கட்டுரைகள்
Published:Updated:

ஆந்திர அரசியலில் அனலைக் கிளப்பிவிட்ட ரஜினிகாந்த்... பின்னணியில் நடந்தது என்ன?

ரஜினிகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினிகாந்த்

என்.டி.ஆர் மறைவுக்குக் காரணமே சந்திரபாபு நாயுடுதான். வேண்டுமானால் என்.டி.ஆரின் பேச்சுகள் அடங்கிய சி.டி-யை ரஜினிக்கு அனுப்பிவைக்கிறேன்

நடிகர் ரஜினிகாந்தின் ஒரே ஒரு ‘மேடைப் பேச்சு’ ஆந்திர அரசியலில் கடந்த ஒரு வாரமாக அனலைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

ஆந்திராவின் பழம்பெரும் நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழா, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி விஜயவாடாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், என்.டி.ராமாராவுடனான தனது நட்பை நினைவுகூர்ந்தார். கூடவே சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்குப் பார்வை குறித்தும் பாராட்டிப் பேசினார். ``1996-ல் ஹைதராபாத் நகரத்தை ஒரு ஹை-டெக் சிட்டியாக மாற்றி அமைக்கவேண்டுமென்று சந்திரபாபு கனவு கண்டார்’’ என்றும், ``தற்போது அந்த நகரம் நியூயார்க்போல வளர்ச்சி அடைந்திருக்கிறது. இது சந்திரபாபு நாயுடுவால்தான் சாத்தியமானது’’ என்றும், ``அவரின் 2047-ம் ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டங்கள் நிறைவேறினால், ஆந்திரா இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக உருவெடுக்கும்” என்றும் புகழ்ந்து தள்ளியிருந்தார்.

ரோஜா
ரோஜா

நடிகர் ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு ஆந்திர அரசியலில் அனலைக் கிளப்பியது. ஆளும் ஜெகன்மோகன் அரசில் துணை முதல்வராக இருக்கும் நடிகை ரோஜா, “ரஜினியின் பேச்சு சிரிப்பைத்தான் வரவைக்கிறது. என்.டி.ஆர் மறைவுக்குக் காரணமே சந்திரபாபு நாயுடுதான். வேண்டுமானால் என்.டி.ஆரின் பேச்சுகள் அடங்கிய சி.டி-யை ரஜினிக்கு அனுப்பிவைக்கிறேன். இந்தியாவின் சிறந்த முதல்வராக ஜெகன்மோகன் இருக்கிறார். ``2024 நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரபாபு தரப்பினரை வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என ரஜினி எளிமையாகச் சொல்லிவிட்டுச் செல்வதை ஏற்க முடியாது. அரசியலுக்கு வராமலேயே ஒதுங்கிக்கொண்டவர் ரஜினி” என்று கடுமையாகத் தாக்கியிருந்தார்.

இதையடுத்து, “என்.டி.ஆர் மீதிருக்கும் அன்பினால்தான் ரஜினி அப்படிப் பேசினாரே தவிர, ஜெகன்மோகன் கட்சி குறித்து ரஜினி அந்த நிகழ்ச்சியில் எதுவுமே பேசவில்லை. அப்படியிருக்கும்போது நடிகர் ரஜினியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தரக்குறைவாகப் பேசியதை ஏற்க முடியாது. அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்தார். இதற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர், “ரஜினியை அழைத்து வந்து, எல்லோரும் அவரை வசைபாடும் நிலைக்குத் தள்ளியதற்காக சந்திரபாபு நாயுடுதான் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என பதிலடி கொடுத்தனர்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இதன் பின்னணியில், நடிகர் ரஜினி தரப்பும் சந்திரபாபு நாயுடுவும் தொலைபேசி வாயிலாகப் பேசிக்கொண்டதாகவும், அப்போது, ‘விமர்சனங்கள் குறித்து எதுவும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டதாகவும், பதிலுக்கு, ‘விமர்சனங்களைப் பற்றி தான் சிந்திக்கவே இல்லை, யார் என்ன சொன்னாலும் சந்திரபாபு நாயுடு மீதான மரியாதை அப்படியேதான் இருக்கும்’ என்று ரஜினி தரப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

எது எப்படியோ, கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்திருந்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர அரசியலில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவந்தார். சட்டமன்றத்திலேயே கண்ணீர்விட்டு அழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்தச் சூழலில்தான் ரஜினியின் பேச்சு சந்திரபாபு நாயுடுவுக்கும், அவரின் கட்சியினருக்கும் மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதை உணர்ந்துதான் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் ரஜினிக்கு எதிராகக் கொந்தளித்திருக்கிறது என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.