பிரீமியம் ஸ்டோரி

ரஜினியின் கரியரில் முக்கியமான படம் ‘பாபா’. அது ரஜினியின் சொந்த படம். அடிதடி, புகை, குடிப்பழக்கம் என ரெளடியாக வலம் வரும் நாயகன், ஒரு நாத்திகனாகவும் இருப்பார். பிறகு, பாபாவின் அருள் கிடைத்து ஆன்மிகவாதி யாக மாறியதும் மிகவும் நல்லவர் ஆகிவிடுவார். இறுதிக்காட்சி யில் சந்நியாசம் போவார் என எல்லோரும் நினைத்திருக்க, அரசியலுக்கு வருவதுபோல் காட்சி நிறைவுறும்.

2002-ம் ஆண்டில் வந்த ‘பாபா’ படத்தின் திரைக்காட்சி, 2020-ம் ஆண்டில் நிஜ அரசியலாக அரங்கேற தொடங்கியிருக்கிறது. ‘அரசியலுக்கு வருவேன்’ என்று படங்களிலும் பேட்டிகளிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நீண்டகாலமாகச் சொல்லிவந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த ஆண்டில்தான் ‘அரசியலுக்கு வருவது உறுதி. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்’ என்று அறிவித்தார்.

அதிலிருந்து அவரை தங்கள் பக்கம் இழுப்பதற்கும், அவருடைய பிம்பத்தை உடைத்து நொறுக்குவதற்கும் இரண்டு துருவங்களிலும் வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அரசியலுக்கு வருவதாகச் சொன்ன ரஜினி, ‘என்னுடையது ஆன்மிக அரசியலாக இருக்கும்’ என்று கோடிட்டும் காட்டினார். உடனே, அவர் பா.ஜ.க பக்கம் சாய்வார் என்று பேச்சுகள் எழுந்தன. ஆனால் ‘எனக்கு யாரும் காவிச்சாயம் பூச முடியாது’ என்று ரஜினி சொல்ல, எல்லோரும் குழம்பிப்போனார்கள்.

எந்தத் துருவத்தில் நின்றுகொண்டு, யாரை எதிர்க்கப்போகிறார் ரஜினி என்றே எல்லோரும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான், ‘துக்ளக்’ பத்திரிகை விழாவில் பெரியாரைப் பற்றிப் பேசி சர்ச்சைப் பட்டாசைப் பற்றவைத்திருக்கிறார் ரஜினி. அதற்குக் கடுமையான எதிர்வினைகள் ஏற்பட்ட நிலையில், ‘ஸாரி, நான் பேசியதில் தவறில்லை. அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்றும் சொல்லி, தன் நிலையை அதிரடியாகத் தெளிவுபடுத்தியிருக்கிறார் ரஜினி.

அந்த விழாவில் ரஜினி பேசியது சரியா... தவறா, அவர் காட்டிய ஆதாரம் உண்மையானதா... பொய்யானதா என்பதை எல்லாம் தாண்டி, அவர் பெரியாரை ஏன் சீண்டினார் என்பதுதான் பல கோடி தமிழர்களின் இதயங்களைத் துளைத்தெடுக்கும் கேள்வியாக இருக்கிறது. இதற்கு ரஜினி தரப்பிலிருந்து வரும் பதில், ‘பெரியாரிலிருந்து அவர் தன் அரசியல் போரைத் தொடங்கியிருக்கிறார்’ என்பதுதான்.

``தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று ஏற்கெனவே பேசியிருக்கும் ரஜினி, இப்போது உள்ள தலைவர்கள் யாரும் தனக்கு நிகரானவர்கள் அல்லர் என்பதை வெளிப்படுத்தும்விதமாகத்தான் தன்னுடைய அரசியலின் எதிர் துருவமாக பெரியாரை வைத்திருக்கிறார்’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அதாவது இன்றைய தலைவர்களான தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த தலைவர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என யாரைப் பற்றியும் பேசாமல், நேரடியாக திராவிட இயக்கச் சித்தாந்தத்தின் ஆணிவேராக இருக்கும் பெரியாரைப் பற்றி அவர் பேசியதற்கான காரணம் இதுதான் என்பது அவர்களின் வாதம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையொட்டி ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘தமிழகத்தில் இப்போதுள்ள கட்சிகளில் தி.மு.க-தான் பலம் பொருந்திய கட்சியாக இருக்கிறது. கருணாநிதி மறைந்த பிறகும் அந்தக் கட்சி வலுவுடன் இருப்பதற்கு, மு.க.ஸ்டாலினின் தலைமை மட்டுமே காரணமல்ல. பா.ஜ.க-வின் அரசியல் சித்தாந்தத்தை வலுவாக எதிர்க்கும் திராவிட இயக்கமாக தி.மு.க-வை மட்டுமே மக்கள் பார்க்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமன்றி, ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார பலத்தையும் கடந்து முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க பெற்றுள்ள வெற்றி, இதைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறது.

