சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஏப்ரல் பிளான்... ரஜினி அரசியல் ‘அண்ணாத்த’!

ரஜினியின் ஏப்ரல் பிளான்
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினியின் ஏப்ரல் பிளான்

- ப்ரின்ஸ்

ஏப்ரலில் கட்சி தொடக்கம், ஆகஸ்டில் மாநாடு, 2021 தேர்தலில் வெற்றி, தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சர்... ‘படையப்பா’ படத்தில் ‘வெற்றிக்கொடிகட்டு’ பாடல் காட்சியைப்போல் இதுதான் ரஜினியின் பரபரப்புத் திட்டம் என்கிறது ரஜினி வட்டாரம். ரஜினியும் ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ ஷூட்டிங்கை முடித்துவிட்டு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு, சிலருடன் ரகசிய உரையாடல் என அரசியல் காயின்களைச் சுழற்றிக்கொண்டுதான் இருக்கிறார். உண்மையிலேயே ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன, ‘அண்ணாத்த’தான் அவரின் கடைசி சினிமாவா, ரஜினியின் அடுத்த மூவ் என்ன?!

முதலில் சினிமா...

‘முத்து’ படத்துக்குப் பிறகு ஏராளமான நடிகர்கள் நடிக்கும் ரஜினியின் கிராமத்துக் கதை, சிவா இயக்கும் ‘அண்ணாத்த’. ‘முள்ளும் மலரும்’ படம்போல அண்ணண் - தங்கச்சி எமோஷனல் கதை இது. ரஜினிக்குத் தங்கையாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மனைவியாக நயன்தாராவும், முறைப் பெண்களாக குஷ்புவும் மீனாவும் நடிக்கிறார் கள். முக்கியமான கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், பிரகாஷ்ராஜ் நடிக்கின்றனர். காமெடிக்கு சூரி மற்றும் சதீஷ். வில்லன் கேரக்டரில் யார் என்பது மட்டும் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் என்பதுதான் திட்டம்.

இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் முடிந்துவிட்டன. இதில் ரஜினி நடித்த காட்சிகள்தான் பெரும்பாலும் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த மாத இறுதியில் ரஜினி நடிக்கவேண்டிய காட்சிகள் புனே மற்றும் கொல்கத்தாவில் படம்பிடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக ஷூட்டிங் தள்ளிப்போகலாம் என்கிறார்கள்.

இந்நிலையில் ‘கைதி’ ரிலீஸுக்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜிடம் கதைகேட்டு அவரை ஒப்பந்தம் செய்துவைத்திருந்தது ராஜ்கமல் பிலிம்ஸ். இந்தக் கதையில் கமல் நடிப்பதாகத்தான் முதலில் திட்டம். ஆனால், திடீரென ரஜினி ராஜ்கமல் தயாரிப்பில் நடிக்க கிரீன் சிக்னல் கொடுத்ததால் லோகேஷ் கதையை அப்படியே ரஜினிக்கு மாற்றியது கமல் தரப்பு. லோகேஷும் ரஜினியிடம் கதை சொல்ல, அவரும் ‘கதைக்கு’ மட்டும் ஓகே சொல்லிவிட்டார்.

ஏப்ரல் பிளான்... ரஜினி அரசியல் 'அண்ணாத்த'!
ஏப்ரல் பிளான்... ரஜினி அரசியல் 'அண்ணாத்த'!

ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் கமல் தயாரிப்பில் ரஜினி நடித்தால் இருதரப்பு ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டாக்கலாம் என நினைக்கிறாராம் ரஜினி. கொரோனா பிரச்னையால் திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனால், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பும் தள்ளிக்கொண்டே போகும். இதற்குள் 2021 சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும். அந்த நேரத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடித்துப் படம் வெளியானால் ரசிகர்கள் அதை எப்படிப் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறாராம் ரஜினி. கமல்ஹாசன் அரசியலில் சேர்ந்து பயணிக்கலாம் என்று சொன்னாலும், அந்த முடிவு தேர்தல் அரசியலுக்குச் சரிப்பட்டு வருமா என்றும் ரஜினிக்குத் தயக்கம். எனவே ராஜ்கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

‘அண்ணாத்த’ டு அரசியல்!

கட்சியின் பெயரை ஏப்ரல் 14-ம் தேதி அறிவித்துவிட்டு ஆகஸ்டில் திருச்சியில் மாநாடு என்பதுதான் ரஜினியின் பிளான். இச்சூழலில்தான் கடந்த வாரம் ‘ரஜினி மக்கள் மன்ற’ மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பில்தான் ரஜினி “நான் கட்சித்தலைவர் மட்டுமே; முதலமைச்சர் வேட்பாளர் இல்லை’’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், இதற்கு ரஜினி மக்கள் மன்றத்திலேயே ஆதரவில்லையாம். இதைத்தான் , ‘எனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம்’ எனப் பேட்டியளித்திருக்கிறார் ரஜினி.

ரஜினி
ரஜினி

ரஜினியை அடிக்கடி சந்தித்துவரும் தமிழருவி மணியன் மாவட்டச் செயலாளர்கள் சந்திப்புக்குப் பிறகும் அவரைச் சந்தித்திருக்கிறார். மார்ச் 8-ம் தேதி விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது “முதன்முதலாக காமராஜர் முதல்வராகப் பதவியேற்றபோது தமிழ்நாட்டுக்குப் பல நலத்திட்டங்களைச் செய்தார். அதே காமராஜர் 1967-ம் ஆண்டு முதலமைச்சர் பதவியை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு டெல்லி அரசியலுக்குப் போனார். அப்போது தமிழ்நாட்டில் காணாமல்போன காங்கிரஸ் கட்சி இன்றுவரை தலையெடுக்கவில்லை. ரஜினி அவர்களே, நீங்கள் முதலவராகப் பதவி ஏற்றுக்கொள்ளுங்கள். வேறு ஒருவருக்குக் கொடுத்தால் பக்தவத்சலம் கதையாகி விடும்’’ என்று பேசியிருக்கிறார் தமிழருவி மணியன்.

