கடிதம் வைரலானது. அந்தக் கடிதத்தின் பின்னணி பற்றி விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில், இன்று ரஜினி தன் ட்விட்டர் பக்கத்தில், ``கடிதம் பொய். ஆனால், உடல்நிலை பற்றிக் கூறப்பட்டிருந்த விஷயங்கள் அனைத்தும் உண்மை'' என்று கருத்து பதிவிட்டிருக்கிறார். `அந்தக் கடிதம் வெளியானதிலிருந்து ரஜினி உளவியல்ரீதியாக படாதபாடுபட்டிருக்கிறார். அதன் காரணமாகவே, இன்று ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ரஜினி ட்வீட்
ரஜினி ட்வீட்

கடைசி நிமிடத்தில் ரஜினியைக் குழப்பியது யார்?

ரஜினி மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

``ரஜினியை சினிமாவில் ஹீரோவாகப் பார்த்து, அவரின் ரசிகரானோம். ஆனால், நிஜத்தில் அவர் குழப்பவாதியாக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. அரசியலுக்கு வருவதில் எத்தனை அறிவிப்பு குழப்பங்கள்... தேர்தல் நேரம் இது. நாங்கள் மட்டும் நொந்துபோய் உட்கார்ந்திருக்கிறோம். சென்னையிலும் தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்த நேரத்தில் கொரோனாவைக் காரணம் காட்டி, அரசியலுக்கு வராமல் போனது அரசியல் எதிர்முகாமில் இருப்பவர்கள் செய்த சதி. அவர்கள் ஜெயித்துவிட்டார்கள். அவர்களிடம் ரஜினி தோற்றுவிட்டார்'' என்று புலம்புகிறார்கள்.

ரஜினியின் நம்பிக்கைக்குரிய அவரின் விசுவாசிகளில், அரசியல் சார்புள்ளவர்கள், சார்பில்லாதவரகள் என்று இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள். டிசம்பர் மாதத்தில் அரசியல் கட்சி ஆரமித்தாக வேண்டுமே, என்ன செய்வது... என்று பதற்றத்தில் இருந்த ரஜினி, இருதரப்பினருடன் தினமும் தொடர்புகொண்டு ஆலோசனை செய்துவந்தாராம். அதேநேரம், அ.தி.மு.க., தி.மு.க இரண்டு கட்சியினரும் ``ரஜினி அரசியலுக்கு வந்தால் ஓட்டு பிரியும். அதனால், கணிசமான பாதிப்பு வரும். அவர் வராமல் இருந்தால் நல்லது'' என எதிர்பார்த்துவந்தனர். ரஜினி பேசிய விஷயங்களைவைத்து, ``அரசியலுக்கு வருவது உறுதி. கட்சி ஆரம்பிக்கும் தேதி கொரோனாவால் தள்ளிப்போகிறது'' என்று அறிக்கை வெளியிட அரசியல் சார்பில்லாத தரப்பினர் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்கள்.

 வெற்றிவேல்
வெற்றிவேல்

மீடியாவைச் சேர்ந்த சென்னை பிரமுகர், பெங்களூருவைச் சேர்ந்த இன்னொரு பிரமுகர் என அரசியல் சார்பில்லாதவர்களைப் பொறுத்தவரை, ரஜினிக்கு வேறு மாதிரி ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். ``அரசியலுக்கு வருவது, கட்சி ஆரம்பிப்பது பற்றி இப்போது ஏதும் சொல்ல வேண்டாம்'' என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம், தமிழக உளவுத்துறையினர் உன்னிப்பாக கவனித்துவந்தனர். இருவரில் ஒரு தரப்பினரை எப்படியாவது இழுத்து, வரும் தேர்தல் வரைக்கும் அரசியலுக்கு வர வேண்டாம் என்பதை ரஜினியின் எண்ணத்தில் பதியவைக்க முடியுமா... என்று காய்நகர்த்தியிருக்கிறார்கள். ரஜினி அவரது வீட்டு லேண்ட் லைன் போனிலிருந்துதான் மற்றவர்களுடன் பேசுவார். முக்கியமானவர்களிடம் செல்போனில் பேசுவார். ரஜினியின் நெருக்கமான வட்டாரம் என்று சுமார் 23 பேரின் போன் கால்களை தமிழக உளவுத்துறையினர் லிஸ்ட் எடுத்து கண்காணித்துவந்தார்களாம்.

அன்புள்ள ரஜினிகாந்துக்கு தமிழக மக்களின் சார்பாக ஒரு கடிதம்!

அதன் மூலம் ரஜினி பெரும் குழப்பத்தில் இருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், அ.ம.மு.க-வின் பொருளாளர் வெற்றிவேல் இறந்த செய்தி கேட்டு திடுக்கிட்டுப்போன ரஜினி, மருத்துவ நிபுணர்களிடம் போனில் பேசி, `தடுப்பூசி எப்போது மக்களுக்குக் கிடைக்கும்?’ என்று விசாரித்தாராம். கூடவே, ரஜினிக்கு லேசான ஜுரம் வந்தது. அதற்கும் கொரோனாவுக்கும் சம்பந்தமில்லை என்றாலும் வீட்டில் இருப்பவர்கள் பயந்துபோனார்களாம். இந்தநிலையில், அரசியல் கட்சி ஆரம்பித்து, சுற்றுப்பயணம் போய் மக்களைச் சந்தித்தால் என்ன ஆவது என்று ரஜினிக்கு அன்புக் கவசம் போட்டிருக்கிறார்கள்.
தவிர, கடந்த 26-ம் தேதியன்று ரஜினியை நேரில் சந்தித்துப் பேசினார் ஏ.சி.சண்முகம். அன்று இரவுதான் ரஜினி பெயரில் கடிதம் வைரல் ஆனது.

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

இது பற்றி ரஜினி விசுவாசி தரப்பில் கட்சி சார்பில்லாத ஒருவரிடம் பேசினோம்.

``ரஜினி பெயரில் கடிதத்தைத் திட்டமிட்டு லீக் செய்து, மக்களின் பல்ஸைப் பார்த்துவிட்டு முடிவுக்கு வரலாம் என்று சொன்னவர் ஒரு மீடியா பிரமுகர் என்று கேள்விப்பட்டோம். ஆனால், மக்களிடமோ, ரசிகர் மன்றத்தினரிடமோ எதிர்பார்த்த ரியாக்‌ஷன் வரவில்லை. பிரபல மீடியாக்களும் கண்டுகொள்ளவில்லை. வேறு வழியில்லாமல், ரஜினி ட்விட்டரில் தனது எண்ண ஒட்டத்தைப் பதியவிட்டார். `கடிதம் போலி’ என்று சொல்லி, `கொரோனா பரவல் ஒய்ந்ததும் கட்சி தேதி அறிவிப்பேன்’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால், `கடிதம் போலி. அதில் உடல்நிலையைப் பற்றிக் கூறப்பட்டிருந்த தகவல்கள் அனைத்தும் உண்மை’ என்று டிவீட் போடக் காரணமே அவரைச் சுற்றியிருக்கும் அரசியல் சார்புள்ள டீம்தான். தேர்தல் வரை ரஜினியை அரசியலுக்கு வரவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். இதை ரஜினி எப்போது புரிந்துகொள்வாரோ?’’ என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு