Published:Updated:

“எல்லாத்தையும் மாத்துவோம்” - ரஜினியை மாற்றிய போன் கால்!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

ரஜினியின் வியூகம் என்ன?

“நான் சிகிச்சை பெறும்போது தமிழக மக்களின் பிரார்த்தனை, வேண்டுதலால்தான் உயிர்பெற்று வந்தேன். அவர்களுக்காக இப்போது என் உயிரே போனாலும் சந்தோஷப்படுவேன்...” - 2020, டிசம்பர் 3-ம் தேதி இப்படி உணர்ச்சிகரமாகப் பேசி அரசியலுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். கடந்த வாரம்வரை உடல்நிலையைக் காரணம்காட்டி ஒதுங்கியிருந்தவர்... அமித் ஷாவின் வருகையின்போது வீட்டைவிட்டு வெளியே வராதவர்... நிர்வாகிகள் கூட்டதில் ‘தினமும் நான் 17 மாத்திரைகள் சாப்பிடுகிறேன். முதலில் எனக்குத்தான் தொற்று ஏற்படும்’ என்கிறரீதியில் கவலையை வெளிப்படுத்தியவர்... திடீரென ‘யூ டர்ன்’ அடித்து, அரசியலுக்குப் பிள்ளையார்சுழி போட்டிருப்பது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மனதை மாற்றிய மோடியின் போன் கால்!

நவம்பர் 30-ம் தேதியன்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தியபோது, ‘கட்சி ஆரம்பிக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறேன்’ என்றோ... `விரைவில் அறிவிப்பு வரும்’ என்றோ எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால், சில மாவட்ட நிர்வாகிகளின் நடவடிக்கை குறித்துத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மற்றபடி தனது உடல்நிலை குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்ட ரஜினி, ‘ `தலைவர் என்ன முடிவெடுத்தாலும், அதை நாங்க ஏற்க தயார்’னு மட்டும் மீடியாகிட்ட சொல்லிடுங்க. அரசியல் முடிவை நேரம் வரும்போது நான் சொல்லிக்கிறேன்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டுவிட்டாராம். வீட்டுக்கு வந்தாலும், ரஜினியின் மனம் அலைபாய்ந்தபடியே இருந்திருக்கிறது என்கிறார்கள் அவருக்கு மிக நெருக்கமான நண்பர்கள். அவர்களிடம் கூட்டத்தில் பரிமாறிக்கொண்ட தகவல்கள் குறித்து ரஜினி விவாதித்திருக்கிறார். அப்போதுதான் அந்த போன் கால் வந்ததாகச் சொல்கிறார்கள்.

இது குறித்து ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் விசாரித்தோம். “நவம்பர் 30-ம் தேதி, தனது வாரணாசி தொகுதியில் சுற்றுப்பயணத்திலிருந்த பிரதமர் மோடிக்கு, மன்றக் கூட்டத்தில் ரஜினி பேசிய விஷயங்கள், அதற்கு நிர்வாகிகள் அளித்த பதில்கள் என அனைத்தும் உளவுத்துறை மூலமாகக் கொண்டு செல்லப்பட்டிருந்தன. கங்கை நதிக்கரையில் விளக்கேற்றிக் கொண்டாடப்படும் ‘தேவ் தீபாவளி’ வைபவத்தை முடித்துவிட்டு, அன்றிரவு ரஜினியுடன் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி. ரஜினியின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் கேட்டறிந்த மோடி, ‘ஒவ்வொரு மாநிலத்திலும் மாற்று அரசியலை முன்வைத்து பா.ஜ.க இயங்குகிறது. தமிழகத்திலும் ஊழலற்ற, நேர்மையான அரசியல் தேவை. அது உங்கள் மூலமாக நடக்க வேண்டுமென்று விரும்புகிறேன். எங்களுடன் கூட்டணி சேருங்கள் என்று சொல்லவில்லை, ஒரு மாற்றத்தை உருவாக்குங்கள் என்றுதான் சொல்கிறேன். ஒரு நல்ல முடிவை எடுங்கள்’ என்று பேசிவிட்டு வைத்துவிட்டார். அதன் பிறகுதான் ரஜினியின் மனதில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன.

“எல்லாத்தையும் மாத்துவோம்” - ரஜினியை மாற்றிய போன் கால்!

