Published:Updated:

ரஜினிக்கு எதிராக யுத்தம்! - ஏன் பாய்ந்தார் எடப்பாடி?

Edappadi Palaniswami
பிரீமியம் ஸ்டோரி
News
Edappadi Palaniswami

`பி.ஜே.பி-யின் ‘விருது’ தூண்டில்! நழுவும் ரஜினி... கலக்கும் கமல்!’ என்ற அட்டைப்படக் கட்டுரையைத் தாங்கிய ஜூனியர் விகடன் இதழ், நவம்பர் 6-ம் தேதியன்று வெளியானது.

மறுநாளே ‘திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது மாதிரி எனக்கும் பூச முயற்சி செய்கிறார்கள். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்... நானும் மாட்ட மாட்டேன்’ என்று ரஜினி பேசிய விஷயம், அனைத்து அரசியல் கட்சிகளையுமே திரும்பிப் பார்க்கவைத்துவிட்டது. குறிப்பாக, `ரஜினி வருவார் வருவார்’ என்று இத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்த பி.ஜே.பி தரப்புக்கு பயங்கர ஷாக். அதேசமயம், இந்த விஷயத்தைவைத்து ரஜினிக்கே தற்போது ஷாக் தர ஆரம்பித்துவிட்டார் தமிழக முதல்வரும் அ.தி.மு.கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி! ``இது ரஜினி கொஞ்சம்கூட எதிர்பார்க்காத அதிர்ச்சி ட்விஸ்ட்’’ என்கிறார்கள் தமிழக அரசியலை உற்றுநோக்கும் பத்திரிகையாளர்கள்.

Rajini, Kamal
Rajini, Kamal

``ரஜினி என்றதுமே, `அவர் பி.ஜே.பி-யின் விசுவாசி’ என்றுதான் பொதுவாகவே அனைவருக்கும் தோன்றும். அதற்கு ஏற்றாற்போலவே அவருடைய அறிக்கைகளும் அமைந்திருக்கும். சமீபத்தில்கூட `வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி ரஜினியைக் குஷிப்படுத்தியது பி.ஜே.பி அரசு. இதுபோன்ற காரணங்களால், ரஜினி விஷயத்தில் எப்போதுமே அமைதியாகத்தான் இருப்பார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தற்போது `காவிக்கு’ எதிர் நிலையில் இருப்பதுபோல் ரஜினி பேசவும், அதையே சரியான வாய்ப்பாக எடுத்துக்கொண்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. கிட்டத்தட்ட இது ரஜினிக்கு எதிரான அவருடைய யுத்தம் என்றே சொல்லாம்’’ என்கிறார்கள் தமிழக அரசியலை கவனிப்பவர்கள்.

2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், `அரசியல் இயக்கம் ஆரம்பிப்பேன்’ என்ற அறிவிப்பை ரஜினி வெளியிட்டார். அதன் பிறகு, `தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது’ என்று அடிக்கடி ரஜினி கூறுவதுண்டு. ஆனால், அதை அ.தி.மு.க-வோ, எடப்பாடி பழனிசாமியோ பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. அதேபோல் ரஜினியைப் பற்றி வெளிப்படையாக எதையும் விமர்சித்ததும் கிடையாது. சொல்லப்போனால், `நாங்களே ரஜினி ரசிகர்கள்தான்’ என்று தமிழக அமைச்சர்களேகூட ரஜினிக்கு ஜால்ரா தட்டியதுகூட உண்டு. இந்நிலையில், கடந்த 8-ம் தேதியன்று கமல் அலுவலகத்தில் நடந்த விழாவில் செய்தியாளர் களிடம் பேசிய ரஜினி, ‘‘தமிழகத்தில் இன்னும் ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது’’ என்று வழக்கம்போல்தான் சொன்னார். ரஜினியின் இந்த வார்த்தைகளே அன்று தமிழகத்தில் வைரலாயின. “என்மீது காவியைப் பூச முயல்கிறார்கள்” என்று அவர் சொன்னதும் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், இந்தத் தடவை அ.தி.மு.க தரப்பு இதை வேடிக்கை பார்க்கவில்லை. `காம்பவுண்ட் அரசியல்வாதி’ என்று ஆரம்பித்து காய்ச்சித்தள்ள ஆரம்பித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “ரஜினியின் பேச்சுக்கு இனியும் சும்மா இருக்கக் கூடாது என நினைக்கிறது எடப்பாடி தரப்பு. முதல் தாக்குதலை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்திலிருந்து ஆரம்பித்தார். `கட்சி தொடங்குவேன் என்று இப்போதும் சொல்லிவருகிறார்கள். வீட்டு காம்பவுண்ட்டுக்குள் இருந்து பேட்டி கொடுப்பவர்களெல்லாம் எம்.ஜி.ஆர் ஆக முடியாது’ என்று ரஜினியைத் தாக்கினார். பிறகு, கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, `ரஜினி என்ன அரசியல் கட்சித் தலைவரா, ஒரு நடிகர்தானே... வெற்றிடம் குறித்து அவர் ஏன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்?’ என்று வெகுண்டெழுந்தார் எடப்பாடி.

சொந்த ஊரான சேலத்துக்குப் போனதும் எடப்பாடியின் பாய்ச்சல் அடுத்த லெவலுக்குச் சென்றது. இந்த முறை கமலின்மீதும் சேர்ந்தே திரும்பியது அவருடைய கோபம். `வெற்றிடம் என்று சொல்லும் கமல், விக்கிரவாண்டி, நாங்குநேரித் தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? நாடாளுமன்றத் தேர்தலில் அவர் எத்தனை ஓட்டுகள் வாங்கினார் தெரியுமா? திரைத்துறையில் வாய்ப்பு இல்லாததால் அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பிக்கிறார்கள். அரசியலுக்கு வந்த சிவாஜியின் நிலை தெரியுமல்லவா?’ என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அடுத்தடுத்த நாளில் ரஜினி, கமல் என்று எடப்பாடியார் பாய்ச்சல் காட்டுவதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் கணக்கு இருக்கிறது” என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடிக்கு நெருக்கமான சிலரிடம் இதுபற்றிக் கேட்டபோது, “பா.ஜ.க தரப்பு ரஜினியை வைத்து தமிழக அரசியல் களத்தில் நிலைகொள்ள நினைத்தது. அதை அ.தி.மு.க-வும் அமைதியாக வேடிக்கை பார்த்தது. ரஜினி கட்சி ஆரம்பிப்பதைவிட அவரை வைத்து அ.தி.மு.க கூட்டணிக்குக் கூடுதல் வாக்குகள் வாங்குவதுதான் புத்திசாலித்தனம் என்று எடப்பாடி தரப்பு நினைத்து வந்தது. ஆனால், சமீபத்தில் பா.ஜ.க தரப்பில் மூத்த தலைவர் ஒருவர் எடப்பாடி தரப்பிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் ரஜினி வந்தால், அவரை முதல்வர் வேட்பாளராகக்கூட முன்மொழியலாம்’ என்று சொன்னதுதான், எடப்பாடியாரின் கோபத்துக்கு முதல் அச்சாரம்போட்டது. இந்த நிலையில், வெற்றிடம் என்று ரஜினி பேசிவைக்க, எரிச்சலாகி விட்டார் எடப்பாடியார். ஏற்கெனவே தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று ஆண்டுகளைக் கடக்க விருக்கிறார். ஆட்சியையும் கட்சியையும் தன்வசப்படுத்திக் கொண்டுவிட்டார். டெல்லியும் எடப்பாடியாரின் மூவ்களை அங்கீகரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், ஜெயலலிதாவுக்கு அடுத்து ஆளுமையான ஒரு தலைவராகவே தன்னை உணர்கிறார் எடப்பாடியார். இதற்குப் பிறகும் வெற்றிடம் என்று ரஜினி பேசுவது, `தன்னை ஒரு பொருட்டாகக்கூட ரஜினி மதிக்கவில்லை’ என்று எடப்பாடியாரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. அதனால்தான் அவர் தன் அஸ்திரங்களை ஏவ ஆரம்பித்துவிட்டார்.

‘ரஜினியைத் தூண்டிவிடுவதே கமல்தான். அவர்கள் இருவரும் இணைந்து செயல்படும் திட்டத்தில் இருக்கிறார்கள்’ என்று உளவுத்துறை ஒரு தகவலைத் தட்டிவிட்டுள்ளது. இதை வைத்து, ‘கமல் தனியாக இருக்கும் வரை பெரிதாக ஆபத்து இல்லை. ரஜினியுடன் இணைந்தால் மிகப்பெரிய ஓட்டுவங்கியாக மாறுவார்கள். அது, அ.தி.மு.க-வைப் பாதிக்கக்கூடும்’ என்று கட்சியினர் சிலர் கவலையாகப் பேசியதும்

எடப்பாடியை மிகவும் யோசிக்கவைத்துவிட்டது. எனவேதான், ரஜினி - கமல் இணைப்பை முளையிலேயே கிள்ளியெறிய முடிவுசெய்து விட்டார்” என்றார்கள்.

