Published:Updated:

ரஜினி மன்ற நிர்வாகிகளைக் குழப்பும் பிரபலங்கள்... தகவலைக் கொண்டு சேர்க்கத் தயாராகும் தனி டீம்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினி தன்னுடைய செய்தியை மன்ற நிர்வாகிகளிடமும் மக்களிடமும் எடுத்துச் செல்ல தனக்கு நம்பிக்கைக்குரிய சிலரைத் தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

ரஜினியின் `முத்தான மூன்று திட்டங்கள்' குறித்த பரபரப்பு ஊடகங்களில் உச்சம் பெறுவதற்கு முன்பே, கொரோனா அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டது. கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போய்விட்டதால் தற்போது ரஜினி சென்னையில்தான் இருக்கிறார். ஆனாலும் கொரோனா பீதி எல்லோரையும் ஆட்டுவித்து வரும் நிலையில், அடுத்து வரும் 20 நாள்களுக்கு ரஜினி தரப்பிலிருந்து எந்தவிதமான புதிய அறிவிப்பும் வராது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ரஜினி மக்கள் மன்ற கட்டமைப்பு விஷயங்களில்தான் தற்போது அவர் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் அறிவித்த மூன்று திட்டங்களை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் பணியை மன்றத்தினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். சில நாள்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் காரணமாக, அந்தப் பிரசாரப்பணியை தற்காலிகமாக ஒத்திவைக்கும்படி தலைமை ரசிகர் மன்றத்தில் இருந்து தகவல் போயிருக்கிறது. அதற்குள் ரஜினிக்கு திடீர் யோசனை தோன்ற, அவரது மூன்று திட்டம் தொடர்பான பிரசாரத்துக்குப் போகும்போதே, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் சேர்த்தே வினியோகிக்கச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இந்தத் தகவலும் உடனே மாவட்ட அளவில் மன்றத்தினருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

அதையடுத்து, தற்போது கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தையும் ரஜினி ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர். அதேபோல், தற்போது கிடைத்துள்ள இடைவெளியைப் பயன்படுத்தி, யார் யார் வேட்பாளர்கள் என்கிற ஆலோசனையிலும் ரஜினி இறங்கியிருக்கிறாராம். மன்றத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க உயர்மட்டக்குழு ஒன்றை விரைவில் அமைக்கும் திட்டத்தில் ரஜினி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தக் குழுவில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டுமென்று அரசியல் பிரபலங்களும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களும், தொழில் முனைவோரும் முட்டி மோதிக்கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பொதுவாக தன்னைப் பார்க்க வி.ஐ.பி-க்கள் யார் விருப்பம் தெரிவித்தாலும் ரஜினி தட்டிக்கழிப்பதில்லை. யார் எந்த ஆலோசனை சொன்னாலும் உள்வாங்கிக்கொள்வார்.

சமீபகாலமாக அவரைச் சந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இப்படியாக ஓரிரு முறை ரஜினியைச் சந்தித்த நிகழ்வுகளை வைத்துக்கொண்டு, `நாங்கள்தான் தலைவருக்கு நெருக்கம்... அரசியல் ஆலோசனைக் குழுவில் இருக்கிறோம்' என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் சிலர், அதை வைத்து ஆதாயம் தேடும் முயற்சியிலும் இறங்கிவிடுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, ரஜினியின் அரசியல் என்ட்ரி, புதிய கட்சி அறிவிப்பு, நிர்வாகிகள் நியமனங்கள் தொடர்பாக அ.தி.மு.க மற்றும் தி.மு.க தரப்பிலிருந்து பல்வேறு வதந்திகளைக் கிளப்பி விடுவதாக ரஜினிக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதில் ரஜினி மிகவும் நொந்து போயிருக்கிறாராம். இதை எப்படியோ தெரிந்து வைத்திருக்கும் பிரபலங்கள் சிலர், மன்றத்தினரின் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்கிறோம் என்ற பெயரில் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

இவர்களுக்கும் ரஜினிக்குமான உறவு, நெருக்கம் பற்றிக் குழப்பமடையும் மன்ற நிர்வாகிகள் பலரும், `ரஜினி மன்ற ரசிகர்களின் சந்தேகங்களைப் போக்குவதற்கு மன்றத்தின் சீனியர்களால்தான் முடியும். மன்றத்தின் புதுமுகங்களுக்கு என்ன தெரியும்’ என்று வினா எழுப்புகிறார்கள்.

மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ரஜினி
மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ரஜினி
இந்த நீதிமான்கள் செய்ததையும் ரஞ்சன் கோகோய் செய்ததையும் நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள்! #MustRead

ரஜினிக்கு நெருக்கம் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் ஆங்காங்கே மன்றத்தினருடன் கைகுலுக்க ஆரம்பித்திருக்கும் தகவல் ரஜினியின் காதுகளையும் எட்டியிருக்கிறது. மன்ற முக்கிய நிர்வாகிகளை தேடிப்போய்ப் பார்க்கும் அந்தப் பிரபலங்கள், ஏதாவது ஒரு காரணம் கூறி தொடர்பைப் பலப்படுத்தப் பார்க்கிறார்களாம். இவர்களுடன் பழகுவதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் மன்றத்தினர் தவிக்கிறார்கள். ஏற்கெனவே மன்ற செயல்பாடுகள் கடந்த ஒரு வருடமாக சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்த நிலையில், ரஜினியுடன் தொடர்புடைய பிரபலங்கள் அழைத்தால் அதிகாரபூர்வமாக போய் கலந்துகொள்வதா வேண்டாமா என்றும் புரியாமல் நிர்வாகிகள் விழிக்கிறார்கள்.