கடந்த ஒரு வருடமாக ரஜினியை வளைப்பதற்கு பா.ஜ.க தரப்பு எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இறுதி முயற்சியாகத்தான் ரஜினியிடம் பிரதமரே நேரடியாகப் பேசியிருக்கிறார். நவம்பர் 21-ம் தேதி, அமித் ஷா தமிழகம் வந்து சென்ற பிறகு சில முக்கியப் பிரமுகர்கள் ரஜினியைச் சந்தித்தனர். ‘நீங்கள் பா.ஜ.க-வுடன் கைகோக்க வேண்டாம். ஆனால், தி.மு.க-வுக்கு எதிராகக் களத்தில் நில்லுங்கள். நீங்கள் வருவது உறுதியானால், அ.தி.மு.க-வை மத்திய அரசு பார்த்துக்கொள்ளும். வரும் சட்டமன்றத் தேர்தல், ‘ஸ்டாலின் Vs ரஜினி’ இடையேதான் நடக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் ரஜினி எந்த உறுதியையும் அப்போது அளிக்கவில்லை. ஆனால், மோடியின் பேச்சு ரஜினியின் மனதை மாற்றிவிட்டது. அதன் பிறகுதான் ‘எல்லாத்தையும் மாத்துவோம்’ என்று அவர் களத்தில் இறங்கிவிட்டார்” என்று சொன்னவர்களின் குரலில் உற்சாகம் கூடியிருந்தது.

டிசம்பர் 2-ம் தேதி தன்னைச் சந்திக்க வந்த தமிழருவி மணியனிடம், “எனது உடல்நிலை குறித்து ரசிகர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். அவர்களுக்கு என்று எதுவும் நான் செய்யவில்லை. அதற்காகவாவது கட்சியை ஆரம்பித்துவிடலாம் என்று நினைக்கிறேன்” என்று பேசியிருக்கிறார் ரஜினி. அதற்கு தமிழருவி மணியன், ‘உங்கள் விருப்பம் எதுவோ, அதைச் செய்யுங்கள். உங்கள் உடல்நிலையை கவனமாகப் பார்த்துக்கொள்வது எல்லாவற்றையும்விட முக்கியம்’ என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டாராம்.

மறுநாள், நவம்பர் 3-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் தமிழருவி மணியன், அர்ஜுனமூர்த்தி மற்றும் சில நண்பர்களைத் தனது வீட்டுக்கு அழைத்திருக்கிறார் ரஜினி. அப்போதுதான், கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடப்போவது குறித்தும், தற்காலிகப் பொறுப்பாளர்களாக தமிழருவி மணியனையும் அர்ஜுனமூர்த்தியையும் நியமிக்கப்போவதையும் ரஜினி கூறியிருக்கிறார். கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடும் முன்பாக, பிரதமர் மோடியிடம் தகவல் சொல்லிவிட்டே ட்விட்டரில் தனது அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி என்கிறார்கள் போயஸ் கார்டனுக்கு நெருக்கமானவர்கள்.

“எல்லாத்தையும் மாத்துவோம்” - ரஜினியை மாற்றிய போன் கால்!

குழப்பத்தில் கழகங்கள்

ரஜினியின் இந்த திடீர் அறிவிப்பு, இரண்டு கழகங்களுக்கும் எதிர்பாராத தாக்குதல் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் என்று கூட்டணிக் கட்சிகள் வரிசையாக தங்களது தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டாலும்கூட ‘பெண்கள், பட்டியல் சமூக வாக்குகள் ரஜினி பக்கம் சாய்ந்துவிடுமோ?’ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறது அறிவாலயம். 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி, ரஜினி, சீமான், கமல்ஹாசன் எனப் பலமுனைத் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டுமென்பதால், தி.மு.க தரப்பில் திணற ஆரம்பித்திருக்கிறார்கள். இது போதாதென்று, அழகிரியும் தன் பங்குக்கு ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்.

புதிய அமைப்பு ஒன்றைத் தொடங்கி, ரஜினியுடன் கூட்டணிவைக்கத் திட்டமிடுகிறாராம் அழகிரி. டிசம்பர் 2-ம் தேதி ரஜினியுடன் அழகிரி அலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது. பரஸ்பரம் உடல்நல விசாரிப்புகளுக்குப் பிறகு பேச்சு அரசியலுக்குத் திரும்பியிருக்கிறது. அப்போது, “நீங்கள் எப்போது வந்தாலும், நான் உங்களுடன் கரம்கோக்கத் தயார். கலைஞரே உங்களுடன் கூட்டணி வைப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். அவரின் தொண்டர்கள் என் வழியில் உங்களுக்காகக் களத்தில் நிற்பார்கள்” என்று உற்சாகமூட்டினாராம் அழகிரி. ‘ஒருவேளை ரஜினி - அழகிரி கூட்டணி அமைந்தால், அது ஏற்படுத்தப்போகும் தாக்கம், தி.மு.க-வை எந்த அளவுக்கு பாதிக்கும்?’ என்கிற கவலையும் தி.மு.க வட்டாரங்களில் நிலவுகிறது.