இதற்கிடையே சூப்பர் ஸ்டாராக, தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருந்த தன்னை சமூகவலைதளங்களில் கேலிப்பொருளாக்குவது மிகவும் கவலையளிப்பதாகவும், 2017 டிசம்பர் 31, தனிக்கட்சி அறிவிப்புக்குப் பிறகுதான் இது ஆரம்பித்தது என்றும் நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார்.

சினிமாவில்
சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பிம்பம்

கடந்த 45 ஆண்டுகளாக சினிமாவில் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பிம்பம், புகழ், செல்வாக்கு அத்தனையையும் ஒரே தேர்தலில் இழக்க நேரிடுமோ என்கிற அச்சமும் அவருக்கு இருக்கிறது. தன்மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனத்தின் பின்னணியில் தி.மு.க இருப்பதாக நினைக்கிறார் ரஜினி. ஒவ்வொரு ஆண்டும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அன்று தவறாமல் வாழ்த்து சொல்வது ரஜினியின் வழக்கம். ஆனால், கடந்த மார்ச் 1-ம் தேதி ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை ரஜினி. இதன்மூலம் தன்னுடைய கோபத்தை ஸ்டாலினுக்கு உணர்த்தியிருக்கிறார். அதேசமயம் பேராசியர் அன்பழகன் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறார் ரஜினி. அரசியலில் தனது நேரடி எதிரி தி.மு.க-தான் என ரஜினி நினைப்பதால் அவரது அரசியல் தி.மு.க-வுக்கு எதிராகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

இன்னொரு புறம் ஆன்மிக அரசியல், சி.ஏ.ஏ எதிர்ப்பு போன்றவை ரஜினியை பா.ஜ.க ஆதரவாளராகத்தான் சித்திரித்திருக்கின்றன. ‘பா.ஜ.க-தான் ரஜினியைப் பின்னால் இருந்து இயக்குகிறது’ என்று பரவலாக நம்பவும்படுகிறது. தமிழகத்தில் பா.ஜ.க எதிர்ப்பு பலமாக இருப்பதால் ‘காவிச்சாயம்’ தன்மீது படாமல் இருக்கவேண்டும் என்றும் ரஜினி நினைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கப்போவது ஆளுங்கட்சிகளான அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளே. தி.மு.க-வுக்குச் செல்ல வேண்டிய இந்த வாக்குகளைச் சிதறடிப்பதற்கு ஏற்கெனவே தினகரன், சீமான், கமல் ஆகியோர் இருக்கும்போது ரஜினிக்கு இந்த எதிர்ப்பு வாக்குகள் கிடைக்குமா, கிடைத்தாலும் என்ன லாபம்?

கமல்ஹாசன்,
ரஜினி
கமல்ஹாசன், ரஜினி

பா.ஜ.க இப்போது அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறது. நிச்சயம் அ.தி.மு.க கூட்டணியில் ரஜினி வந்தால் வெல்வதற்கான வாய்ப்பில்லை. ரஜினி தலைமையில் பா.ஜ.க, பா.ம.க கூட்டணி அமைந்தாலும் சிறுபான்மையினர் வாக்குகள் விழாது, ஏற்கெனவே இருக்கும் பா.ஜ.க அதிருப்தியாளர்கள் வாக்கும் விழாது, ‘பாபா’ பிரச்னையால் பா.ம.க தொண்டர்கள் வாக்கும் இந்தக் கூட்டணிக்கு விழுமா என்று தெரியாது. விஜயகாந்தை முன்மாதிரியாகக் கொண்டு, ‘தி.மு.க-வும் வேண்டாம், அ.தி.மு.க-வும் வேண்டாம். புதியவருக்கு வாய்ப்பளிப்போம்’ என்பவர்களின் வாக்குகளை நம்பி மட்டுமே ரஜினியின் அரசியல் இருக்கும் என்றாலும் அதிலும் இரு சிக்கல்கள் இருக்கின்றன. விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது எந்தச் சாயமும் இல்லாமல் தனி ஆளாகவே வந்தார். ஆனால் ரஜினிமீது ஏற்கெனவே ‘காவிச்சாயம்’ இருக்கிறது.

மேலும் விஜயகாந்த், கமல் போன்றவர்களுக்கு திராவிடக் கட்சி எதிர்ப்பு வாக்குகள் கிடைத்தாலும் அது ஆட்சியமைக்கும் அளவுக்கு இருந்ததில்லை.

ரஜினி கட்சி கணிசமான தொகுதிகளை ஜெயித்தாலும் ஏதாவது ஒரு திராவிடக் கட்சிக்குத்தான் ஆதரவு தெரிவிக்க வேண்டியிருக்கும்.

இவற்றையெல்லாம் தாண்டி ஏதாவது மேஜிக் நிகழுமா, ரஜினி எதிர்பார்க்கும் ‘அதிசயம், அற்புதம்’ நடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எவ்ளோ வருஷம் பொறுத்துட்டோம், இன்னும் ஒரு வருஷம் பொறுக்க மாட்டோமா?