Published:Updated:

“ஒரே மொழி வேணும்.. ஆனா..” ரஜினி சொன்னது சரியா?

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்பதற்கு வந்த எதிர்வினைகளிலிருந்து, சமூக வலைதளங்கள் நகர்ந்துகொண்டிக்கும் சூழலில், நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்து, மீண்டும் விவாதத்திற்கு வழிவகுத்திருக்கிறது.

Rajini
Rajini

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14-ம் தேதி, இந்தி மொழி அறியப்பட்ட தினமாக நினைவுகூரப்படுகிறது. அதுபோல இவ்வருட நினைவுகூரலின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி தினத்தை நினைவுகூர்ந்ததுடன், "நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். அதுதான் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்" என்று குறிப்பிட்டார். இது, கடந்த நான்கு நாள்களாக மிகப்பெரிய விவாதப்பொருளாகியிருக்கிறது.

Amit shah
Amit shah

குறிப்பாக, தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இத்தகைய சூழலில், இன்று நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, 'இந்தி மொழி' குறித்துக் கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில், "எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருப்பது அந்த நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது; துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அதைக் கொண்டுவர முடியாது. இந்தியைத் திணித்தால், தென் இந்தியா மட்டுமல்ல... வட இந்தியாவிலேயே பல மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளாது" என்றார்.

Rajini
Rajini

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்பதற்கு வந்த எதிர்வினைகளிலிருந்து சமூக வலைதளங்கள் நகர்ந்துகொண்டிருக்கும் சூழலில், நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்து, மீண்டும் விவாதத்திற்கு வழிவகுத்திருக்கிறது. மொழித் திணிப்பை ரஜினிகாந்த் ஆதரிக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளும் அதே சமயத்தில், 'நாடு முழுக்க பொதுமொழி இருக்க வேண்டும், அதுவே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்' என அமித் ஷா-வின் கருத்தையே ரஜினி சொல்லியிருப்பதுதான் விவாதப்பொருளாகியிருக்கிறது.

ஒரே மொழி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகுவிடம் பேசினோம்.

Thiyagu
Thiyagu

``ஒரு மொழி மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமென்றால், அந்த மொழி இந்தி மொழியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? அது, தமிழாகவும் இருக்கட்டுமே. சரி, தமிழ் வேண்டாம். ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். நாட்டின் ஒரே மொழி ஆங்கிலம் என்பதாக இருக்கட்டுமே. அதை, அயல்மொழி எனச் சொல்வீர்கள் எனில், எங்களுக்கு இந்தியும் அயல்மொழிதானே!

அரசியலமைப்புச் சட்டத்தின் மொழி அட்டவணையில், ஆங்கிலம் இருக்கிறது. அம்மொழி, இன்று நாடு முழுமைக்கும் பரவலாகப் பேசப்படக்கூடியதாகவும் இருக்கிறது. அப்படியிருக்கிற பட்சத்தில், ஒரே மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்கலாமே? நாட்டின் வளர்ச்சிக்கு அதுவும் வழிகோலுகிற ஒரு மொழிதானே. அது, ஏன் இந்தியாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கேள்வி?

Amit Shah
Amit Shah

தமிழ், தமிழ்நாட்டுக்குத்தான் என வாதம் செய்வார்களானால்... இந்தி, 'இந்தி பேசுபவர்களுக்கு மட்டும்' என நாம் ஏன் சொல்லக்கூடாது? இந்தியைப் பொதுமொழியாக வலியுறுத்துகிற அமித் ஷா-வின் சொந்த மாநிலத்தைச் சார்ந்த குஜராத்திகளே இந்தியைப் பொதுமொழியாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

அமித் ஷா இந்தியைத் தூக்கிப் பிடிப்பது ஏன்? - அரசியல் பின்புலக் கணக்குகள்!

