Published:Updated:

ரஜினி சொல்லி 17 வருஷம் ஆச்சு... நதிகள் இணைப்பு 1 கோடி என்னாச்சு? - பாகம் 2

காவிரிக்காக ரஜினி உண்ணாவிரதம் இருந்த போது...
News
காவிரிக்காக ரஜினி உண்ணாவிரதம் இருந்த போது... ( Photo: Vikatan )

''நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் அளிப்பேன்'' என ரஜினி அறிவித்த தினம் இன்று. 2002 அக்டோபர் 13-ம் தேதி ரஜினி ஏன் அப்படி சொன்னார். இந்த 17 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை

அடுத்த நாள் அக்டோபர் 13-ம் தேதி. சென்னை சேப்பாக்கத்தில் ரஜினியின் உண்ணாவிரதம் தொடங்கியது. தேசியத்துக்குக் காந்தி, தமிழுக்குத் திருவள்ளுவர், ஆன்மிகத்துக்குப் பாபா எனப் பலரது படங்கள் மேடையின் பின்னணியில் வைக்கப்பட்டிருந்தன. அதன் கீழே `உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு' என எழுதப்பட்டிருந்தது.

ரஜினி உண்ணாவிரதத்தில் ப.சிதம்பரம்...
ரஜினி உண்ணாவிரதத்தில் ப.சிதம்பரம்...
Photo: Vikatan

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது மூப்பனாரின் 'தமிழ் மாநில காங்கிரஸ்' கட்சியிலிருந்து பிரிந்து 'த.மா.கா ஜனநாயகப் பேரவை' எனத் தனிக்கட்சி நடத்திக்கொண்டிருந்த ப.சிதம்பரம்தான் ரஜினியின் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார். உண்ணாவிரதப் பந்தலைச் சுற்றித் திரண்டிருந்த ரஜினி ரசிகர்கள், பாரதிராஜாவுக்கு எதிராகக் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``ரஜினியின் போராட்டத்தை நடிகர்கள் புறக்கணிக்க வேண்டும்'' என ராமதாஸ் சொன்னபோதும் அதை நடிகர்கள் உதாசீனப்படுத்திவிட்டு உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். இயக்குநர்கள் பாலசந்தர், மகேந்திரன், பஞ்சு அருணாசலம், பாடலாசிரியர்கள் வாலி, வைரமுத்து, நடிகர்கள் கமல், சரத்குமார், சந்திரசேகர், தியாகு, நெப்போலியன், மனோரமா, மீனா, லிவிங்ஸ்டன், டி.ராஜேந்தர், சிலம்பரசன், லதா, பாண்டியராஜன், பிரசாந்த், ஸ்ரீகாந்த், அர்ஜுன், கார்த்திக், ஜெயராம், ஜெயசித்ரா, விஜயகுமார், மஞ்சுளா, பிரபு, சிவக்குமார், பிரகாஷ் ராஜ், லாரன்ஸ், ஜெமினி கணேசன், செந்தில், பாக்யராஜ், சூர்யா, ரவிச்சந்திரன், அப்பாஸ், முரளி, விஜய், கவுண்டமணி, பார்த்திபன், மலேசியா வாசுதேவன், ஆனந்தராஜ், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பி.ஜே.பி.யை சேர்ந்த மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் எனப் பலரும் திரண்டு வந்து ஆதரவு அளித்தனர்.

ரஜினி உண்ணாவிரதத்தில் சரத்குமார்...
ரஜினி உண்ணாவிரதத்தில் சரத்குமார்...
Photo: Vikatan

ரஜினி உண்ணாவிரதத்தில் பங்கேற்ற கமல், ``உண்ணாவிரத மேடையைப் பார்க்கும் போது ரஜினி வேறு பாதை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அது அரசியலா என்பது தெரியவில்லை. நெய்வேலியில் பாரதிராஜா பேசியதில் தவறில்லை.'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழரசம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்த ரஜினி, ``கர்நாடக அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் கைகளில்தான் இந்த உண்ணாவிரதத்தின் வெற்றி இருக்கிறது. என்ன செய்வார்களோ தெரியாது, தமிழகத்துக்குக் காவிரியிலிருந்து தண்ணீரைக் கர்நாடகா திறந்துவிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்தும் பொறுப்பை மத்திய அரசு செய்யவேண்டும்'' என்றார்.

பழரசம் அருந்தி உண்ணாவிரத்தை முடிக்கும் ரஜினி
பழரசம் அருந்தி உண்ணாவிரத்தை முடிக்கும் ரஜினி
Photo: Vikatan

உண்ணாவிரதத்துக்குப் பிறகு கவர்னர் மாளிகை சென்றார் ரஜினி. அப்போது தமிழக கவர்னராக இருந்த ராமமோகன் ராவ் ராஜ்பவனில் இல்லை. அதனால் அவருடைய செயலாளர் ஷீலா ப்ரியாவிடம் தமிழகத்திற்குக் காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்துவிட வேண்டும் என மனு அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி ``கங்கை - காவிரி இணைப்பை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். அதற்காக நான் ஒரு கோடி ரூபாய் தர ரெடியாக இருக்கிறேன்'' என்றார்.

உண்ணாவிரத பந்தலில்...
உண்ணாவிரத பந்தலில்...
Vikatan

''நதிகள் இணைப்புக்கு முதல் ஆளாக ஒரு கோடி ரூபாய் நானே தருகிறேன். தேவைப்படும் மொத்த பணத்துக்கும் பொறுப்பை மக்களிடமே விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பணம் இல்லையென்று இனியும் காலம் கடத்தாதீர்கள்.'' என அறிக்கையும் விட்டார் ரஜினி.

ரஜினியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பிறகும் எதிர்வினைகள் வர ஆரம்பித்தன. ``தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரைச் சரிக்கட்டவே ரஜினி உண்ணாவிரதம் இருந்தார். நதிகள் இணைப்பு என்பது 300 ஆண்டுகள் ஆனாலும் நடக்காத காரியம். அந்த தைரியத்தில்தான் ஒரு கோடி ரூபாய் தருவதாக ரஜினி சொல்லியிருக்கிறார்'' என்றார் ராமதாஸ்.

ரஜினி உண்ணாவிரதம்...
ரஜினி உண்ணாவிரதம்...
Photo: Vikatan

கருணாநிதியோ ``நதிகளை இணைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக ரஜினி அறிவித்திருக்கிறார். இது மிகவும் சிறிய தொகையாக இருந்தாலும், அவரது அறிவிப்பு மிகப் பெரியது'' என்றார்.

ரஜினியுடன் பாரதிராஜா...
ரஜினியுடன் பாரதிராஜா...
Photo: Vikatan

பாரதிராஜாவோ, ``ரஜினி உண்ணாவிரதப் போராட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்ட நேரங்களில் என் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது என்னை அ.தி.மு.க.காரன் என்றோ காங்கிரஸ்காரன் என்றோ சொல்லவில்லை.

கலைஞருக்குப் பாராட்டு விழா நடந்தபோது எனது ஆயுளின் பாதியை அவருக்குத் தருவதாக வாழ்த்தினேன். அப்போதும்கூட என்னை தி.மு.க.காரன் என யாரும் சொல்லவில்லை. ஆனால் நெய்வேலிப் போராட்டத்தை நடத்தியபோது மட்டும் எனக்கு வர்ணம் பூசுகிறார்கள்.'' என்றார்.

உண்ணாவிரதத்தில் ரஜினியுடன் விஜயகாந்த்...
உண்ணாவிரதத்தில் ரஜினியுடன் விஜயகாந்த்...
Photo: Vikatan

ரஜினியின் அறிவிப்புக்கு ஒரு வாரம் கழித்து கங்கை-காவிரி இணைப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் 2 கோடி ரூபாய் தரத் தயார்'' எனச் சொன்னார் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம். ரஜினியின் வாக்குறுதியைப் போலவே அதுவும் கிடப்பில்தான் இருக்கிறது.

''நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தரத் தயார்'' என ரஜினி அறிவித்து இன்றோடு 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்படாததால் அந்த ஒரு கோடி ரூபாயை ரஜினி இதுவரை அளிக்கவில்லை. ஆனால், நதிகள் இணைப்பு பற்றி தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். ஒரு கோடி ரூபாய் அறிவிப்புக்குப் பிறகு 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ரஜினியின் வாய்ஸ் யாருக்கு என்கிற கேள்வி எழுந்த போது ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நதிநீர் இணைப்பு பற்றியும் கருத்துகளைச் சொன்னார்.

அந்த அறிக்கையின் ரஜினி சொன்ன விஷயம் இதுதான்.

ரஜினி
ரஜினி
Photo: Vikatan

''பல காரணங்களுக்காக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை. ஆனாலும், நான் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும். இப்பொழுது நம் நாட்டிலேயே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் பிரச்னை தண்ணீர்ப் பிரச்னை. ஏழைகளிலிருந்து, பணக்காரர்களிலிருந்து, மிருகங்கள், பறவைகளிலிருந்து இப்பொழுது அனைவரும் தவித்துக் கொண்டிருப்பது தண்ணீருக்காக. நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால்தான் இந்த கடுமையான பிரச்னை தீரும். நம் நாட்டிலுள்ள தண்ணீர்ப் பஞ்சத்தை நீக்க இந்த ஒரே வழிதான். குறிப்பாக, நம் நாட்டு நதிகளை இணைக்காவிட்டால் ரொம்ப பாதிக்கப்படப் போவது தமிழ்நாடுதான். ஏனென்றால், நம்மைச்சுற்றி உள்ள மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலெல்லாம் பல ஜீவநதிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தண்ணீர் சுமந்து வரும் எந்த ஜீவநதியும் இல்லை.

நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினால் இதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இது அனைவரும் அறிந்த விஷயமே. மத்தியில் அமையும் ஆட்சிதான் நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்கப் போகிறதோ எனக்குத் தெரியாது. ஆனால், இந்த தேர்தலில் மத்தியில் அமரப் போவது வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ., அரசுதான். இது உறுதி.

வாஜ்பாய்
வாஜ்பாய்

என்னைப் பொறுத்தவரையில், இந்திய நாட்டின் முக்கியப் பிரச்னையான தண்ணீர் பிரச்னைக்கு யார் தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு. நதிகளை இணைக்கும் திட்டத்தில் மற்றவர்கள் ஒரு உறுதியான முடிவுக்கு வராத இந்த நேரத்தில் வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ., அரசின் தேர்தல் அறிக்கையில் 'தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்காக இந்திய நாட்டின் அனைத்து நதிகளையும் கண்டிப்பாக இணைப்போம்' என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள். அத்வானி அவர்களே 'அதைச் செயல்படுத்தியே தீருவோம்' என்று என்னிடம் உறுதி அளித்திருக்கிறார்கள்.

வாஜ்பாய் அரசு அதைச் செய்யும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆக, இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி., கூட்டணிக்குதான் என் ஓட்டு.

வாஜ்பாய், அத்வானி, ரஜினி
வாஜ்பாய், அத்வானி, ரஜினி
Photo: Vikatan

இது எந்த கூட்டணிக்கும் என் ஆதரவு அல்ல. இது என் ஓட்டு மட்டும்தான். ஆனால், சிந்தியுங்கள். தமிழ்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் வாழும் அனைத்து மக்களே குறிப்பாகத் தாய்மார்களே, இளைஞர்களே, மாணவ, மாணவிகளே, படித்தவர்களே நீங்கள் ஓட்டுச் சாவடிக்கு ஓட்டுப் போடப் போகும்போது நம் கட்சி ஆளு ஜெயிக்கணும்ன்னு ஓட்டுப் போட போறீங்களா, இல்லை நம்ம ஜாதி ஆளு ஜெயிக்கணும்ன்னு ஓட்டுப் போட போறீங்களா, இல்லை தண்ணி வேணும்ன்னு ஓட்டுப்போட போறீங்களா? முடிவு பண்ணுங்க. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சிந்தியுங்கள், செயல்படுங்கள்'' என அந்த அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினி.

வாக்களிக்கும் ரஜினி
வாக்களிக்கும் ரஜினி
Photo: Vikatan

ரஜினி உறுதி அளித்தபடி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாய் அரசு அமையவில்லை. மன்மோகன் சிங் ஆட்சிதான் அமைந்தது. அதன்பின் நடைபெற்ற 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வென்று மன்மோகன் சிங் இரண்டாவது முறையாகப் பிரதமர் ஆனார். அந்த பத்தாண்டுக் காலத்தில் நதிகள் இணைப்பும் வரவில்லை. ஒரு கோடி ரூபாயையும் ரஜினி தரவில்லை.

ரஜினியின் கையில் அடையாள மை..
ரஜினியின் கையில் அடையாள மை..
Photo: Vikatan

அதன்பிறகு 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தார். அவர் காலத்திலும் நதிகள் இணைப்பு சாத்தியமாகவில்லை. 2017-ம் ஆண்டு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு ரஜினியைச் சந்தித்தபோது ''நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தரத் தயார்'' என அவரிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி.

ரஜினியுடன் அய்யாக்கண்னு
ரஜினியுடன் அய்யாக்கண்னு
Photo: Vikatan

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நதிகள் இணைப்பு பற்றிச் சொல்லியிருந்தார்கள். அதனை ரஜினி வரவேற்றார். ''பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்குத் தனி ஆணையம் எனக் கூறப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன். நான் நீண்ட நாட்களாக நதிகளை இணைப்பது குறித்துச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். நதிகள் இணைந்தால் நாட்டின் வறுமை ஒழிந்து விடும். கோடிக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்கும். பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி அமைந்தால் உடனடியாக அவர்கள் அதைச் செய்ய வேண்டும்'' எனச் சொல்லியிருந்தார் ரஜினி.

“கோதாவரியைக் காவிரியுடன் இணைத்து தமிழ்நாட்டின் தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்கப்போகிறோம்” எனத் தொடர்ந்து சொல்லிவருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. இந்த கோதாவரி-காவிரி இணைப்பு பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது. ஆனாலும்கூட நதிகள் இணைப்புக்கான முதல் செங்கல்லைக்கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.

மோடியுடன் ரஜினி
மோடியுடன் ரஜினி

எல்லாம் சரி ரஜினி தருவதாகச் சொன்ன ஒரு கோடி ரூபாய் என்ன ஆனது?

''ரஜினி கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி ரூபாயை உடனே கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம்'' என விவசாயிகள் சிலர் 2016-ம் ஆண்டு திடீரென அறிவித்தனர். இதற்கு ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டிடம் இருந்து பதில் வந்தது. ''நதிகள் இணைப்புக்காக ரஜினி தருவதாகச் சொன்ன ஒரு கோடி ரூபாயை அப்போதே தேசிய வங்கியில் டெபாசிட் செய்து விட்டார். மத்திய அரசு நதிகள் இணைப்பை அறிவித்த உடனை அந்தத் தொகை முழுவதும் அப்படியே நதிகள் இணைப்பு திட்டத்துக்குப் போகுமாறு ரஜினி ஏற்பாடு செய்திருக்கிறார்'' எனச் சொன்னார். ஆனால் அப்படி டெபாசிட் செய்ததற்கான ஆதாரமாக இதுவரை எதையும் ரஜினி தரப்பு வெளியிடவில்லை. ஆக, அந்த ஒரு கோடி ரூபாய் டெபாசிட் ஆகியிருக்கிறதா, எங்கிருக்கிறது என்பது ஒரே ஒருத்தருக்குத்தான் தெரியும்.

அவர் பெயர் ரஜினிகாந்த்.