ரஜினியின் மூன்று திட்டங்களைப் பிரசாரம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் என்கிற பெயரில்தான் இந்தப் பிரபலங்கள் மன்றத்தினரை அணுகுவதால் அதற்கென யாரையாவது நியமிக்க வேண்டுமென்றும் மன்ற நிர்வாகிகள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஜினியின் முடிவுகள் குறித்தும், அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள், மன்றச் செயல்பாடுகள் குறித்த சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள தலைமை மன்றத்தில் பொறுப்பாக சிலரை நியமிக்க வேண்டுமென்பதே இவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய சென்னையில் உள்ள மன்ற முக்கியப் பிரமுகர் ஒருவர், ``ஊடகங்களிடம் யாரும் பேச வேண்டாம் என்றுதான் எங்களுக்கு முதலில் கூறப்பட்டது. ஆனால் ஒரு தனியார் செய்தி சேனலில் மன்றங்களின் மாவட்டச் செயலாளர்கள் கூறியதாக சில செய்திகள் வந்தன. இதுபற்றி தலைமை மன்றத்தினரிடம் மற்ற மாவட்டச் செயலாளர்கள் கேட்டதற்கு `ஒ.கே. நீங்களும் பேட்டி கொடுங்கள்' என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டார்கள். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், திடீரென போரூரில் மன்றத்தினரைச் சந்தித்தார். ரஜினி ஆன்லைன் ஃபேன்ஸ் என்கிற பெயரில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரஜினியை பொன்ராஜ் சந்திப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதை வைத்துப் போவதா வேண்டாமா என்று குழப்பத்தில் தவித்தோம்.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

அதேபோல், பெரியவர் தமிழருவி மணியன் தரப்பில் கன்னியாகுமரியில் கூட்டம் நடத்தப்போவதாக சொன்னார்கள். கொரோனாவால் அந்தக் கூட்டம் தள்ளிப்போய்விட்டது. அவர் நடத்துவது ரஜினியின் அனுமதியுடன் அல்லது ஒப்புதலுடன் நடக்கிறதா என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. கிழக்குக் கடற்கரை சாலையில் நடிகர் லாகவா லாரன்ஸ் சில நாள்களுக்கு முன்பு ரசிகர் மன்றத்தினர் சிலரைச் சந்தித்திருக்கிறார். அங்கு ராகவா லாரன்ஸுடன் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவும் இருந்துள்ளார். அப்போது, ரசிகர்கள் சிலர் கேள்விகளை எழுப்ப.. அதற்குப் பதில் சொல்ல வந்த ரங்கராஜ் பாண்டேவுக்கும் அவர்களுக்கும் இடையே விவாதமே நடந்திருக்கிறது.

இணையதளத்தில் அரசியல் விமர்சனங்கள் செய்யும் மாரிதாஸ், வடசென்னையில் ரஜினி ரசிகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். ரஜினியைப் போன்றே தாடியுடனும் உடையுடனும் அவர் வந்ததால் அவரையே நெளிய வைக்கும் அளவுக்கு `சின்னத்தலைவர்’ என்று பார்வையாளர் வரிசையில் ஒருவர் கோஷம் போட்டிருக்கிறார். இவர்களைக் காக்கா பிடிக்கும் வேலையை மன்றத்தில் ஒரு சிலர் செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதெல்லாம் தொடர்கதையாகி வருகிறது. மன்ற நிர்வாகிகளுக்கு தன்னுடைய முடிவுகளை அவ்வப்போது தெரிவிப்பதற்கான தொடர்பாளர்களை ரஜினி நியமிப்பது மட்டும்தான் இந்தக் குழப்பங்களுக்கு முடிவு கட்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் விரைவில் ரஜினி இதற்கு முடிவு கட்டுவார் என்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார்.

ரஜினி - மாரிதாஸ்
ரஜினி - மாரிதாஸ்

ரஜினி தன்னுடைய செய்தியை மன்ற நிர்வாகிகளிடமும் மக்களிடமும் எடுத்துச் செல்ல தனக்கு நம்பிக்கைக்குரிய சிலரைத் தேர்ந்து எடுத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதுபற்றி ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, ரங்கராஜ் பாண்டே, மாரிதாஸ் ஆகியோருக்கு மட்டும் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுவதற்கு ரஜினி தரப்பிலிருந்தே கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

அதேநேரத்தில் ரஜினி மன்றத்தினரை ஒரு சிலர் தங்களுடைய ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கும்பொருட்டு `மன்றத்தினரை அரசியல் பிரபலங்கள் யாரும் நேரிடையாக அணுகவேண்டாம். அதேபோல், மன்றத்தினரும் அவர்களுடன் பழகவேண்டாம்' என்று விரைவில் ரஜினி அறிவிப்பு வெளியிடுவார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

இதேபோல ரஜினியின் மனைவி லதா நடத்திவரும் சமூக அமைப்பில் மன்ற நிர்வாகிகள் யாரும் இணையவோ, அவற்றின் நடவடிக்கைகளில் பங்கேற்கவோ கூடாது என்றும் ரஜினி உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி எதற்கோ தயாராகிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு