Published:Updated:

`ரஜினிக்கு ஏமாற்றம் தந்த விஷயம் என்ன?!' - தமிழருவி மணியன் உடைக்கும் ரகசியம்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

’ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி’கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடையே பேசிய ரஜினிகாந்த், "ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்தான்" என்று சஸ்பென்ஸ் வைத்தார். அந்த சஸ்பென்ஸுக்கான விடையை இங்கே நம்மிடம் பகிர்ந்துள்ளார் தமிழருவி மணியன்.

''ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்தான். அது என்ன விஷயம் என்பதை நேரம் வரும்போது தெரிவிக்கிறேன்'' - மன்ற நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் சொன்ன வார்த்தைகள் இவை.

'ரஜினிகாந்த்தையே ஏமாற்றத்துக்கு உள்ளாக்கிய விஷயம் என்னவாக இருக்கும்' என செய்தியாளர்கள் பரபர விவாதம் நடத்தி விடைதேடிக்கொண்டிருக்கும்போது, ''நம்முடைய கட்சிதான் ஆட்சி அமைக்கும். ஆனால், நான் முதல்வர் இல்லை!'' என்று மக்கள் மன்றக் கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசியதாக வந்த செய்திகளால் அதிர்ந்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

'ரஜினிகாந்த், முதல்வர் வேட்பாளர் இல்லையென்றால், வேறு யார் முதல்வர் வேட்பாளராக இருக்க முடியும்...' என்ற கேள்விக்கு, 'ரஜினிகாந்த் தனக்கு நெருக்கமான ஒருவரை முதல்வராக அமரவைப்பார்; குடும்ப உறுப்பினரை முன்னிலைப்படுத்துவார்' என்றெல்லாம் பல்வேறு யூகங்கள் றெக்கை கட்டுகின்றன.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், என்ன பேசினாலும் அரசியல் அரங்கில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவரும் சூழலில், தமிழக அரசியலில் அவரது பயணம்குறித்து சிறிது பின்னோக்கிப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

1996 சட்டமன்றத் தேர்தலின்போது, ''ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது'' என்று ரஜினிகாந்த் வெளிப்படையாகக் கொடுத்த வாய்ஸ்தான், தமிழக அரசியலுக்குள் முதன்முதலாக அவர் அடியெடுத்து வைத்த காலகட்டம். அந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் ஆதரவுக்குரல் கொடுத்த தி.மு.க - த.மா.கா கூட்டணி அமோக வெற்றியடைய, தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருமாறினார் ரஜினிகாந்த்.

அப்போதிருந்தே, 'ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்' என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பும் எகிறத் தொடங்கிவிட்டது. ஆனாலும் 'அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை' என்ற தெளிவோடு தன் திரைப் பயணத்தில் மட்டுமே தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த ரஜினிகாந்த், நேரடி அரசியலுக்குள் வருவதுகுறித்த கேள்விகளின்போது, உறுதியான பதில் எதையும் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் கடந்துபோனார்.

அவரது திரைப்படங்களிலும்கூட, 'வந்தாலும் வருவேன்' என்பது மாதிரியான உறுதியற்ற வசனங்களை மட்டுமே அவர் தொடர்ந்து பேசிவர, ஒருகட்டத்தில் ரசிகர்களே, 'அரசியல் ஆசை'யை ஓரங்கட்டி வைத்துவிட்டு, ரஜினிகாந்த்தை நடிகராக மட்டுமே ரசித்துப் பழக தங்களைப் பக்குவப்படுத்திக்கொண்டனர்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இந்நிலையில்தான், தமிழக அரசியலில் மாபெரும் தலைமைகளாக கோலோச்சிக்கொண்டிருந்த ஜெயலலிதா, கருணாநிதி என இருபெரும் அரசியல் தலைமைகள் அடுத்தடுத்து காலமாகிவிட, மறுபடியும் ரஜினிகாந்த்தை அரசியலுக்குள் வரச்சொல்லும் அழைப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.

சூழ்நிலையைப் புரிந்துகொண்ட ரஜினிகாந்த்தும் கடந்த 2017 டிசம்பரில், ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து, ''நான் அரசியலுக்கு வருவது உறுதி!'' என்று உரத்து அறிவிக்க... தமிழக அரசியல் களமே ரஜினிகாந்த் வரவை ஆவலோடு எதிர்பார்க்கத் தொடங்கிற்று. ஆனாலும், அறிவிப்பை வெளியிட்டுவிட்டு அடுத்தடுத்து பட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்திவந்தவர், 2 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை வரவழைத்துப் பேசியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில்தான், ''வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலில், நம் கட்சிதான் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். ஆனால், முதல்வர் நான் இல்லை'' என்று ரஜினிகாந்த் பஞ்ச் வைத்ததாகக் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் மக்கள் மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ''நான் முதல்வர் இல்லை என்று தலைவர் அறிவித்ததை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவும் இல்லை; ஏற்றுக்கொள்ளவுமில்லை. நாடறிந்த ஒரே தலைவர் ரஜினிகாந்த் மட்டும்தான். திரைத்துறையில், சூப்பர் ஸ்டாராக சின்னக் குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்திருப்பவர் அவர். அரசியலிலும் அவர்தான் எங்கள் கட்சியின் தலைவர்; ஆட்சியின் முதல்வர். அவரது இடத்தில் வேறொரு நபரை இருத்திப் பார்க்க நாங்கள் தயாரில்லை.

தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர், பொருளாளர் யார் யார்? எதிர்பார்ப்பும் பின்னணியும்

திடீரென இப்படியொரு முடிவை தலைவர் அறிவிப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவரது முடிவை எதிர்த்து நாங்கள் நேரடியாக எங்கள் மறுப்பைத் தெரிவித்ததை அவரும் எதிர்பார்த்திருக்கவில்லை'' என்கிறார்கள்.

ரஜினிகாந்த் ஏற்கெனவே அறிவித்திருந்த ஆன்மிக அரசியலுக்கே இன்னமும் தெளிவான விளக்கம் கிடைக்காத சூழலில், இப்போது புதிதாக 'கட்சி வேறு; ஆட்சி வேறு' என்ற அரசியல் பார்வையை அவர் முன்வைத்திருக்கிறார். 'ரஜினிகாந்த்தை முதல்வராக்கி, பா.ஜ.க பின்னிருந்து இயக்கும்' என்றுதான் ரஜினிக்கு எதிராகப் பேசுவோர் இதுவரை சொல்லிக்கொண்டிருந்தனர். அந்த யூகங்களுக்கெல்லாம் விடையாக, 'தனக்குப் பதவி ஆசை இல்லை' என்பதை ரஜினிகாந்த்தே தெளிவுபடுத்திவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில், அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பும் ரஜினிகாந்த், வேறு ஒருவரை முதல்வர் பதவியில் அமர்த்தினால் அது எந்தளவு சாத்தியப்படும் என்றக் கேள்வி எழுகிறது. எனவே, தனக்கு மிகவும் நெருக்கமான ஒருவரையோ அல்லது தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையோ அவர் பதவியில் அமர்த்தலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இதுகுறித்துப் பேசும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ''முதல்வராக இருப்பதும் இருக்காததும் ரஜினிகாந்த்தின் தனிப்பட்ட விருப்பம். ஏன் இப்படி ஒரு முடிவை அவர் எடுக்கிறார், என்ன விஷயத்தில் அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது என்பது குறித்தெல்லாம் அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி
மகளிர் தின ஆஃபர், மிஸ் பண்ணிடாதீங்க சிஸ்! #Meat&Eat #Women's Day Offer

என்னைப் பொறுத்தவரை, 'ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர்' என்று சொல்லி மக்களிடையே வாக்கு சேகரித்தால்தான் தேர்தலில் அவரால் வெற்றிபெற முடியும். ஏனெனில், ரஜினிகாந்தின் கட்சி என்பது அடிப்படைக் கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி அல்ல. இப்படியிருக்கும் சூழலில், ரஜினி என்ற ஒற்றை பிம்பத்தின் அடிப்படையில் மட்டுமே மக்களைச் சந்திக்கமுடியும். அந்த பிம்பத்தை முன்னிறுத்திதான் அரசியல் களத்தையே அமைக்க முடியும்.

அப்படியொரு களத்தை அமைத்து, தேர்தலில் வெற்றிபெற்று ரஜினிகாந்த், முதல்வர் பதவியில் ஒரு வாரம் வரையிலோ அல்லது ஒருநாள் மட்டுமோ பதவியில் அமர்ந்துவிட்டு பின்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்த இடத்துக்கு இன்னொருவரை அவரே நியமிக்கலாம். ஆனால், தேர்தலைப் பொறுத்தவரை, ரஜினிகாந்த்தை முன்னிறுத்தினால் மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள்.

ஏனெனில், 'ரஜினிகாந்துக்கு முதல்வர் பதவி என்ற கௌரவம் கிடைக்க வேண்டும்' என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். எனவே, மக்களின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு ரஜினிகாந்த் முதல்வராக வேண்டும். அதன்பின்னர், அவர் வேறு யாரை வேண்டுமானாலும் பதவியில் அமர்த்தி, அவரை செயல்பட வைக்கலாம்... அது அவர் விருப்பம்.

மற்றபடி, ரஜினிகாந்த்தின் குடும்ப உறுப்பினர்களில் யாரையாவது ஒருவரை அவர் முதல்வராக்குவார் என்ற யூகத்துக்கெல்லாம் இன்னொரு யூகமாக பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது'' என்கிறார் தெளிவாக.

ரஜினிகாந்துடன் ஜீவா
ரஜினிகாந்துடன் ஜீவா

ரவீந்திரன் துரைசாமியின் இந்தக் கருத்தையே ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரும் நடிகருமான ஜீவாவும் பிரதிபலிக்கிறார். அவர் பேசும்போது, ''ரஜினிகாந்த் முதல்வராக வரவேண்டும் என்பது ரசிகர்களின் 30 வருட கனவு. மக்கள் மனத்தை வெல்வதற்கு மட்டுமல்லாமல், கட்டுக்கோப்பாக நிர்வாகத்தை நடத்துவதற்கும்கூட, ரஜினிகாந்த் போன்ற கவர்ச்சிமிக்க தலைவரால் மட்டும்தான் முடியும்.

C.A.A நெருப்பு: இந்தியா தன்னுடைய நட்பு நாடுகளை இழந்து வருகிறதா?

காமராஜரும் பதவி ஆசை இல்லாதவர்தான். அவரோடு உடனிருந்தவர்கள் வற்புறுத்திதான் அவரைப் பதவியில் அமரவைத்தார்கள். அப்படிப்பட்டவரால்தான் தமிழகத்தில் பொற்கால ஆட்சியைத் தரமுடிந்தது.

அதேபோல், தலைவர் ரஜினிகாந்த்துக்கு இன்றைக்குப் பதவி ஆசை இல்லாமல் இருக்கலாம். ஆனால், கோடிக்கணக்கிலான ரசிகர்களில் ஒருவனாக எனக்கும் அவரை முதல்வராகப் பார்க்கத்தான் ஆசை. எனவே, ரசிகர்களாகிய எங்களின் வற்புறுத்தல்களுக்கு இணங்கி ரஜினிகாந்தும், முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவித்து தேர்தலைச் சந்திக்க வேண்டும். தேர்தலில் வென்று, தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சியைத் தரவேண்டும்' என்பதுதான் என் ஆசையும்கூட'' என்றார்.

'முதல்வராகும் எண்ணம் இல்லை', 'எனக்கு ஏமாற்றம்தான்' என்ற ரஜினிகாந்த்தின் பேச்சுகள் குறித்து அவரது நெருங்கிய நண்பரும் 'காந்திய மக்கள் இயக்க'த்தின் தலைவருமான தமிழருவி மணியனிடம் பேசினோம்... ''ரஜினிகாந்த், ஒருநாளும் தன் குடும்ப உறுப்பினர்களை அரசியலில் முன்னிலைப்படுத்த மாட்டார்; குடும்ப உறுப்பினர்களிடம் பொறுப்பைத் தரவும் மாட்டார். இதை நூற்றுக்கு ஆயிரம் மடங்கு நீங்கள் தெளிவாக்கிக்கொள்ளலாம்.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்
மிஸ்டர் கழுகு: ரஜினி... சிவாஜியா, எம்.ஜி.ஆரா?

குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என தமிழ்நாட்டில் இன்றைக்கு என்னென்ன அநியாயங்கள் நடந்துவருகின்றனவோ அதில் ஒன்றுகூட நடக்கக்கூடாது என்பதுதான் ரஜினிகாந்தின் முதன்மையான நோக்கமே... முழுமையான அரசியல் மாற்றத்தை முன்னிறுத்துகிறவர் ஒருநாளும் வாரிசு அரசியலையோ குடும்ப அரசியலையோ கொண்டுவர மாட்டார்.

கட்சி வேறு; ஆட்சி வேறு என்று அவர் சிந்திப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாததுதான் ரஜினிகாந்த்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஏமாற்றம். அதைத்தான் செய்தியாளர்களிடையேயும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்!'' என்றார் தெளிவாக.

அடுத்த கட்டுரைக்கு