தி.மு.க ஒருபக்கம் கவலையில் ஆழ்ந்திருக்கிறது என்றால், அரண்டுபோயிருக்கிறது இலைக்கட்சி. இது குறித்தும் பா.ஜ.க வட்டாரங்களில் பேசினோம். “ஜனவரிக்குப் பிறகு அ.தி.மு.க மீதான தாக்குதலை டெல்லி ஆரம்பித்துவிடும். டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்குகளை வேகப்படுத்தப்போகிறார்கள். 2017-ல் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியதைப் போலவே இப்போதும் முடக்கிவிட்டு, அ.தி.மு.க-வை உடைப்பதுதான் பா.ஜ.க-வின் திட்டம். சி.பி.ஐ விசாரணையிலுள்ள வழக்குகளில் பல அமைச்சர்கள் கைதுசெய்யப்படலாம். உடைந்து வெளியேறும் ஓர் அ.தி.மு.க அணியை ரஜினியுடன் கூட்டணியில் சேர்த்து, தி.மு.க-வுக்கு எதிராகக் களமிறக்குவதுதான் திட்டம். அவர் எங்களுடன் கூட்டணி சேராவிட்டாலும், ரஜினிக்குத் தேவையான களத்தை பா.ஜ.க-வே அமைத்துக் கொடுக்கும்” என்கின்றனர்.

“எல்லாத்தையும் மாத்துவோம்” - ரஜினியை மாற்றிய போன் கால்!

ரஜினியின் வியூகம் என்ன?

‘தி.மு.க பக்கம் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என ஓரளவுக்கு வாக்குவங்கி கொண்ட கட்சிகள் சேர்ந்திருக்கும்போது, நாமும் கூட்டணியோடு களமிறங்குவதுதான் புத்திசாலித்தனம்’ என்று ரஜினிக்கு அவரின் ஆலோசகர்கள் அட்வைஸ் செய்திருக்கிறார்கள். எனவே, ஒரு சிறு கூட்டணியையாவது ரஜினி அமைப்பார் என்று கூறப்படுகிறது. ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணிவைக்கும் முடிவிலிருந்த நடிகர் கமல்ஹாசன், இப்போது உற்சாகமாகியிருக்கிறாராம். ரஜினி ட்விட்டரில் பதிவிட்ட ‘அதிசயம்.. அற்புதம்’ என்கிற பதத்தை கமல் விழா மேடையில்தான் ரஜினி பயன்படுத்தினார். அதனால், கமல் தரப்பும் நம்பிக்கையோடு காத்திருக்கிறது.

வரும் ஜனவரி மாதத்துக்குப் பிறகு ரஜினியின் ஆக்‌ஷன் ஆரம்பமாகும் என்கிறது போயஸ் வட்டாரம். அ.தி.மு.க-விலுள்ள கொங்கு மண்டல ‘கோட்டை’ அமைச்சர் ஒருவர், தென் மாவட்டத்தில் ‘சர்ச்சை பேச்சு’ அமைச்சர் ஒருவர், ‘சயின்டிஸ்ட்’ அமைச்சர் ஒருவர், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் ‘பெல்’ ஆகியோர் முகாம் மாறலாம் என்கிறார்கள். ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து பகிரங்கமாக அறிக்கையே விடுத்திருக்கிறார் அ.தி.மு.க-வின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. அவர் மூலமாக அ.தி.மு.க பிரமுகர்கள் பலரும் ரஜினியின் தோட்டத்துக்கு பூங்கொத்துடன் வரலாம் என்று கூறப்படுகிறது. ரஜினியின் அரசியல் குருநாதர் ஆர்.எம்.வி-யுடன் இருந்த பலரும் தற்போது அ.தி.மு.க-வில் ஒரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரும் ரஜினியைத் தேடி வரலாம்.

“எல்லாத்தையும் மாத்துவோம்” - ரஜினியை மாற்றிய போன் கால்!

