Published:Updated:

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு வாய்ப்பா? - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையும் பின்னணியும்!

எழுவர் விடுதலை | ஸ்டாலின்
News
எழுவர் விடுதலை | ஸ்டாலின்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ராஜீவ் காந்தி, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக முதல்வர் கடந்த செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசுத் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆலோசனையில் ஈடுபட்டார் ஸ்டாலின். ஏழு பேரையும் விடுதலை செய்ய சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

எழுவர் விடுதலை
எழுவர் விடுதலை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரைப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பிவருகின்றனர். இந்தநிலையில், தி.மு.க தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் இந்தவேளையில் அந்தக் கோரிக்கை மீண்டும் புத்துயிர் பெற்றது. முன்னதாக, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த 2018, செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளன். கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி, அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, `தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாள்களில் முடிவெடுப்பார்’ என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், விடுதலை குறித்து தெளிவுபடுத்தக் கூறி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

இதையடுத்து, ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரகால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆளுநரைச் சந்தித்தார். விரைவில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்றும், ஏழு பேரும் விடுதலை செய்யப்பட நூறு சதவிகித வாய்ப்பிருப்பதாகவும் ஆளும் தரப்பில் சொல்லப்பட்டது. தவிர, ``அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஏழு பேரையும் விடுதலை செய்தே ஆக வேண்டும். உச்ச நீதிமன்றமும் அதனால்தான் அழுத்தம் கொடுக்கிறது'' என வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் சிலர் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், ஆளுநர் தரப்பில், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தற்போது மீண்டும், எழுவர் விடுதலை தொடர்பாக புதிய அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான இராஜீவ் காந்தியிடம் பேசினோம்.

``எழுவர் விடுதலை, 69 சதவிகித இட ஒதுக்கீடு, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை உள்ளிட்ட எங்களின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்து, முடிவெடுப்பதற்காக சட்ட அமைச்சர், அட்வகேட் ஜெனரலுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் பேரறிவாளனின் வழக்கைப் பொறுத்து உறுதியான முடிவு எடுக்கப்படும். ஏழு பேரையும் விடுதலை செய்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் நல்ல செய்தி வரும்'' என்கிறார் அவர்.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

எழுவர் விடுதலை தற்போது சாத்தியமா என வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம்.

``என்னைப் பொறுத்த அளவில் இந்தப் புதிய அரசு விடுதலை செய்யும் என்பதில் சந்தேகமே இருக்கிறது. காரணம், கவர்னருடைய கையெழுத்து இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும் அல்லது மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும். ஆனால், அதில் கவர்னர் கையெழுத்து போட மாட்டார். கடந்த ஆட்சியில் அனுப்பப்பட்ட தீர்மானத்தையே, அவர் ஜனாதிபதிக்குத்தான் அதிகாரம் என கைமாற்றிவிட்டார். அதனால், மீண்டும் கேபினெட் கூடி ஒரு முடிவெடுப்பார்கள் என எனக்கு நம்பிக்கையில்லை. சிக்கல் வரும் என ஒதுங்கிக்கொள்ளவே வாய்ப்பிருக்கிறது. அதேவேளையில், 'கவர்னருடைய கையெழுத்து தேவையில்லை, கேபினெட்டின் முடிவே இறுதியானது' என மாரூராம் வழக்கில் முடிவெடுக்கப்பட்டதுபோல, இதிலும் செய்யலாம்.

அந்த ஆலோசனையை அட்வகேட் ஜெனரல்தான் கொடுக்க வேண்டும். தற்போது உள்ள அட்வகேட் ஜெனரல் கொடுப்பாரா என்பதும் சந்தேகம்தான். அதேபோல, விடுதலை செய்யும் முடிவு என்பது மத்திய அரசோடு மோதும் ஒரு சூழலைத்தான் உருவாக்கும். அதற்கு தி.மு.க அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். அதனால், எழுவர் விடுதலையைப் பொறுத்தமட்டில், முந்தைய அ.தி.மு.க அரசு பின்பற்றிய வழிமுறையைத்தான் தி.மு.க அரசும் பின்பற்றும். துணிந்து, விடுதலை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே தெரிகிறது'' என்கிறார் அவர்.

வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் புகழேந்தி

முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமனிடம் பேசினோம்.

``ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் விடுதலை சாத்தியமாகியிருக்கும். காரணம், எடப்பாடி பழனிசாமி சரியான வழிமுறையைப் பின்பற்றினார். ஜெயலலிதா செய்யாத விஷயத்தை அவர் செய்தார். 2014-ல் ஜெயலலிதா, அரசியலமைப்புச் சட்டத்தின் (இறையாண்மை அதிகாரம்) கீழ் விடுதலை செய்யாமல், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் விடுதலை செய்தார். காரணம், ஜெயலலிதாவுக்கு அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு தமிழகத்தில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தது. அதேபோல, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் உடனடியாகத் தடை வாங்கியது. பின்னர் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, பா.ஜ.க இந்த வழக்கை மூர்க்கத்தனமாகக் கையாண்டது. நீதிமன்றமும் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்ய முடியாது எனத் தீர்ப்பளிக்கிறது. ஆனால், 161-ன்படி விடுதலை செய்தால் ஒப்புதல் தேவையில்லை எனவும் வழிகாட்டியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா நினைத்திருந்தால் அப்போதே விடுதலை செய்திருக்கலாம்.

தன்னுடைய சொத்துக்குவிப்பு வழக்குக்கு நாரிமன் போன்ற மிகப்பெரிய வழக்கறிஞர்களைவைத்து வாதாடிய ஜெயலலிதாவுக்கு அது தெரியாது என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன். அடுத்ததாக, 2018-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கேபினெட் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், தமிழக மக்களின் உணர்வுகளை மிகவும் துச்சமாகப் பார்த்த ஆளுநர், அந்தத் தீர்மானத்தின்மீது இரண்டு ஆண்டுகள், நான்கு மாதங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. பிறகு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி கால அவகாசம் கொடுத்த பிறகு, ஜனாதிபதிக்குத்தான் அதிகாரம் என நிராகரித்தார். ஆனால், குடியரசுத் தலைவருக்கான அதிகாரம் என்பதும் மத்திய அரசுக்கான அதிகாரம்தான். ஆனால், உச்ச நீதிமன்றமே சொன்ன பிறகும் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது. எந்தச் சட்டத்தையும் மதிக்க மாட்டோம் என்கிற போக்கில் நடந்துகொள்கிறது. சென்ற ஆண்டு, குருநானக்கின் 550-வது பிறந்த நாளுக்காக, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பீம்சிங் என்ற காங்கிரஸ்காரரைக் கொலை செய்த, காலிஸ்தான் தீவிரவாதிகளை ஆயுள் தண்டனையிலிருந்து விடுதலை செய்தனர்.

 அரி பரந்தாமன்
அரி பரந்தாமன்

மாகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த கோபால் கோட்சே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா ஆகியோர் 16 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை அனுபவித்தது போதுமென அக்டோபர் 13, 1964-ல் விடுவிக்கப்பட்டனர். மகாத்மா காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை 16 ஆண்டுகள், ராஜீவ் காந்தி வழக்கில் 28 ஆண்டுகளா..? மத்திய அரசு தமிழர்கள் என்பதற்காகவே பாராமுகம் காட்டுகிறது. காரணம், பா.ஜ.க-வின் அரசியல் இங்கு செல்லுபடியாகவில்லை என்கிற கோபம் அவர்களுக்கு இருக்கிறது. ஏற்கெனவே இருந்த பழனிசாமி அரசாங்கம், மத்திய அரசை நம்பி இருந்ததால் அவரால் எந்த நடவடிக்கையையும் துணிச்சலாக எடுக்க முடியவில்லை. தி.மு.க சட்டரீதியாகவோ இல்லை காவிரி, ஜல்லிக்கட்டு போன்ற மக்கள் பிரச்னையாக மாற்றினாலோ மத்திய அரசு இறங்கி வந்துவிடும். அடுத்தகட்டத்துக்குப் போக பழனிசாமி தயாராக இல்லை. ஆனால் தற்போதைய அரசாங்கம் போகும் என்றே நான் நம்புகிறேன்'' என்கிறார் அவர்.