ரஜினியுடன் குருமூர்த்தி
ரஜினியுடன் குருமூர்த்தி

ரஜினி யோசிப்பது இதைத்தான். வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் இணைந்தோ, தனியாகவோ களம் இறங்கினாலும் தி.மு.க-வை வீழ்த்த முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. அதனால்தான் தலைவர்களைப் பற்றிப் பேசாமல், பெரியாரைச் சீண்டியிருக்கிறார் ரஜினி. இதன்மூலமாக தமிழகத்தில் உள்ள இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைப் பதற்கு அடித்தளமிட்டிருக்கிறார். கூடவே அவரின் ரசிகர்களின் வாக்குகள் போனஸாகக் கிடைக்கும் என்பதும் அவரது கணக்கு.

இந்த விஷயத்தில் அவரை இயக்குவது பா.ஜ.க-வின் தீவிர ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்திதான். பெரியார் குறித்து தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும்போதே குருமூர்த்தி ட்வீட் போட்டு, ‘அந்தப் பேட்டியின் பின்னணியில் நான்தான் இருக்கிறேன்’ என்பதை எல்லோருக்கும் காட்டிவிட்டார். ஆக, அனைத்தின் பின்னணியிலும் பா.ஜ.க இருக்கிறது.

தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு எதிராக இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க ரஜினியைவிட்டால் பா.ஜ.க-வுக்கு வேறு வழியே இல்லை. ரஜினியின் பெரியார் பேச்சுக்கு எதிராக கடும் எதிர்வினைகள் எழுந்த நிலையில், அவருக்கு ஊடகங்களில் ஆதரவு திரட்டியதும், இணையத்தில் கிளம்பிய எதிர்ப்புகளை முறியடிக்க உதவியதும் பா.ஜ.க-தான். ரஜினியின் அரசியல் பாதை இனி இப்படித்தான் இருக்கும். அதை பா.ஜ.க-தான் வகுக்கும். அதேசமயம், எந்தளவுக்கு வொர்க்-அவுட்டாகும் என்பதை இப்போது சொல்ல முடியாது’’ என்றனர்.

‘துக்ளக்’ விழாவில் ரஜினி
‘துக்ளக்’ விழாவில் ரஜினி

ரஜினி ‘மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று சொன்னதன் பின்னணியில், அவருடைய அரசியல் பிரவேசத்துக்காக ரகசிய டீலிங் நடப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது. இதுபற்றி ரஜினியின் உள்விவகாரங்களை அறிந்த சிலரிடம் பேசியபோது, ‘‘அரசியலுக்கு வருவது பற்றி ரஜினியிடம் இன்னும் குழப்பம் இருக்கிறது. சினிமாவில் அவர் எவ்வளவோ சம்பாதித் திருந்தாலும் அதை அரசியலுக்குச் செலவிடு வதற்கு அவரது குடும்பத்தில் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், அரசியல் கட்சியை ஆரவாரமாகத் தொடங்குவதற்கு பெரிய கட்சியிடமிருந்து பெரும்முதலீட்டை அவர் தரப்பில் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தொடக்க விழா கொண்டாட்டத்துக்கு 2,500 வாலா பட்டாசு கேட்டவருக்கு 1,000 வாலா பட்டாசுதான் கொடுக்க முடியும் என்பதுபோல் அந்தக் கட்சித் தரப்பில் பேசியிருக்கிறார்கள். அதற்குமே ‘ஆக்‌ஷன் பிளான் என்ன?’ என்றும் கேட்டிருக்கிறார்கள். அப்படி திட்டம் எதுவும் அவரிடம் இல்லை. அதனால், அந்தப் பெரிய கட்சியை உற்சாகப்படுத்தவும் இந்தச் சந்தர்ப்பத்தை ரஜினி தரப்பில் பயன்படுத்திக் கொண்டார்கள்’’ என்றனர்.

ரஜினியின் ‘பாபா’ படத்தில் வில்லனின் பெயர் இப்போ ராமசாமி. நிஜத்தில் இப்போது, ஈ.வெ.ராமசாமி. ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ என மெகா ஹிட் படங்களை எடுத்த சுரேஷ் கிருஷ்ணாதான் ‘பாபா’வையும் இயக்கினார். ஆனாலும், அந்தப் படம் படுதோல்வியடைந்தது.

அரசியலில் ரஜினிக்குக் கிடைக்கப்போவது என்னவோ?

`இது என் பிரச்னை... நானே டீல் செய்கிறேன்!’