இவர்கள் போக, ரஜினியுடன் நட்பில் இருக்கும் முன்னாள் காங்கிரஸ் பிரமுகரான கராத்தே தியாகராஜன், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் ரஜினியுடன் கரம்கோக்கும் மனநிலையில் இருக்கிறார்களாம். பா.ஜ.க-வின் அறிவுசார் அணியின் மாநிலத் தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி, ரஜினியின் கட்சிக்கு வந்தது போன்று, இன்னும் ஏழு பா.ஜ.க முக்கியஸ்தர்கள் ரஜினியின் கட்சிக்கு வரப்போகிறார்களாம். இப்படிப் பல்வேறு கட்சியிலிருந்து வந்தவர்களுடன் கூட்டணி அமைத்து, பிப்ரவரி மாதத்திலிருந்து தீவிர அரசியலில் களமிறங்க ஆயத்தமாகிறார் ரஜினி. ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரமாண்டக் கூட்டம், Augmented Reality (AR) டிஜிட்டல் பிரசாரம் எனக் களைகட்டப்போகிறதாம் ரஜினியின் பிரசாரத் திட்டம். ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதெல்லாம் வரும் வாரங்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

“எல்லாத்தையும் மாத்துவோம்” - ரஜினியை மாற்றிய போன் கால்!

பா.ஜ.க ரோல் என்ன?

ரஜினியின் அறிவிப்பைத் தொடர்ந்து, ‘பா.ஜ.க-வின் ‘பி’ டீமாக ரஜினி செயல்படுவார்’ என்று சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்திருக்கிறது. தன்மீது காவிச் சாயம் பூச வேண்டாம் என்று அவர் ஏற்கெனவே சொல்லியிருந்தாலும், அவரது அரசியல் பயணத்துக்கு பா.ஜ.க-வின் ஆதரவு இருக்கும் என்றே சொல்கிறார்கள்.

இதுகுறித்து டெல்லியின் உள்விவகாரம் அறிந்த பா.ஜ.க தரப்பினர் நம்மிடம், “இதற்குப் பிரதிபலனாக ஒன்றே ஒன்றைத்தான் எங்கள் கட்சி எதிர்பார்க்கிறது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இல்லாத முழுமையான அரசியல் மாற்றம் நிகழ வேண்டும். 2021 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுடன் சேர்ந்து, ஆட்சி ப்ளஸ் அரசியல் மாற்றத்தை ரஜினி உருவாக்கிவிட்டால், அந்தக் களத்தை 2026 தேர்தலுக்கும் நகர்த்திக்கொண்டுபோய் நாங்கள் ஆட்சி அமைத்துவிடுவோம். இப்போது ரஜினியை நம்பி நாங்கள் விதைப்பதெல்லாம், 2026-ல் அறுவடை செய்வதற்காகத்தான்” என்கிறார்கள் விவரமாக!

“எல்லாத்தையும் மாத்துவோம்” - ரஜினியை மாற்றிய போன் கால்!

யார் இந்த அர்ஜுனமூர்த்தி?

தன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பா.ஜ.க-விலிருந்த அர்ஜுனமூர்த்தியை அறிவித்திருக்கிறார் ரஜினி. தி.மு.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு நெருக்கமான நபராக அறியப்பட்ட அர்ஜுனமூர்த்தி, தி.மு.க தரப்புக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இவரது பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டம். ரஜினி கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு வந்தபோதுகூட இவர் பா.ஜ.க-வில்தான் இருந்தார். சமீபத்தில் பா.ஜ.க-வின் வேல் யாத்திரையில் பங்கேற்று கைதாகியிருக்கிறார். ரஜினி கட்சி அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், அர்ஜுனமூர்த்தி, பா.ஜ.க-வில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்றும், அவருடன் கட்சிரீதியாக யாரும் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் ‘கடுமையான’(!!) அறிக்கையை வெளியிட்டிருக்கிறது கமலாலயம்! தற்போது ரஜினியின் சமூக வலைதளங்களைப் பார்த்துக்கொள்வதும், ரஜினியின் கட்சிக்கான லோகோ மற்றும் கொடியை வடிவமைக்கும் பணியைச் செய்வதும் இவர்தான் என்கிறார்கள்.

டிசம்பர் 31, 2017-ல் தன் அரசியல் பயணத்தை அறிவித்த ரஜினி, மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, வரும் டிசம்பர் 31-ம் தேதி அந்தப் பயணத்தை முறைப்படி தொடங்கப்போகிறார். அவர் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா அல்லது ஏமாற்றம் அளிக்குமா என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்.

***

வியாழக்கிழமை சென்டிமென்ட்!

ரஜினியின் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் வியாழக்கிழமைகளில்தான் இருக்கும். ராகவேந்திரருக்கு உகந்த நாள் வியாழக்கிழமை என்பதால், டிசம்பர் 3-ம் தேதி தனது கட்சி, அரசியல் தொடக்கத்தை முறைப்படி ரஜினி அறிவித்தாராம். அடுத்ததாக கட்சியின் பெயர், கொடியை அறிவிக்க நாள் குறித்திருப்பதும் டிசம்பர் 31-ம் தேதி வியாழக்கிழமைதான்.