Published:Updated:

பிரஸ்மீட் முடிந்ததும் நிர்வாகிகளுக்கு டோஸ்... ரஜினி வீட்டில் நடந்தது என்ன?

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

முகத்தில் கோபம் கொப்பளிக்க ரஜினியின் ரியல் முகத்தைப் பார்த்த மாவட்டச் செயலாளர்கள் அரண்டுபோய்விட்டனர்.

லீலா பேலஸ் ஹோட்டலில் பிரஸ்மீட்டை முடித்துக்கொண்டு நேராக போயஸ்கார்டனில் உள்ள இல்லத்துக்கு வந்தார் ரஜினி. அங்கே ஏற்கெனவே ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் காத்திருந்தனர். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரின் பிராக்ரஸ் ரிப்போர்ட்டையும் தனது அறைக்குச் சென்று ஒருமுறை புரட்டிப்பார்த்துவிட்டு, ஹாலுக்குள் நுழைந்தாராம் ரஜினி. மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் ரஜினி சுமார் 15 நிமிடங்கள் மனதில் உள்ளதைக் கொட்டித்தீர்த்தாராம்.

நிர்வாகிகளுடன் ரஜினி
நிர்வாகிகளுடன் ரஜினி

தற்போது உள்ள மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என்று 32 மாவட்டங்களில் 37 பேர்கள் மாவட்ட நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்களில் சுமார் 12 மாவட்டச் செயலாளர்கள் ரஜினி சொன்ன 50 வயதுக்கு கீழே உள்ளவர்கள். இவர்களைத்தான் ரஜினி தனது குட்-புக்கில் வைத்திருக்கிறார். தவிர, கடந்த ஒரு வருடகாலமாக மன்ற நடவடிக்கைகளை ரஜினி நிறுத்தி வைத்தார். அந்தக் காலகட்டத்தில், வசூல் ஏதும் செய்யாமல் மக்களுக்கான சமூக உதவிகளை முடிந்தவரை செய்யச் சொல்லிவிட்டு, ஒவ்வொருவரையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தாராம்.

மொத்தமுள்ள 37 மாவட்டப் பொறுப்பாளர்களில் சுமார் 14 பேர் (இவர்களில் சிலர் 50 வயதைத் தாண்டியவர்களும் உண்டு) ரஜினி வைத்த டெஸ்ட்டில் பாஸ் செய்தார்களாம். மற்றவர்கள் ஃபெயில். அதாவது, மக்களுடன் எந்த வித தொடர்புகளையும் இவர்கள் வைத்துக்கொள்ளவில்லை. தங்களால் முடியாவிட்டாலும், அவசர சூழ்நிலை ஏற்படும்போது அந்தப் பகுதி மக்களுக்கான சமூக உதவிகளை செய்யச் சொல்லி தலைமை மன்றத்துக்காவது அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தாம் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி முன்னிலையில் சீன் போட்டு ரஜினியின் எண்ண ஓட்டத்துக்கு எதிராகப் பேசியவர்கள். அப்படியாவது ரஜினி மனதில் இடம்பிடிக்கலாம் என்று அவர்கள் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது. ரஜினி, அவர்கள் மீது எரிச்சல்தான் அடைந்தாராம்.

ரஜினி காந்த்
ரஜினி காந்த்
ரஜினி பிரஸ் மீட்டில் என்னவெல்லாம் நடந்தது? - தி லீலா பேலஸில் இருந்து நேரடி ரிப்போர்ட்

ரஜினியை டென்ஷன் ஆக்கிய ஒரு சம்பவமும் கடந்தவாரம் நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவி காலியாக இருக்கிறது. அந்த மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில் ஆறு கோஷ்டிகள் உண்டு. மூன்று இணைச் செயலாளர்கள். மூவரில் ஒருவரை ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்திருந்தார்களாம். இந்த பிரமுகரை ரஜினியிடம் அறிமுகப்படுத்தியபோது, வாய் தவறி தர்மபுரி மாவட்டச் செயலாளர் என்று மன்றத் தலைமை நிர்வாகி சுதாகர் உளறிவிட்டாராம். ரஜினியும் அந்தப் பிரமுகருக்கு கைகொடுத்தாராம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தர்மபுரி மன்றத்தைச் சேர்ந்த ஒரு கோஷ்டியினர் அந்தக் குறிப்பிட்ட பிரமுகரை மாவட்டச் செயலாளராக நியமித்துவிட்டதாகச் சொல்லி கொண்டாடினார்களாம். மன்ற அலுவலகத் திறப்பு விழா நடத்தவும் ரெடியானார்களாம். புகார்கள் சுதாகருக்குப் பறக்க... அந்த விழாவை உடனே ரத்து செய்யச் சொன்னாராம். இதைப் பற்றி விரிவாக விசாரித்த ரஜினி, அப்செட் ஆனாராம். `ஏன் இப்படி பதவிக்கு அலையுறாங்க?' என்று சத்தம் போட்டாராம். மற்ற மாவட்டச் செயலாளர்கள் மீதான புகார்ளை ரிப்போர்ட்டில் இருந்ததைத் தவிர, தனது சொந்த சோர்ஸ்களிடமும் கவலையோடு கேட்டறிந்தாராம்.

இந்த நிலையில், ``மார்ச் 5-ம் தேதியன்று ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி தனது கருத்தைச் சொன்னபோது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் தடாலென எழுந்து, `நீங்க முதல்வர் பதவியில் அமரவில்லையென்றால் சரியாக இருக்காது' என்கிற ரீதியில் சில கருத்துகளை முன் வைத்துப் பேசினாராம். அதை நினைவுபடுத்தி பேசிய ரஜினி, ``என் முன்னால நீங்கள் அன்னைக்கு அப்படிப் பேசுறீங்க? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? ஒரு டிசிப்ளின் வேணாமா. நான் ஒரு கருத்தைச் சொன்னால், அதற்கு எதிர்மறையாவா பேசுறீங்க? நாசிக்குல உட்கார்ந்துகிட்டு இங்கே அரசியல் செய்ய முடியாது. புரியுதா. உங்களைப் பற்றி எல்லா விவரமும் எனக்குத் தெரியும். இங்கேயிருக்கிற மற்றவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். கடந்த ஒரு வருட காலத்தில் உங்களின் செயல்பாடு பற்றிய அனைத்து விவரங்களும் என்னிடம் உள்ளன. இப்போதைக்கு நான் சொன்ன திட்டங்களை கிராமம்தோறும் மக்களிடம் கொண்டு செல்லுங்கள். சரியான வழியில் நீங்கள் செயல்படுகிறீர்களா? என்று பார்ப்பேன். இல்லாவிட்டால், என்னை நீங்கள் விட்டுவிடுங்கள். என் பாதையில் நான் போகிறேன். உங்கள் பாதையில் நீங்கள் போகலாம்'' என்று பேசினாராம்.

ரஜினி
ரஜினி

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரிடம் நாம் விசாரித்தபோது, ``ரஜினியின் ரிப்போர்ட்டில் ஃபெயில் ஆன மாவட்ட நிர்வாகிகளில் பலரும் இனி இங்கே காலந்தள்ள முடியாது என்பதை உணர்ந்துவிட்டார்கள். தி.மு.க, அ.தி.மு.க, இரண்டு கட்சிகளும் இங்கே போணியாகாத ஆட்களை தங்கள் பக்கம் இழுக்க தூண்டில் வீச ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட முக்கிய பிரமுகர்கள் அதில் சிக்கத்தான் போகிறார்கள். அடுத்து வரும் நாள்களில் பிரபல கட்சிகளில் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் தாவல் என்றெல்லாம் செய்திகள் வரும். இவையெல்லாம் ரஜினி எதிர்பார்த்ததுதான். அசல் எது? டூப்ளிகேட் எது? என்று அறிய ரஜினி வைத்துள்ள டெஸ்டில் சிலர் அம்பலமாகப்போகிறார்கள். அசல்கள் மட்டுமே மன்றத்தில் நிலைத்து நிற்கும். மற்றவை வேறு எங்காவது சென்றுவிடும்'' என்று சொல்லிவிட்டு கிளம்பினர்.

அடுத்த கட்டுரைக்கு