ரஜினி
ரஜினி

இந்தப் பிரச்னைகளுக்குப் பிறகு ஜனவரி 21-ம் தேதி தனது மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து நேரடியாகப் பேசியிருக்கிறார் ரஜினி

. அப்போது, ‘பாபா படத்தின்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன். இது என் பிரச்னை. மன்றத்தினர் யாரும் வர வேண்டாம். நானே டீல் செய்துகொள்கிறேன். எனக்கு எதிராக யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தட்டும். அதை நான் தனிப்பட்ட முறையில் பார்த்துக்கொள்கிறேன். மன்றத்தினர் அமைதி காக்க வேண்டும். இல்லாவிட்டால், ரஜினி ரெளடித்தனம் செய்கிறார்; கலவரங்களைத் தூண்டிவிடுகிறார் என்றெல்லாம் இட்டுக்கட்டிப் பேசுவார்கள். இதை நான் விரும்பவில்லை. யாரும் சென்னைக்கு வரவும் வேண்டாம். போராட்டமும் நடத்த வேண்டாம். சமூக வலைதளங்களிலும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்’ என்று சொன்னாராம். ``வரும் ஆகஸ்ட் மாதம் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவரின் எண்ணம்’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

‘‘மன்னிப்பு கேட்கவேண்டியது ரஜினிகாந்த் அல்ல!’’

‘‘துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதற்கும் பா.ஜ.க-வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?’’ என்று பா.ஜ.க தலைவர்கள் சிலரிடம் கேட்டோம்.

இல.கணேசன்:

‘சேலத்தில் நடைபெற்ற பேரணி பற்றிய செய்தியைப் பிரசுரிக்கக் கூடாது’ என்று அன்றைக்கு துக்ளக் பத்திரிகையைத் தடுத்தாலும்கூட, சோ அதைத் துணிச்சலாக வெளியிட்டு மக்கள் மத்தியில் அந்தச் செய்தியைப் பரப்பினார் என்ற அர்த்தத்தில்தான் ரஜினிகாந்த் பேசினார். அவரது அன்றைய பேச்சு, முழுக்க முழுக்க சோ அவர்களை புகழ்வதற்காகப் பேசப்பட்டது. எனவே, அது ஒரு சாதாரண பாராட்டுப் பேச்சு. ஆனால், எதிர்ப்பு என்ற பெயரில் அதை அநாவசியமாகப் பெரிதாக்கிவிட்டார்கள். சேலத்தில் என்ன நடைபெற்றது என்பது குறித்து இப்போது திராவிடர் கழகத்தினரே மக்கள் முன்பு எடுத்துவைத்து விட்டார்கள். எனவே, இப்போது மன்னிப்பு கேட்க வேண்டியது, திராவிடர் கழகத்தினர்தானே தவிர ரஜினிகாந்த் அல்ல. ரஜினியின் கருத்தை பா.ஜ.க ஆதரிக்கிறது.

இல.கணேசன் - கே.டி.ராகவன் - வானதி சீனிவாசன்
இல.கணேசன் - கே.டி.ராகவன் - வானதி சீனிவாசன்

கே.டி.ராகவன்:

ஜினிகாந்த் பேசியதில் என்ன தவறு இருக்கிறது? ‘ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று சொல்லும் தி.க-வினர் கடந்த 70 ஆண்டுகளாக இந்து மதக் கடவுள்களை கொச்சைப்படுத்திப் பேசியதற்காக பல்லாயிரம் முறை மன்னிப்பு கேட்க வேண்டும். இவர்களின் உண்மை முகமும் மக்களுக்குத் தெரியவந்ததாலேயே பதற்றத்தில் ‘ரஜினிகாந்தை இயக்குவது பா.ஜ.க, ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றெல்லாம் பேசிவருகிறார்கள். எங்களுடைய கட்சியை வளர்க்கத்தான் நாங்கள் பார்ப்போமே தவிர, ரஜினிகாந்த்தை வளர்ப்பது எங்கள் வேலையல்ல. எனவே, ரஜினியின் பேச்சுக்கும் பா.ஜ.க-வுக்கும் சம்பந்தமில்லை.

வானதி சீனிவாசன்:

திராவிட கட்சிகள் செல்லக்கூடிய பாதையிலிருந்து மாறுபட்டு, ஆன்மிகரீதியிலான அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார் ரஜினி. அவர் தெரிவிக்கும் கருத்துகள், திராவிட கட்சிகளுக்கு முரண்பாடாகத்தான் தெரியும். ரஜினி என்ன பேசினாலும் அதை ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்ற அளவுக்கு அவரிடம் சக்தி இருக்கிறது. எனவே, அவரை பின்னிருந்து ஓர் அரசியல் கட்சி இயக்க வேண்டிய அவசியமே இல்லை. ‘தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறேன்’ என்றுதான் ரஜினிகாந்தும் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். எங்களுடன் நேரெதிர் கொள்கைகளைக்கொண்ட திராவிட கட்சி களுடனேயே பா.ஜ.க கூட்டணி வைத்திருக்கிறது. எனவே, வரும் காலத்தில் ரஜினியுடன் எங்களுக்கு கூட்டணி அமைய நேரிட்டால் அது ஆச்சர்யமோ அதிசயமோ இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு