Published:Updated:

`ராஜீவ், தன் அதிகாரத்தால் யாரையும் மிரட்டவில்லை!’ - மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்த சோனியா

சத்யா கோபாலன்

காங்கிரஸின் இடைக்கால தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் சோனியா காந்தி.

Sonia Gandhi
Sonia Gandhi ( Twitter/@INCIndia )

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாள் கடந்த 20-ம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களால் அனுசரிக்கப்பட்டது. அவரின் பிறந்த நாள், சமய நல்லிணக்க நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Rajiv 75 Function
Rajiv 75 Function
Twitter/@INCIndia

ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி நேற்று டெல்லியில் உள்ள கே.டி ஜாதவ் மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸின் இடைக்காலத் தலைவருமான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்துப் பேசியுள்ளார் சோனியா.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ``1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவு காங்கிரஸ் மிகப் பெரும் வெற்றி பெற்று, ராஜீவ் காந்தி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அனைத்து அதிகாரங்களும் அவர் கையிலிருந்தது. ஆனால் அவர் அதை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தவில்லை. ராஜீவ், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்களிடம் பயத்தையோ, அச்சுறுத்தலையோ ஏற்படுத்தவில்லை.

Rajiv 75 Function
Rajiv 75 Function
Twitter/@INCIndia

அமைப்புகளின் சுதந்திரத்தை அழிக்கவில்லை, தன் மீதான மாற்றுக் கருத்துகளை நசுக்கவில்லை மற்றும் ஜனநாயக மரபுகளுக்கு அபாயகரமான சூழலை உருவாக்கவில்லை. 1989-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போதும் மக்கள் அளித்த தீர்ப்பை ராஜீவ் தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டார்.

கர்ணனென தீரம்சூட வேண்டும், காங்கிரஸின் அடுத்த தலைவன்!

இந்தக் கால தலைமுறையினருக்கு நான் ஒரு விஷயத்தைச் சொல்ல நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் மிகப்பெரும் கட்சியாக இருந்த போதிலும் அதைப் பயன்படுத்தி அவர் ஆட்சிக்கு வர நினைக்கவில்லை. ராஜீவ் காந்தியின் நேர்மை, அவரை தவறான வழியில் செல்ல அனுமதிக்கவில்லை.

Sonia Gandhi
Sonia Gandhi
Twitter/@INCIndia

ராஜீவ் காந்தி உருவாக்கிய மதிப்புகளை தொடர்ந்து நிலை நிறுத்தவும், அதை அழிக்க நினைக்கும் சக்திகளை எதிர்கொள்வதற்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அரசியலில் ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்க முடியாது. ஆனால் பிரிவினைவாதிகள், சமுதாயத்தின் இயல்பை மாற்ற நினைப்பவர்கள், அரசியல் சிந்தனையை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.