நீட் தீர்மானம் கொண்டுவந்த புதிதில், அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த பிரதமர் மோடி, நீட்டை எதிர்த்தார். காரணம், அப்போதைய சூழலில் கேள்வித்தாள் இந்தியில் மட்டுமே இருக்கும் என்கிற சூழல் இருந்தது. தன் மாநில மக்களான குஜராத்திகளுக்குக் கடினமாக இருக்குமென்று அவர் எதிர்த்தார். குஜராத்தி மொழியில் கேள்வித்தாள் இருக்குமென அவர் வலியுறுத்தினார். மோடியின் மொழிப் பிரதிநிதித்துவத்தை எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?

Modi
Modi

அந்தந்த மாநிலங்களின் மொழியை அடிப்படையாக வைத்து, அவரவர் இயங்குவதுதான் இந்நாட்டின் இயல்பு. அதுதான் unity. இவர்கள், நாட்டு மக்களிடையே unitiy'யைக் கொண்டுவருவதற்குப் பதில், uniformityயைக் கொண்டுவருகிறார்கள். மக்களுக்கு இந்தத் தெளிவு புரியப்பட வேண்டும். ரஜினி இதைச் சொல்கிறார் எனில், அவரின் சிந்தனைப்போக்கே பா.ஜ.க கொள்கைகளுடன் பெரிதும் சார்ந்துபோகும்படிதான் இருக்கிறது. அதை வெளிப்படையாகச் சொன்னால், தமிழக மக்களிடம் தனக்கு இருக்கும் ஆதரவு போய்விடுமே என்கிற அச்சத்தினால் குழப்புகிறார்" என்றார் தியாகு.

இதுகுறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "ரஜினிகாந்த் சொன்னதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதை இன்னும் அழுத்தமாகவே ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். மொழித் திணிப்பை வட மாநிலங்கள் உட்பட எந்த மாநிலமும் ஏற்காது என்பதுதான் எங்களுடைய வாதமும்.

Narayanan
Narayanan

ஒரே மொழியாக இந்தியை முன்மொழிவதற்குக் காரணம், அரசியல் நிர்ணய சபையிலேயே இந்தியை நம் அலுவல் மொழியாக மாநிலங்கள் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில்தான். ஆர்.எஸ்.எஸ் தொடங்கி, ஜனசங்-கிலிருந்து இப்போது பாரதிய ஜனதாவரை நாங்கள் ஒருபோதும் மாநில மொழிகளுக்கு எதிரானவர்கள் இல்லை.

ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை தாய்மொழி வழிக் கல்விதான் அவசியம் என வலியுறுத்தும் ஒரே கட்சி எங்களுடையதுதான். அப்படியொரு கொள்கையைக் கொண்ட நாங்கள், எப்படி ஒரு மொழியை மற்ற மாநிலங்களில் திணிக்க முடியும்.

Amit Shah, Rajini
Amit Shah, Rajini

அமித் ஷா கூறியதாக இருக்கட்டும் அல்லது தற்போது ரஜினிகாந்த் கூறியதாக இருக்கட்டும். அதை, தங்களுக்குத் தேவையானதுபோல் திரித்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். குறிப்பாக தி.மு.க, தமிழக மக்களின் மொழி உணர்வைத் தூண்டி அவர்களைப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது" என்றார்.

ரஜினியின் கருத்து பற்றி மற்றவர்கள் ஆயிரம் விளக்கம் சொல்லலாம். ஆனால், அவர் சொல்வதெல்லாம் வெறும் வாயை மெல்லுவதற்காகத் தரும் கருத்துகள்தான் என்பதே அரசியல் விமர்சகர்களின் அழுத்தமான வாதமாக இருக்கிறது. அவர், எப்போது தன் கருத்தை தெளிவாகச்சொல்வார் என்பதுதான் தமிழக மக்கள் அனைவரின் ஈடேறாத எதிர்பார்ப்பு.

இந்த நிலையில், "இந்தி மொழி குறித்து நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நானே இந்தி மொழி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவன். ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் எனக் கூறவில்லை. இரண்டாவது ஒரு மொழியைக் கற்க வேண்டும் என்றால், இந்தியைக் கற்கலாம் என்றுதான் சொன்னேன்" என உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.

`தாய் மொழிக்குப் பிறகுதான் இந்தி!' - அமித் ஷா விளக்கம்