ரஜினி தரப்பில் எடப்பாடியின் எதிர்த்தாக்குதலை அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம், ரஜினி விமர்சித்தாலுமேகூட மனம் தளராத விக்கிரமாதித்தன்போல பா.ஜ.க தரப்பும் ரஜினியை தங்கள் பக்கம் கொண்டுவர தொழிலதிபர் ஒருவர் மூலம் மீண்டும் முயல்கிறது. ரஜினிக்கு நெருக்கமான சிலரோ, ‘‘இப்போதே எதற்காக பா.ஜ.க-வைப் பகைத்துக்கொள்ள வேண்டும்? சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கட்சி ஆரம்பித்துவிட்டுத்தான் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்திருக்க வேண்டும்” என்று ரஜினிக்கு ஆலோசனை சொன்னார்களாம்.

ரஜினியின் ‘அரசியல் வெற்றிடம்’ கருத்து தி.மு.க-விலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான் ரஜினியின் பேச்சைத் தொடர்ந்து, ‘‘வெற்றிடத்தைக் காற்று நிரப்புவதுபோல், தலைமைக்கான வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்” என்று பேட்டி தட்டினார் துரைமுருகன். முரசொலி நாளிதழிலும் ரஜினியைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இப்போது, `தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது. ரஜினியால் மட்டுமே அதை நிரப்ப முடியும்’ என்று தன் பங்குக்கு மு.க.அழகிரி கல்லெறிந்திருப்பது தி.மு.க தரப்பின் உஷ்ணத்தை இன்னும் உச்சத்துக்குக் கொண்டுபோயுள்ளது.

இந்த நிலையில், ‘தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ளக் கூடாது’ என்று ரஜினி குடும்பத்தினர் தரப்பில் யோசிக்கிறார்களாம். குறிப்பாக, காவி விஷயத்தைக் குறிப்பிட்டுப் பேசியது பா.ஜ.க-வுக்கு எதிரான விஷயம். இப்படிப் பேசியிருக்கத் தேவையில்லை என்று அங்கே ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறதாம். சமீபகாலமாக பா.ஜ.க முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் கிச்சன் கேபினட், ரஜினியின் பா.ஜ.க எதிர்ப்புப் பேச்சை ரசிக்கவில்லை என்றே சொல்கிறார்கள்.

“தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது. ரஜினியால் மட்டுமே அதை நிரப்ப முடியும்” - மு.க. அழகிரி
ரஜினிக்கு எதிராக யுத்தம்! - ஏன் பாய்ந்தார் எடப்பாடி?

இதற்கு நடுவே, ‘‘ரஜினியுடன் கூட்டணி என்றால், அது மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும். இப்போதுதான் பா.ஜ.க-வுக்கு எதிராக ரஜினி வாய் திறந்துள்ளார். அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ரஜினிக்கு எதிராகத் திரும்பியுள்ளன. இதுபோன்ற சூழலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் ரஜினி செல்ல மாட்டார். ரஜினி தலைமையில் வலுவான கூட்டணியை நாம் அமைப்பதற்கு எடப்பாடியின் பேச்சுகளே உதவி செய்யப்போகின்றன. இவையெல்லாம் எங்களுக்குச் சாதகமே” என்று குஷியோடுப் பேசிக்கொண்டுள்ளனர் கமல் கட்சி நிர்வாகிகள்.

நவம்பர் 17-ம் தேதியன்று ‘கமல் 60’ நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது. நவம்பர் 8-ம் தேதி இயக்குநர் பாலசந்தரின் சிலை திறப்புவிழாவில் பேசிய ரஜினி, ‘‘இன்று நிறைய பேச விரும்பவில்லை. 17-ம் தேதியன்று பேசிக்கொள்கிறேன்” என்று சொல்லியே பேச்சை முடித்தார். நவம்பர் 14-ம் தேதியன்று மாலை சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்த கமலும், ‘தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மை’ என்று ஏற்கெனவே ரஜினி சொன்னதையே இன்னும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார்.

ஆகக்கூடி நவம்பர் 17-க்காக தமிழகம் வெயிட்டிங்!